மட்டு- முனைக்காடு சாரதா வித்தியாலயத்திற்கு தமிழ் ஓசை ஊடக அமையத்தினால் தரம் 5 மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்கள் கையளிப்பு!!

மட்டு- கொக்கட்டிச் சோலை முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள சாரதா வித்தியாலயத்துக்கு எமது தமிழ் ஓசை ஊடக அமையம் மற்றும் மாருதம் இணையத்தள கல்வி சார் ஊடகப் பிரிவினர் கள விஜயம் ஒன்றை இன்று அதாவது 30/11/2018 வெள்ளிக்கிழமை மேற் கொண்டிருந்தனர்.

குறித்த பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்கவிருக்கும் மாணவர்களுக்கான பயிற்சி பாடப் புத்தகங்கள் சிலவற்றினை பாடசாலை அதிபர் திரு.ரவிசங்கர் அவர்களிடம் தமிழ் ஓசை ஊடக அமையத்தின் உறுப்பினர் திரு.கமல்தாஸ் அவர்களினால் கையளிப்பு செய்யப்பட்டது.

தொடர்ந்தும் பாடசாலைக்கான வளங்கள் மற்றும் குறைபாடுகள் பற்றி வினவியபோது... பாடசாலை அதிபர் நீண்ட பெரு மூச்சொன்றினை உதிர்த்து விட்டு உரையாடலை தொடர்ந்தார்.

தரம் ஐந்தோடு மட்டுப்படுத்தப்பட்ட பாடசாலையாக காணப்பட்டாலும் மாணவர்களது கல்வி மற்றும் தேர்ச்சி நிலைகள் மிக சிறப்பாக உள்ளதாகவும் தான் அதிபராக பொறுப்பேற்று சுமார் ஏழு மாதங்களே ஆன நிலையில் அவரால் இனங்காணப்பட்ட அவர் எதிர் நோக்கிய சவால்கள் ஏராளம் அதில் மிக முக்கியமானது பாடசாலை அபிவிருத்திக்குழு அதில் சமூகமளிக்கும் பங்களிப்பு செய்யும் தாய் தந்தையர்கள் மிக மிக குறைவு எனவும் எந்தவொரு ஒன்று கூடல் நிகழ்வுகளுக்கும் அவர்களை பங்குபற்ற வைப்பதென்பது கல்லில் நார் உரிக்கும் பணி போன்று உள்ளதாகவும் அவர்களுடைய பங்களிப்பு ஒன்றே தற்போதை தேவைகளில் அதி முக்கியமான ஒன்றெனவும் தனது முதன்மையான ஆதங்கமாக வெளிப்படுத்தினார்.

அடுத்த கட்டமாக பாடசாலை கற்றல் நடவடிக்கைக்கான உபகரணங்கள் பற்றாக்குறை மாணவர்களுக்கான மேசை கதிரை முக்கிய பங்கு வகிக்கின்றன பல முறை இது சம்பந்தமாக முறையிட்டும் எந்தவொரு அரச அரச சார்பற்ற சமூக அமைப்புக்களோ கவனத்தில் கொள்ளவில்லையென்பதனை அதிபரின் இருக்கை மேசை தளபாடங்களை கீழே பதிவிடப்படும் படங்களை அவதானிக்கும் போதே அனைவராலும் உணர முடியும்.

அதே வேளை பாடசாலைக்கான சுற்று வேலியின் நிலை மற்றும் பிரதான நுழைவாயிலின் நிலை என்பன எமது கமெராவில் பதிவாகியுள்ள படங்களின் மூலம் அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

பிரசித்தி பெற்ற பாடசாலைகளுக்கே அரச சலுகைகள் அளவுக்கு அதிகமாக கிடைத்துக் கொண்டிருக்கின்றன அவ்வாறான வளங்களை இவ்வாறுள்ள பாடசாலைகளுக்கு வழங்கி மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்தி வளம் மிக்க கல்வியினை வழங்கிட கல்விப் பணிமனை அதிகாரிகள் மற்றும் சமூக சேவைகள் மன்றங்கள் கழகங்கள் ஏனைய உதவும் கரங்கள் போன்ற சமூக அமைப்புகள் முன்வரவேண்டுமென்பதே எமது ஊடகத்தின் விருப்பம்.

தற்போது கல்விசார் பிரச்சினைகளை எதிர் நோக்கும் பாடசாலைகளின்பால் எமது ஊடக அமையம் பார்வையினை திருப்பியுள்ளது எனவே இனி வரும் காலங்களிலும் இவ்வாறான கள விஜயங்களை மேற்கொண்டு பல விடயங்களை மக்களுக்கு காண்பித்து நிறைவான கல்வியினை வழங்கிட ஆவன செய்வதே எமது ஊடகத்தின் மேன்மையான நோக்கமும் கூட.

No comments

Powered by Blogger.