’விஷத்தில் குழந்தைகள் உயிர் தப்பிவிடுவார்கள் என நினைத்து கழுத்தை நெரித்து கொன்றேன்’ - அபிராமி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!!

பெற்ற தாயே தன் இரு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல், எங்கே அவர்கள் விஷத்தில் சாகாமல் உயிர்தப்பிவிடுவார்களோ என்று நினைத்து அக்குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொன்ற கொடூர சம்பவம் குன்றத்தூரில் அரங்கேறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

சுந்தரம் என்ற இளைஞருடனான நெருக்கத்தின் காரணமாக பாலில் விஷம் கலந்து தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு காதலன் சுந்தரத்துடன் திட்டமிட்டபடி தப்பி ஓடிய அபிராமியை நாகர்கோவிலில் இன்று போலீசார் கைது செய்தனர். நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு தப்பிச்செல்லும் முயற்சியில் இருந்தபோது கைதான அபிராமியிடம் சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறர் விஜய் (30). சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீட்டு லோன் பிரிவில் இவர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அபிராமி (25). இத்தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில், வங்கியில் திடீரென அமைந்துவிட்ட இரவுப்பணி முடிந்து நேற்று காலையில் விஜய் வீட்டிற்கு வந்தபோது, அங்கே தன் இரு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தனர். மனைவி அபிராமியை காணவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போனை அவர் எடுக்கவில்லை. இதையடுத்து சந்தேகம் அடைந்த விஜய் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே, குன்றத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அபிராமிக்கு நெருக்கமான சுந்தரம் என்பவரை விசாரித்தபோது, கணவன் மற்றும் குழந்தைகளுக்கு பாலில் விஷம் வைத்து கொலை செய்ய அபிராமி திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. விஜய் அன்று இரவு வராததால் குழந்தைகளுக்கு மட்டும் விஷம் கலந்த பாலை கொடுத்து அவர்கள் இறந்துவிட்டனர் என்று தெரிந்ததும் வீட்டில் இருந்து கோயம்பேடு சென்று அங்கிருந்து நாகர்கோவிலுக்கு தப்பிவிட்டார் என்று தெரியவந்தது.

இதன்பின்னர் தனிப்படை போலீசார் நாகர்கோவிலுக்கு நேற்று இரவு சென்றனர். சென்னையில் கைதான சுந்தரத்தையும் உடன் அழைத்துச்சென்றனர். காதலன் மூலமாக அபிராமியை பிடிக்க வலை விரித்தனர் போலீசார். அதன்படி, செல்போன் சிக்னலை வைத்து தேடியதில் அபிராமி பேருந்து நிலையத்தில் பிடிபட்டார். நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்கு தப்பி ஓடும் முயற்சியில் இருந்த அபிராமியை, கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குன்றத்தூர் போலீசாரின் விசாரணையில், ‘’பாலில் விஷம் கலந்து கொடுத்த பின்னர் குழந்தைகள் உயிர் தப்பிவிடுவார்கள் என நினைத்து அவர்களின் கழுத்தை நெரித்து கொன்றேன். கணவரையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தேன். அன்று இரவு அவர் வங்கியில் பணிச்சுமையினால் வராததால் உயிர் தப்பிவிட்டார். சுந்தரத்துடன் கேரளாவுக்கு சென்று அங்கேயே ஏதாவது கடை வைத்து வாழலாம் என்று திட்டமிருந்தேன். அதற்குள் போலீசில் சிக்கிக்கொண்டேன்’’ என்று அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

நன்றி:-நக்கீரன்

No comments

Powered by Blogger.