ஏன் நாம் ஆன்மீகத்தை பின்பற்ற வேண்டும்?!

மனித மனம் என்பதனை குரங்கிற்கு ஒப்பிடுகிறார்கள் ஏன்? குரங்கானது மரத்துக்கு மரம் கிளைக்கு கிளை தாவுவதனாலேயேதான் அவ்வாறு கூறுகிறார்கள் ...
விலங்குகள் பறவைகள் ஏனைய உயிரினங்களை விட மனிதன் தன் கட்டுக்கடங்காத மனதின் செயற்பாட்டுக்கு பழக்கப்பட்டு குரங்காட்டி குரங்கினை "ஆடுடா ராமா ஆடுடா" என்று வித்தை காட்டுவதற்கு பழக்கி வைத்துள்ளதைப் போன்று மனிதர்கள் தன் தன்மை மறந்து செயல் மறந்து விதியின் கைப் பொம்மைகளாக மாறி இன்றுவரை உண்மையினை உணராமல் ஆடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.... பின்னர் இதுதான் இறைவன் வகுத்த விதி என்று தமக்குள்ளே பேசி தீர்மானமும் எடுத்துக் கொள்கிறார்கள் விதி உள்ளதுதான் அதே போல் மதியெனும் அறிவும் உள்ளதனை கருத்தில் கொள்ளாமைக்கான காரணம் என்ன? ஏன் இதனை மனிதர்களால் உணர முடிவதில்லை "காயமே பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா" என்பதனை சற்று ஆராய்ந்தால் உண்மைத் தன்மையினை சற்றே உணரலாம் பலூன் ஒன்றிற்குள் காற்றை ஊதினால் அது விரிவடைகிறது காற்றுப் போனால் சுருங்கி விடுகிறது இவ்வளவுதான் வாழ்க்கையும் ஆனால் அந்தக் காற்றுள்ள போதே எம்மைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி விட்டால் பூர்வ ஜென்ம வினைகளை தூற்றி விடலாமல்லவா! உடலுக்கு மதிப்பா? உயிருக்கு மதிப்பா? உயிர் பிரிந்தால் சவம் என்கிறார்கள் கட்டிப்பிடித்து உறவாடிய மனைவி மக்கள் உறவுகள் சுற்றம் அனைவருமே உயிரற்ற உடலை தொட்டுப் பார்க்கவோ அல்லது அதனை சுடுகாட்டுக்கு கொண்டு செல்லாமல் தம்மோடு வைத்திருக்கவோ ஒரு போதும் சம்மதிக்க மாட்டார்கள் உயிர் எனும் காற்று உள்ள போதுதான் எவருக்கும் மதிப்பு அந்த உயிர் பிரிந்து விட்டால் அவர்கள் வெற்றுடல்தான் அதைத்தான் பூதவுடல் என்கிறார்கள் அந்த உடல் பஞ்ச பூதங்களுக்கு சொந்தமாகிவிடுகிறது ஆக பஞ்ச பூத தத்துவங்களை உள்ளடக்கி பஞ்ச புலன்கள் மூலமாக செயற்படும் சரீரம் என்பதனை மிக இலகுவாகவே உணர்ந்து கொள்ளலாம்.... நிற்க; ஆன்மீகத்தையும் ஆன்மாவினையும் பற்றிய போதிய தெளிவின்மையே மனிதர்களின் பெரும் துன்பத்திற்கு காரணமாக அமைகிறது ஆன்மீகம் என்றால் என்ன? ஆன்மாவை நோக்கிய பயணம் அதற்கென பல பயணப் பாதைகள் உள்ளன அதற்காகவே பல மார்க்கங்கள் உருவானது அதற்கான வழிகாட்டிகளாக பல மார்க்க சீலர்கள் உருவானார்களே தவிர மதக்கலவரங்களையோ மத வெறிகளையோ கேளிக்கை கொண்டாட்டங்களை முதன்மைப்படுத்துகின்ற இறை வழிபாடெனும் ஒரு நடைமுறையினையோ கொண்டு வரவில்லை அவர்கள் ஒவ்வொருவரினது வாழ்க்கை முறைகளை புத்தகப் படிப்பாலோ புராண இதிகாசங்களாலோ நாம் படித்து புரிந்து கொள்ள முடியாது ஏனெனில் நம் அறிவுக்கெட்டியவாறே எம்மால் சிந்திக்க முடியும் அறிவுக்கு மூலமான ஆன்மாவினை கண்டுணர்ந்தால் அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு அசைவுகளின் தன்மைகள் ஏன் எதற்காக அவ்வாறான இன்று நமக்கு முரணான கருத்துக்களை உண்டு பண்ணுகின்ற போல தோற்றமளிக்கும் சில கருத்துக்களை கூறி வைத்துள்ளார்கள் அதன் உண்மைத் தன்மைகள் என்ன என்பன மிகத் துல்லியமாக தெரிந்து விடும் அந்தப் புரிதலையே ஞானம் என்கிறார்கள் விஞ்ஞான ஆராய்ச்சியானது மெய்ஞான ஆராய்ச்சியின் ஒரு பாகமே அன்றி வேறொன்றுமில்லை மெய்ஞானம் மனித வாழ்வின் மனிதப் பிறப்பிற்கே ஆதாரமானது அந்த ஆதாரங்களையே அகழ்வாராய்ச்சி போல மனித மனதினுள் புகுந்து அணு அணுவாக அந்த அணுவுக்குள்ளேயும் புகுந்து ஆராய்ச்சி புரிந்து அகன்று விரிந்த பிரபஞ்ச சக்தியினை தன்னுள் கண்டுணர்வதே ஆன்மீகம் அதை விடுத்து தாடி வளர்த்து காவி உடுத்து உருத்திராட்சங்களை கிலோ கணக்கில் போட்டுக் கொண்டு திருநீற்றுப் பட்டை அடித்துக் கொண்டு வேடமணிந்து தன்னையும் ஏமாற்றி உலகத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் பலர் ஆன்மீகம் அதுவல்ல இவ்வாறானவர்களின் செயலால் மக்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளார்கள்; உலகில் பிறந்துள்ளோம் அல்லது பிறப்பிக்கப்பட்டுள்ளோம் இந்தப் பிறப்பின் பூரணத் தன்மை என்ன? ஏன் பிறந்தோம்? சரி காவியுடுத்து கமண்டலம் எடுத்து குடும்பத்தை பிரிந்து கடமைகளை மறந்து காட்டுக்கு சென்று தாடி வளர்த்தால் கடவுளைக் கண்டு விடலாமா? இமயத்துக்கு சென்றாலும் இமய மலை தவம் செய்வதில்லை நாம்தான் தவம் செய்ய வேண்டும் என்பதனை முதலில் உணர வேண்டும் நாம் நம் அன்றாட கடமைகளை ஆற்றிக் கொண்டே கடவுளை அடைந்திடத்தான் மனிதப் பிறவி கிடைத்துள்ளது உலகத்தில் படைக்கப்பட்ட பொருள்களிளெல்லாம் படைத்தவனின் பேராற்றல் மிகு சக்தி உள்ளது அதனால்தான் அவைகள் உருவமாக உள்ளது அவற்றினை முழுமையாக அனுபவித்திட நம்மால் முடிவதில்லை ஏனெனில் எம் மனதில் தேவையற்ற சிந்தனைகளின் தாக்கங்களால் மனம் ஒரு நிலையற்றுப் போகிறோம் மனக் குழப்பத்துடன் வாழும் இல்லற வாழ்வோ சரி அல்லது உலகில் மனிதர்களால் நுகரப் படும் எந்த விடயத்திலும் முழுமை திருப்தி கிடைத்திடாது; இந்த முழுமையை உணர்ந்து அதை முழுமையாக அனுபவிப்பதற்குத்தான் ஆன்மீக வாழ்வின் தேவையேற்படுகிறது ஆன்மீக வாழ்விலும் முழுமை வேண்டுமல்லவா? அதற்கு வழிகாட்ட ஒருவரின் தேவை ஏற்படும் அந்த ஆன்மாவிற்கான வழிகாட்டியை எவ்வாறு அடைவது? முதலில் நாம் பிறப்பெடுத்ததன் உண்மை அர்த்தத்தினை புரிந்திட எத்தனிக்க வேண்டும் அவ்வாறு எத்தனித்தால்தான் நம் ஆன்மா விழிப்படைய எத்தனிக்கும் அதன் விழிப்பு உணர்வினை செயல்படுத்த ஆரம்பிக்கும் அந்த உணர்வின் செயற்பாடு தகுந்த ஞான குருவினை நாட வைக்கும் அந்த ஞான குருவின் வழிகாட்டுதல்களால் சித்தமனம் தெளிவடைந்து ஞான நிலையான ஆழ் மனதிடம் சரணடைவோம் அதன் வழி காட்டுதல்களின்படி செயல்படுவோம் அவ்வாறு தொடர்ந்தும் செயல்படும் வேளையில் திடீரென ஒரு நாள் மனம் புற உலகின் தாக்கத்திலிருந்து விடுதலையடைந்து பரிபூரணத்துவம் பெறும் அந்த பரிபூரணத்துவம் பேருண்மை ஒன்றினை பறை சாற்றும் தனது ஆன்மீகப்பாதைக்கு வழிகாட்டியாக இருந்த அந்த ஞான குரு வேறு யாருமல்ல தனது ஆன்மாவே என்ற உண்மை புலனாகும் தான் வேறு தன் குரு வேறல்ல எனும் ஞான நிலையேற்படும் பிறப்பின் நோக்கம் அதன் தன்மை குணம் பண்புகள் வெளிப்படும் உடல் எனும் உலகம் மனதின் ஏற்றத் தாழ்வுகள் நீக்கப் பட்டு சம நிலை பெறும் உலகிற்கு பொதுவானவர்களாக தனக்குள்ளேயே தன் தர்மத்தை நிலை நாட்டியவர்களாக உலகில் அனைத்துக் கடமைகளையும் சலனமில்லாது ஆற்றி பேரின்ப நிலையடைவார்கள் இதுவே ஆன்மீகம் தரவல்ல அரிய பொக்கிஷம் இதனை விடுத்து பேரழிவினைத் தரவல்ல பேராபத்து நிறைந்த ஆசைக்கு அடிமைப் பட்டு அதன் வழியில் சென்று துன்பம் நிறைந்த வாழ்வினை வாழ்வதா அல்லது இவ்வாறான இன்ப வழியில் சென்று இன்பமயமான வாழ்வு வாழ்வதா என்று மனிதர்களான நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.