மட்டு- பாலையடிவட்டை பொதுச் சந்தை மக்கள் நன்மை கருதி மீண்டும் செயல்படவுள்ளது!!

மட்டு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட பாலையடிவட்டையில் அமைந்துள்ள பொதுச் சந்தையானது புதிய கட்டிடத் தொகுதியில் எதிர்வரும் வியாழக்கிழமை (13/09/2018) அன்று முற்பகல் 08:30 மணிக்கு மீளவும் இயங்கவுள்ளது. 

பிரதேசம் வாழ் பொது மக்களின் வேண்டுகோளிற்கமைய அவர்களின் நன்மை கருதி போரதீவுப்பற்று பிரதேச சபை, பிரதேச செயலகம், சமூர்த்தி சங்கம், ஏனைய பிரதேச அமைப்புகள் சங்கங்கள், பொதுமக்கள் இணைந்து இந்த பிரசித்தி பெற்ற மிகவும் பழமைவாய்ந்த சந்தையினை மீளவும் செயற்படுத்தும் நோக்கில் கடந்த செய்வாயன்று (10/09/2018) மாட்டுச் சாணங்களாலும் புதர் பற்றைகளாலும் சூழ்ந்திருந்த புதிய சந்தைக் கட்டிடத் தொகுதியினை இணைந்த சிரமதானமொன்றின் மூலம் சுத்தம் செய்திருந்தார்கள்.

இந்த சந்தையானது கிட்டத்தட்ட 1978ம் ஆண்டு சூறாவளிக்கு முன்னர் இருந்தே இயங்கி வந்துள்ளதெனவும் பின்னர் 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட இடப்பெயர்வின் பின்னர் இயங்காமல் இருந்து பின்னர் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான ஒப்பந்த காலப்பகுதியில் மீண்டும் கிழமைச் சந்தையாக இயங்கியது இந்தச் சந்தையில் தமிழ் மக்கள் மட்டுமல்ல அனைத்து இன மக்களும் குறிப்பாக சிங்கள மக்களும் வந்து பொருட்களை கொள்வனவு செய்வது குறிப்பிடத்தக்கது! அந்தச் சந்தையும் மீண்டும் இடம்பெற்ற யுத்த சூழலால் தடைப்பட்டது காரணம் அவ்விடத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தமை இன்றும் உள்ளமை; இதுவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாலையடிவட்டை பொதுச் சந்தை இயங்க முடியாமைக்கு முக்கிய காரணமாகியது.

அதனைத் தொடர்ந்து வெல்லாவெளி பிரதேச சபைக்கே உரித்தான மாற்றுக் காணியில் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு இரண்டு மூன்று தடவைகள் சந்தையினை வழமைபோல் இயங்க வைக்க பிரயத்தனம் மேற் கொண்டும் பலனளிக்கவில்லை காரணம் பழைய இடம் மாற்றம் பெற்று புதிய இடத்தில் அமைந்தமை அடுத்து முன்பு போலல்லாது நகருக்கான போக்குவரத்து வசதிகள் ஏராளமாக காணப்படுவதாலும் குறைந்தது ஒரு
அரச வங்கியாவது அவ்விடத்தில் அமைந்திருக்காமை போன்ற பல சூழல் காரணங்கள் என வகைப்படுத்தலாம் என பிரதேச மக்கள் கருத்து தெரிவித்தார்கள்.

இருந்தும் தற்போதைய பிரதேச சபை தவிசாளர் திரு.ரஜனி மற்றும் பிரதேச செயலாளர் மற்றும் கிராம சங்கத் தலைவர்கள், நலன் விரும்பிகளின் பகீரத முயற்சியால் மீண்டும் புதுப் பொலிவுடன் பாலையடிவட்டை பொதுச் சந்தையினை இயங்க வைக்க தீர்மானிக்கப்பட்டு அதற்கான பணிகளும் நிறைவுற்ற நிலையில் வியாபாரிகள் மற்றும் மக்களை சந்தைக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (13/09/2018)அன்று ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறார்கள்.

No comments

Powered by Blogger.