விக்னேஸ்வரனுடன் மேடையில் இருந்தமையினால் அஹிம்சா சமூக நிறுவன ஸ்தாபக உறுப்பினரை அமைப்பிலிருந்து வெளியேறுமாறு அழுத்தம்!!

விக்னேஸ்வரனுடன் மேடையில் இருந்தமையினால் அஹிம்சா சமூக நிறுவன ஸ்தாபக உறுப்பினரை அமைப்பிலிருந்து வெளியேறுமாறு அழுத்தம்

அஹிம்சா சமூக நிறுவனத்தின் இன்றைய செயலாளரும் அதன் ஸ்தாபக உறுப்பினருமான த.வசந்தராஜாவை அமைப்பிலிருந்து வெளியேறுமாறும் இல்லையேல் மக்களைக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாகவும் அவருக்கு அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது

அஹிம்சா சமூக நிறுவனத்தை ஸ்தாபிப்பதில் பெரும் பங்கு வகித்தவரும் அதன் பணிகளை பெருமளவில் முன்னெடுத்துச் சென்றவருமான த.வசந்தராஜா கடந்த ஒக்டோபர் 24 ந்தேதி தமிழ் மக்கள் பேரவையின் பொதுக்கூட்டம் ஒன்றில் மேடையில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் அருகில் இருந்தமையைக் காரணம் காட்டி வசந்தராஜா விக்னேஸ்வரனுடன் அரசியல் செய்கிறார் என அஹிம்சா சமூக நிறுவனத்தின் நன்கொடையாளர்களில் ஓர் அமைப்பான நோர்வே தமிழ் வள ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளதோடு அவரை அமைப்பிலிருந்து வெளியேற்றுமாறு அஹிம்சா சமூக நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அறியமுடிகின்றது. 

அவரை அஹிம்சாவிலிருந்து வெளியேற்றாவிட்டால் அல்லது அவர் தானாக வெளியேறாவிட்டால் வாகனேரியில் அமைக்கப்பட்டு வரும் சுகாதார நிலைய கட்டிட வேலைகளை நிறுத்திவிட்டு வசந்தராஜாவுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகளை அவ்வமைப்பு மேற்கொண்டு வருவதாக அறியக்கூடியதாக உள்ளது.

இது விடயமாக வசந்தராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது 'தான் விக்னேஸ்வரன் ஐயாவோடு மேடையில் இருந்ததும் உண்மை அதனைக் காரணம் காட்டி அஹிம்சா சமூக நிறுவனத்திலிருந்து தன்னை வெளியேறுமாறு அழுத்தம் கொடுப்பதும் உண்மை என்றும் தன்னை வெளியேற்றும் வரை தான் காத்திருப்பதாகவும் அவர் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில் தான் இது வரையில் தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை, அவ்வாறு ஈடுபட நேர்ந்தால் அஹிம்சா சமூக நிறுவனத்தில் இருந்து மட்டுமல்ல தான் பணியாற்றும் செஞ்சிலுவை அமைப்பிலிருந்தும் வெளியேறி விடுவேன் என்றார். 

பொதுப் பணத்தில் ஒருசதமானாலும் அது மக்களுடையது எனக் கருதும், மோசடிகளுக்கு ஒத்துழைக்காத நிரபராதி ஒருவர் தண்டனை அனுபவிப்பதை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என தான் நம்புவதாக கூறியதோடு மேலதிக விளக்கங்களைத்தர தான் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

No comments

Powered by Blogger.