மஹிந்தவின் தரப்பினர் எடுத்த முடிவு! எதிர்க்கட்சியாக இயங்குவதற்கு தயார்!!
கௌரவமாக எதிர்கட்சியில் அமர்வதற்கு தயார் என, பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்பதை சட்டபூர்வமாக, நியாயமான முறையில் நிரூபித்தால் தாம் எதிர்கட்சியில் அமர தயார் என அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 49 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மற்றும் மஹிந்தவின் இடைக்கால தடைக்கு எதிரான மனு ஆகியன இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

குறித்த விசாரணைகளின் நிறைவில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

“பெரும்பான்மை இல்லையேல் அதனை நம்பிக்கையில்லை பிரேரணையொன்றை நிறைவேற்றுவதன் மூலமே நிரூபிக்க வேண்டும். அதனையே நாமும் கோரி நிற்கின்றோம்.

சட்டபூர்வமாக, நியாயமான முறையில் நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றி அதன் மூலம் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்று நிரூபித்தால் நாம் கௌரவமாக எதிர்கட்சியில் அமர்வோம்.

அதைவிடுத்து அலரி மாளிகையின் தூண்களை பற்றிக் கொண்டு செல்ல மாட்டோம் என அழுது அடம்பிடிக்க மாட்டோம் என்ற வாக்குறுதியை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக வழங்கி வருகிறோம்.

இந்த 122 பாலர் பாடசாலை சிறார்களுக்கு உரிய முறையில் நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள தெரியாவிடின் அதற்கு நாம் என்ன செய்வது?

இந்நிலையில், ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில், அவர்கள் 113 அல்ல ஜனாதிபதி கூறியது போல 225 பெரும்பான்மையை நிரூபித்தாலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.