முதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா?!


கடந்த 23.09.2018 அன்று நெய்னாகாடு, குடுவில் பிரதேசத்தில் சீமெந்து குழாய்களை கொண்டு கிணறு அமைக்கும்போது வேலைக்கு அமர்த்திய முதலாளி ஜலீல் (சம்மாந்துறையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்) மற்றும் எக்க்ஷவேட்டர் இயக்குனர்களது (15, 16 வயது சிறுவர்கள்) கவனயீனத்தால் கழுத்து துண்டாடப்பட்டு உயிரிழந்த ஏழைத் தொழிலாளியான படுவான்கரை பெருநிலம் முனைக்காடு கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த சீனித்தம்பி சந்திரசேகரம் என்பவரது முதலாவது வழக்கு விசாரணை இன்று (10.10.2018) புதன்கிழமை, அம்பாரை நீதவான் நீதி மன்றத்தில் இடம்பெற்றது.

 தமண பிரதேச பொலிஸாரே இவ் வழக்கினை தாக்கல் செய்திருந்த போதும் குறித்த தொழிலாளியின் உயிரிழப்புச் சம்பவம் இடம் பெறுவதற்கு காரணமான குற்றவாளிகளை தண்டனையில் இருந்து தப்பிக்கும் முகமாகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றதென இன்றய நீதிமன்ற நடவடிக்கை மூலம் எம்மால் உணர முடிந்தது. குறித்த வழக்கை விசாரணைக்கு நீதவான் அழைத்த சமயம் சம்பவம் இடம்பெற காரணமானவர்களான ஜலீல் மற்றும் எக்க்ஷவேட்டர் இயக்குனர்களான 15, 16 வயது சிறுவர்களையும் பொலீசார் சாட்சிகளாகவே வழக்கு விசாரணைக்கு அழைத்திருந்தனர். எனவே, இவ் வழக்கிற்கு எதிராளி யார்? ஏன் இத்தகு தொய்வுத்தன்மையான வழக்கினை பதிவு செய்துள்ளார்கள்? ஜலீல் என்பவரது பண பலத்திற்கும், அதிகார பலத்திற்கும் நீதித்துறை வளைந்து கொடுக்கிறதா? என இன்றயதினம் வழக்கு விசாரணையின்போது எம் மனதில் எழுந்த பல கேள்விகளாகும்.

வழக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு, சட்ட வைத்திய அறிக்கை இன்னும் நீதவான் நீதிமன்றுக்கு கிடைக்கப்பெறவில்லை எனக் கூறி வழக்கு விசாரணையானது எதிர்வரும் 09.11.2018 அன்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பணபல ரீதியாகவும், அதிகார பல ரீதியாக பின்தங்கிய நிலையை உடையது உயிரிழந்தவரின் குடும்பம் அந்தவகையில் பல தன்னார்வ சமூக சேவையாளர்களது ஆலோசனையினையும், ஒத்துழைப்பினையும் உதவியினையும் பெற்றே இவ் வழக்கினை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக ஒரு நியாயமான நீதியினை பெற்றுக்கொடுப்பதற்கே நாம் விரும்பினோம் இருந்தும் இவ் வழக்கு விசாரணைக்கு சிலர் மறைமுகமாகவும் நேரடியாகவும் தமது ஆலோசனைகளையும், உதவிகளையும் எமக்கு வழங்கியிருந்தாலும் அக் குடும்பத்திற்கான நீதி கிடைப்பதற்கு எமது சமூகம்சார்ந்த சட்ட வல்லுனர்களது ஆலோசனைகளும் உதவிகளும் தேவை என்பதே எமது ஆழமான கருத்தாகும். எது எவ்வாறிருப்பினும் பாதிக்கப்பட்ட அந்த ஏழைத் தொழிலாளிக்கான நியாயம் கிடைக்கவேண்டும்.

No comments

Powered by Blogger.