மனம் எனும் பாத்திரத்தை காத்திரமாக்கி கடவுளை அடைவோம்!!

“உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்” எனும் அகத்தியப் பெருமானின் திரு வாக்குக்கமைய தற்கால உலகம் கற்கால யுகத்தை மறக்கச் செய்து புதுமைகளால் மெருகூட்டப்பட்டு மாபெரும் சவாலினை எதிர் கொண்டவாறு பயணித்துக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம். இவ்வாறு வாழ்க்கை எனும் பெரும் சவாலினை எதிர் கொள்ள முடியாமல் உலகம் வாழ் மக்கள் மன அழுத்தம் அதிகரித்து வாழ்வியல் பாதிக்கப்பட்டு என்ன செய்வதென்றே தெரியாத நெருக்கடி மிகுந்த நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது கண்கூடு. இவ்வாறு மக்கள் பாதிப்புற்று அல்லல் படுவதனை உணர்ந்த பகவான், ஆன்மீக தர்மத்தை போதித்து மக்களின் நலமான வாழ்வின் உய்வுக்காக காலத்துக்கு காலம் ஏதோ ஒரு வடிவில் மண்ணுலகத்திற்கு கடமையாற்றவென அவதரித்து தர்மத்தை போதித்து தர்மவான்களாக மாறுவதற்கும் முக்திப் பேற்றினை அருளுவதற்காகவும் ஆன்மீக அற நெறியினை பாரபட்சம் இன்றி பொதுவானவர்களாக இருந்து வழி காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் மண்ணுலக மக்களின் அவலக் குரலுக்கு இரங்கிய பகவான் மூல குருவான அகஸ்தியப் பெருமானின் ஆசியோடு, கண்ணையா யோகி மகரிஷியின் சீடர் பகவான் முருகேசு சுவாமிகளாக அவதரித்தார். அவரது அவதார நோக்கத்தினை அவரது சீடர் மகா யோகி எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகள் தனது குரு நாதரின் பணிப்புரையின் பேரில் எதனையெல்லாம் முருகேசு சுவாமிகள் செய்திட எண்ணினாரோ அத்தனை பணிகளையும் கடந்த பதினான்கு ஆண்டுகளாக பல சவால்களுக்கு மத்தியில் எந்த பிரதி பலனையும் எதிர் பார்க்காது தன் குருநாதர் மேல் கொண்ட அசையாத பக்தியினால் பிரம்ம ஞானியாக பிரபஞ்ச சக்திகளை தன்னுள் கண்டுணர்ந்து தான் வேறு கடவுள் வேறல்ல என்னும் நிலையடைந்து தன்னையும் தன் சக்திகளையும் வெளியில் காண்பிக்காது தன்னை அண்டிவரும் பக்தர்களது சாபங்களையும் பாவங்களையும் நீக்கி ஞான உபதேசம் அருளி ஞான வழிகாட்டி வருகிறார்; இருந்தும் இப்பேற்பட்ட ஞானத் தந்தை, ஞான வழிகாட்டியினை மக்கள் இனங்காணத் தவறித்தான் போகிறார்கள். காலமும் சூழலும் அவ்வாறு அமைந்ததே இதற்கு காரணம் அன்றி அவர்களை குறை கூறிட முடியாது!

“மந்திரங்களில் நான் காயத்திரி” என்று பகவான் ஸ்ரீ கிருஸ்ணர் அருச்சுனனுக்கு பகவத் கீதையினை உபதேசிக்கும் போது கூறுகிறார். அந்த மகா சக்தி பொருந்திய காயத்திரி மந்திரத்தினை உலகுக்கு வழங்கியவர் விடி வெள்ளி நட்சத்திரமாக வீற்றிருக்கும் விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இருந்தும் தவறானவர்கள் அம் மந்திரத்தினை தவறான காரியங்களுக்காக பயன்படுத்தியமையினால் அதன் சக்தி பயன்படாதவாறு சாபம் இடப்பட்டது. ஆனால் மக்களின் பாவ விமோசனம் கருதி கலியுகத்தில் அந்த காயத்திரி அன்னையே முருகேசு சுவாமிகளாக அவதரித்து இம் மகா மந்திரத்தின் சாபம் நீக்கி உலகுக்கு மீளவும் அருளினார். இவ்வாறு சக்தி வாய்ந்த அதிர்வலைகளைக் தன்னுள்ளே கொண்டுள்ள மகா மந்திரத்தினையும் அதன் சக்திகளையும் போதித்து, மனிதன் வாழ்வின் துன்பங்களைக் கடந்து வெற்றி பெற்று உயர் பேரின்பமாம் இறையின்பத்தினை அனுபவிக்க செய்திட பல வகையிலும் பல ஆன்மீக அரிய இரகசியங்களை நேரடியாக இன்றுவரையிலும் பொது நலம் கருதி உலகுக்காக, உலக மக்களின் சாந்தி சமாதானம் நிறைந்த பெரு வாழ்வுக்காகவும் “ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி” பலரின் ஆன்மாவுக்கு திரியேற்றி மிளிர வைத்துக் கொண்டிருக்கிறார் மகா யோகி ஆன்மீகக்குரு திரு.எஸ். புண்ணியரெத்தினம் சுவாமிகள்.

சுவாமிகளால் அருளப் பட்ட ஞான உபதேசங்கள் சிலவற்றின் தொகுப்பினை தற்போது காணலாம்….

மனிதர்களை அவர்களது செயல்களின் மூலமும் தரம் பிரித்து அறிய முடியும். ஆனால் தற்போது மக்கள் மக்களாகவே பல விடயங்களை தீர்மானித்து செயல்படுகிறார்கள். அந்த செயலால் மகிழ்ச்சி அடையும் போது குதூகலிக்கிறார்கள், அதே போல துன்பம் வரும் போது துக்கம் கொள்கிறார்கள்; அதே கண்கள், காதுகள், மூக்கு, வாய் என உடலின் அனைத்து அவயங்களும் அந்தந்த இடத்தில்தான் உள்ளது. அப்போது இந்த இன்பம்- துன்பம் எங்கே நிகழுகிறது? என்று சற்றே ஆழ்ந்து ஆராய்வோமானால் பல அரிய விடயங்கள் புலனாகும். ஏனெனில் மனிதப் பிறவிகளுக்கு மாத்திரமே சிந்திக்கும் தன்மை, பண்புகள் இயற்கையாக அமைந்துள்ளது. வேறெந்த உயிரினங்களுக்கும் இவ்வாறு சிந்திக்கும் தன்மை வழங்கப்படவில்லை; ஒவ்வொரு மனிதர்களும் வாழும் சூழலுக்கும் அவர்களது மன நிலைகளுக்கும் பெரும் தொடர்பு உள்ளது. ஏனெனில் மனிதன் ஏதாவது ஒன்றினை சார்ந்துதான் வாழ வேண்டும். அவ்வாறு அவர்கள் சார்ந்து வாழும் போது சார்ந்து வாழும் பொருட்களின் தன்மை, குணம், பண்பு அவர்களின் மன நிலையில் தாக்கம் செலுத்தி அந்தப் பொருள்களின் தன்மையினை ஒத்தவர்களாகவே வாழ்கிறார்கள். சூழலுக்கு ஏற்றவாறு உடல் அமைப்புகள் தோற்றம் அனைத்தும் அமைகிறது. வெப்ப வலயத்தில் அதற்குண்டான உணவுகள் இயற்கையாகவே உருவாகிறது; அதேபோல குளிர் வலயத்தில் அந்த சூழலுக்கு உண்டான உணவு வகைகள் உருவாகிறது. இப்படி எங்கெங்கு என்னென்ன தேவையோ அந்தந்த விடயங்கள் அங்கங்கே உள்ளன. ஆனால் எதனை எடுத்தால் நன்மை வரும் எதனை எடுத்தால் தீமை வரும் என்று பகுத்துணரும் தன்மை ஒவ்வொருவரின் மனதுக்கும் வழங்கப் பட்டுள்ள புத்தி எனப்படும் பேராயுதமாகும். எனவே தகுந்தவாறு தகுந்த இடத்தில் பிரயோகித்து வெற்றியடைவது ஒவ்வொருவரின் ஆழ்ந்து சிந்திக்கும் ஆற்றலில்தான் பொதிந்து காணப்படுகிறது.

வெறும் காற்றை சுவாசிக்கிறோம் ஆனால் அந்தக் காற்றின்றி எம்மால் உயிர் வாழவே முடியாது என்பதனையும் நன்கு உணர்வோம். இந்த உணர்வு யார்? இந்த உணர்வு நிலை எப்போது எங்கு எவ்வாறு ஏற்படுகிறது? இது உடல் சார்ந்ததா அல்லது உளம் சார்ந்ததா? எனும் வினாத் தொடர்களை மனித சமுதாயம் தனக்குள்ளேயே கேட்க முனையவில்லை. ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்ற அடிப்படையிலேயே வாழ்ந்து வருகிறார்கள். பணக்காரன் ஒருவன் தன் வீட்டுக்குள்ளேயே செல்வங்களை வைத்து பூட்டி விட்டு வராந்தாவில் பட்டினி கிடந்து சாவதைப் போல், தனக்குள்ளேயே விடைகளை வைத்துக் கொண்டு தேடி கண்டெடுக்க முடியாமல் மனிதர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

உடலைத் தாங்கிக் கொண்டிருப்பது உயரிய ஆன்மா; அதே போல பல உடல்களை தாங்கிக் கொண்டிருப்பது பூமி. அந்தப் பூமியை யார் தாங்குகிறார்கள்? ஒரு வீடு கட்டுவதென்றால் அஸ்திவாரம் முக்கியம் அந்த அஸ்திவாரத்தை பலப் படுத்தினால்தான் தொடர்மாடிகள் பல என மேலே உறுதியாக கட்டி முடிக்கலாம். அது போலதான் ஆன்மாவை பலப் படுத்தினால் வீடு எனும் உடல் வலிமையாக இருக்கும்; நோய்த் தாக்கங்கள் இல்லாமல் தேக ஆரோக்கியம் நிறையும்; தேகம் ஆரோக்கியமாக அமைந்தால் செயல்களும் ஆரோக்கியமாக முழுமை பெறும்; இந்த முழுமைதான் இறை எனப்படும் புனிதம். இங்கே அஸ்திவாரம் எனும் மனத்தினை ஞான குரு ஒருவரின் தீட்சை பெற்று அவரின் வழி காட்டுதலில் தியான ஜெபங்கள் இறை பிரார்த்தனைகள் கூட்டு வழிபாடுகள் என இடைவிடாது பின்பற்றி வருவோமால் தீய எண்ணப் பிரவாகங்கள் முற்றிலும் நீங்கி மனம் தூய்மையாகி பலம் பெறும். அந்த மனோ பலம் மூலம் இன்னும் ஆழமாக தங்கு தடையின்றி தன் தேடல்களை விரிவடைய செய்து பல வினாக்களுக்கான விடையினை தன்னகத்தே கண்டு அதனை தகுந்த முறையில் செயல்படுத்தி குறிக்கோளில் வெற்றியடைய முடியும். இவ்வாறு வெற்றியடைந்த மனிதர்களைத் தேடி வெற்றியடையவென வாழ்வில் விரக்கியடைந்தவர்கள் தோல்வியுற்றவர்கள் என ஏராளமானவர்கள் வருவார்கள். தானும் வெற்றியடைந்து தன்னை அண்டி வருபவர்களையும் வெற்றியடையச் செய்யலாம்.

இவ்வாறு தன் மனதினை கண்டுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். பிரபஞ்ச சக்தியானது ஒடுங்கி மனித மனதாக இருந்து, உடல் எனும் உலகத்தினுள் ஆன்மாவாக, ஆன்மாவை அறிய மனமாக இருந்து இயங்குவதனையும், அந்த ஒடுங்கியுள்ள இறைத் தன்மையினை தன்னுள் விரிவடையச் செய்து பிரபஞ்ச சக்தியோடு இணைதலே ஜீவப் பிரம்ம ஐக்கிய நிலை என்கிறார்கள்.

கடலில் அலைகள் ஓயாது எழுவது போல மனித மனதிலும் இந்த பிரபஞ்சத்தில் அலைக்கழிக்கப்படும் அலைகளும் ஓயாமல் தாக்கத்தை செலுத்துகின்றது. ஆனால் கடற் கரையினை கடந்து ஆழ் கடலுக்குள் சென்றால் எவ்வாறு அலையற்ற கடலினை காண முடியுமோ, அது போல எண்ண அலைகள் அலைக்கழிக்கும் மேல் மனத்தினை கடந்து பயணித்து ஆழ் மன எல்லைக்குள் சென்று விட்டால் தளம்பலில்லாத நிலையேற்படும். அமைதி நிலவும்; எண்ண ஓட்டம் மௌனிக்கப்பட்டு தேடலுக்கான விடைகளை மிகத் தெளிவாக கண்டெடுக்கலாம்; கண்டெடுத்த விடைகளை தீர்வுகளுக்காக பயன்படுத்தலாம்; இங்கே எண்ணத்தினை குவிக்கும் ஆற்றல் வசப்படும். ஒரு கணுவில் கட்டிய மாடு எவ்வாறு ஒரே வட்டத்துக்குள் சுற்றிச் சுற்றி நிற்கிறதோ, அதே போல ஆன்மா எனும் கணுவினை மனம் சுற்றிச் சுற்றி நோட்டமிடும். உதாரணத்திற்கு செயற்கைக் கோள்கள் எவ்வாறு விண்ணில் சென்று ஒரே இடத்தை சுற்றிச் சுற்றி வலம் வந்து விண்வெளி ஆராய்ச்சியினை மேற் கொண்டு கட்டுப்பாட்டறைக்கு தகவல்களை சீராக வழங்குகிறதோ அதே போல மேல் மனத்தை கடந்து ஆழ் மனம் ஆன்மாவில் லயித்து உடல் சீராக இயங்குவதற்காக மனம் எனும் கட்டுப்பாட்டறைக்கு தகவல்களை வழங்கி செயற்படுத்தும். ஆக விஞ்ஞானம் தொழில் நுட்பம் எனப்படுவது ஆன்மீக செயற்பாட்டின் ஒரு அங்கமாகவே உள்ளது என்பதனையும் நம்மால் உணர முடிகிறது.

இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்து சக்திகளும் அதன் மூலம் உண்டாகிய நன்மை தரும் பொருட்களும் தீமையினை தரும் பொருட்களும் பரந்து கிடக்கின்றன. இவற்றில் எதனை எடுத்தால் நன்மை வரும் எதனை எடுத்தால் தீமை வரும் எனும் பகுத்தறிவு வேண்டுமல்லவா! இந்த பகுத்துணரும் தன்மை அற்ற நிலையைத்தான் பாவம் என்று கூறுகிறார்கள். அதுவே கருமம் எனும் செயலை மனிதனின் மீது திணிக்கிறது. இந்தத் திணிப்பே மனப் பாரத்திற்கு வித்திடுகிறது. மெல்ல மெல்ல சுமை கூடி அளவுக்கதிகமான மனச் சுமை கூடிய மனிதர்கள் ஒன்று தற்கொலை செய்கிறார்கள்; அல்லது சித்தப்பிரம்மை பிடித்து அலைகிறார்கள்; அல்லது இனம் தெரியாத நோய்த் தாக்கத்திற்கு ஆளாகி வேதனைப் படுகிறார்கள். மனிதன் தனக்குத்தானே வேதனையினை உண்டு பண்ணி விட்டு இறைவனைக் குறைகூறுகிறான். நிறைவென்பதனையே பொருட்டாக கொள்ளாமல் குறைகளையே எங்கும் எதிலும் கண்டு இறுதிவரை குறையுள்ளவனாகவே வாழ்ந்து மடிகிறான்; நிறைவான ஆன்மாவான இறையை ஒரு கணம் கூட சிந்திக்க முற்படாமல், தன் தலையில் தானே மண்ணள்ளி போடும் காரியத்தினை செய்கிறான். பிறப்பு இறப்பு எனும் எல்லையினை கடந்து நிலையான மாறாத திகட்டாத பேரின்பத்தினை தன்னுள்ளே காண்பதனை தவற விடுகிறான்; ஒரு மனிதனுக்கு உண்மை நிலை அதாவது புலன் இன்பத்திலிருந்து விடுபட்டு ஆன்ம இன்பத்தை அனுபவிக்கும் நிலை ஏற்படுவதற்கு முன்பு ஐம்புலன்களினால் ஏற்படும் இன்பம் தொடர்ந்தும் நீடித்தால் அது துன்பமாகவும் சலிப்பாகவும் உணரப்படுகிறது ஆனால் அறிவை அறிந்த இன்பம் பூரணமாக எவ்வளவு எவ்வளவு இருந்தாலும் அது சலிப்பில்லாத இன்பமாக இருக்கிறது; இதைத்தான் "நிஷ்டையிலே பெரிய சுகம் பேரின்பம்" இந்த நிலை கைவரப் பெறாதர்கள் "கட்டையிலே போகும் வரை கவலைதான் கூடிவரும்" என மகா ஞானி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்

மனிதனாகப் பிறப்பெடுத்தவர்களது ஆன்மா என்றாவது ஒரு நாள் முழுமை அடையத்தான் வேண்டும். ஏனெனில் மனிதர்கள் துன்பப்படும் போது அவர்களது ஆன்ம பலம் குன்றி அதர்மம் தலை விரித்தாடும். உதாரணமாக கொலை, கொள்ளை, பசி, பஞ்சம், பட்டினி, யுத்தம், நோய்கள் என பலவற்றைக் கூறலாம். அப்போது அந்த ஆன்மாவே மனித உருவம் தாங்கி உலகின் துன்பம் நீக்கி தர்மத்தை நிலை நாட்டிட அனைத்து ஆன்மாக்களையும் பலம் பொருந்தியதாக்கிட அவதரித்து வரும். அதைத்தான் கடவுள் என்கிறோம்; இறைவன் என்கிறோம். அந்த அவதாரமே குருவாக நமக்கெல்லாம் நம் அருகிலிருந்தே நம் உள்ளக் கமலத்தை தூய்மையாக்கி, அங்கேயும் வீற்றிருந்து, உள்ளே வெளியே எனும் வேறுபாடின்றி பிரபஞ்சம் முழுவதும் நிறைந்த பிரம்மமாகவும் மனித உடலினுள் சக்தியாகவும் இருந்து செயற்படும் பரமஹம்சராக ஜீவன் முக்தராக மனித குலத்துக்கு மட்டுமன்றி உலகில் பிறப்பெடுத்த உயிர்கள் அனைத்திற்கும் பரமாத்மாவாக  ஞானமெனும் பொக்கிஷத்தை காயத்திரி மந்திரம் மூலமும் உபதேசம் மூலமும் பருகத் தந்து தர்மத்தை நிலை நாட்டி வருகிறார் நம் ஞான குருநாதர் மகா யோகி எஸ். புண்ணியரெத்தினம் சுவாமிகள்.

உடல் அளவில் நாம் சிந்தித்தோமானால் இந்த அவதாரத்தின் பேருண்மையினை எம்மால் ஒரு போதும் உணர முடியாது. ஆழ்ந்த தூய்மையான பக்தியோடு அவர் உபதேசத்தினை பின்பற்றி ஒழுகி வருவோமானால் நிட்சயமாக தன்னையும் தன் அவதாரத்தின் தன்மையினையும் உணர்த்தி நம்மை உயர் பேரின்பமாம் அந்த இறையின்பத்தினை தொட்டு அனுபவிக்கச் செய்து தான் வேறு கடவுள் வேறல்ல எனும் நிலையினை அடைய வைத்து பிறவாப் பேரின்ப நிலையினை நம் குரு நாதர் அவதார புருசர் நல்குவார் என்பதில் எந்த வித ஐயமுமில்லை!

“தர்மம் குன்றி அதர்மம் ஓங்கும் போது நான் அவதரிப்பேன் ” என்று அருச்சுனனுக்கு உபதேசித்தது போல கலியுக வரதனாக கலியுகம் தந்த வரமாக கிடைத்த பெரும் பேறான இந்த பொக்கிசத்தை அதுவும் நம் அருகிலேயே வைத்துக் கொண்டு போலிகளுக்கு அடிமைப்பட்டு ஏமாந்து அல்லலுறுவதைக் காட்டிலும் உண்மை நிலையறித்து உணர்வு நிலையாகிட காலம் தந்த கொடையினை தவறவிடாமல் பயன்படுத்தி இறையின்பத்தை பருகிடுவோம்.

ஓம் நமோ பஹவதே புண்ணியரெத்தினாய!
ஓம் புவனலோக ஈஸ்வராய நமக!!

No comments

Powered by Blogger.