மட்டு- ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் உலக சேமத்துக்கான பௌர்ணமி தின மகா யாகம்!!

ஓம் குருவே துணை! எதிர்வரும் கார்த்திகை மாத பூரணை தினத்தினை முன்னிட்டு வரும் வியாழக்கிழமை (22.11.2018) காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு பெரிய உப்போடை ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் உலக சேமத்துக்கான மகா யாகம் ஒன்று நிகழ்த்தப்படவுள்ளது. இம் மகாயாகத்தினை ஸ்ரீ பேரின்பஞான பீடத்தின் ஸ்தாபகரும், காயத்திரிச் சித்தர் ஸ்ரீ முருகேசு மகரிஷி அவர்களின் பிரதம மாணவருமான சித்தர் மகாயோகி ஸ்ரீ புண்ணியரெத்தினம் சுவாமிகள் நடத்தி வைப்பார். இம்மகாயாகத்தில், ஸ்ரீ பகவான் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் திருப்பாதங்களுக்கு பாதபூசை இடம்பெற்று, பின் சக்திவாய்ந்த காயத்ரி மகா மந்திரம், மகா ம்ருத்யுஞ்ஜெய மந்திரம், தன்வந்திரி மந்திரம் முதலான மந்திரங்களை பக்தர்கள் பாராயணம் செய்ய, இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட மகா சக்தி படைத்த 108 உயிர் மூலிகைகள் கொண்டு மகாயாகம் இடம்பெறும். இம் மகா யாகத்தினைத் தொடர்ந்து ஸ்ரீ சற்குரு புண்ணியரெத்தினம் சுவாமிகளினால் பக்தர்களின் ஆன்மீக தாகத்தினை போக்க ஆன்மீக அருளுபதேசமும், பசிப்பிணியை போக்க அன்னதானமும் இடம்பெறும். பக்தர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு தாங்கள் நோய்ப்பிணி, பசிப்பிணி, கவலை, துன்பங்கள் நீங்கி, நீண்ட ஆயுள் ஆரோக்கியம் ஐசுவரியம் என்பனவற்றுடன் இறையின்பத்தினையும் அனுபவித்துச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

ஓம் நமோ பகவதே புண்ணியரெத்தினாய! ஓம் புவனலோக ஈஸ்வராய நமக!!

No comments

Powered by Blogger.