கரும வினைகளைக் களைவோம்! காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்!!

காலத்தின் தேவை...... கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்...

2019ம் ஆண்டு வருடப்பிறப்பினை வரவேற்குமுகமாக கடந்த 01.01.2019 அன்று மட்டக்களப்பு ஸ்ரீ பேரின்பஞான பீடத்தில் இடம்பெற்ற காயத்திரி மகாயாகத்தினைத் தொடர்ந்து பீடத்தின் குரு முதல்வர் சித்தர் மகாயோகி ஸ்ரீ புண்ணியரெத்தினம் சுவாமிகள் பக்தர்களுக்கு ஆற்றிய அருளுபதேசத்திலிருந்து தொகுக்கப்பட்டது. 

நாம் இன்று கலியுகத்தின் இறுதிக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 2019ம் ஆண்டானது தர்ம ஆண்டாக மலரவிருக்கின்றது, ஆனாலும் கலியானது 2035ம் ஆண்டுவரை தாக்கம் செலுத்தும் எனவும் அதிலிருந்து மேலும் 15 ஆண்டுகளுக்கு கலி (துன்பம்) செயலற்று தாக்கம் ஏற்படுத்தாது இருக்கும்; அதன் பின்னரே பூரணமான சத்திய யுகம் மலரும் எனவும் சித்தர்கள் மகரிஷிகள் தியானத்தின் மூலம் அறிந்து தங்களை அண்டிவரும் பக்தர்களுக்கு பகிரங்கமாக உரத்துக் கூறவும் தவறவில்லை. தருமம் குன்றி அதர்மம் ஓங்கும்போது அதர்மத்தினைக் அழித்து, நல்லவர்களை காக்கவும் தருமத்தினை நிலைநாட்டவும் நான் அவதரிப்பேன் என ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையில் கூறியுள்ளார். 

இங்கு அதர்மம் எங்கு எவ்வாறு ஓங்குகிறது, அதனை கிருஷ்ணபரமாத்மா எவ்வாறு அழித்து தருமத்தினை காக்கின்றார் என்ற சூட்சும இரகசியத்தினை புரிந்துகொண்டோமானால் மிக இலகுவாக நாமும் இப்பிறவிப் பெருங்கடல் நீந்திப் பிறவாப் பேரின்ப நிலையான இறைநிலையினை அடையலாம். சித்திபெற்ற சித்தபுருசர்கள், யோகிகள், மகரிஷிகள் அனைவரும் இச் சூட்சும இரகசியத்தினை அறியப் பெற்றவர்கள்; யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என எவ்வித சுயநலமுமின்றி இவ்வரிய இறை சூட்சும இரகசியத்தினை தம்மை அண்டிவரும் பக்தர்களுக்கு வாரி வழங்கினார்கள், வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். நாமும் தகுந்த குருவினை அண்டி எமது மனமெனும் பாத்திரத்தினை தயார்ப்படுத்திக் கொண்டோமானால் அச்சூட்சும இரகசியத்தினை அறியப்பெற்று திகட்டாத மாறாத பேரின்பமான இறையின்பத்தினை சுவைத்து அந்த இறவனுடன் இரண்டறக்கலந்து மனித உருவில் வாழும் கடவுளாக வாழ்ந்து முக்திப் பேற்றினையும் பெறலாம். அவ்வாறில்லாது விடின் குறைந்தபட்சமாக மனிதனை துன்பப்படுத்தும் விடையங்களான நோய்நொடி, வறுமை, சாக்காடு, மன நிம்மதியின்மை, விபத்துக்கள், மற்றும் இயற்கைப் பேரிடர்களிலிருந்து காப்பாற்றப்பட்டு அமைதியாக மகிழ்ச்சியாக நிம்மதியாக வாழலாம். எனவே, மனிதன் இறைநிலை அடைய அல்லது நிம்மதியான வாழ்வினைப் பெற மிகவும் முக்கியமானது மனமெனும் பாத்திரத்தினை தயார்ப்படுத்தல், அதன்மூலம் இறைவனின் சூட்சும இரகசியத்தினை உணர்தல் என்பனவாகும். இவற்றில் மனத்தினை பக்குவப்படுத்திக் கொண்டாலே நாம் இன்று அனுபவிக்கும் பிரச்சனைகள், சிக்கல்கள், நோய்கள், வறுமை சாக்காடு என அனைத்துவிதமான விடையங்களுக்கும் தீர்வினை பெற்றுக்கொள்ளலாம்.

இனி எவ்வாறு மனமெனும் பாத்திரத்தினை தயார்ப்படுத்துவது, மனதினை பக்குவப்படுத்துவது என பார்க்கலாம்.

கடந்த யுகங்களிலெல்லாம், நாடாளும் மன்னருக்கு சிக்கல்கள் ஏற்படும் போதும், நோய், வறுமை, பஞ்சம், பட்டினி, இயற்கை சீற்றங்கள் என மக்கள் துன்பப்படும்போதும் சித்தர்கள் மகரிஷிகள், மன்னனையும் மக்களையும் தியான ஜெபங்களில் ஈடுபடுத்தி, தான தருமங்கள் செய்யவைத்து, யாகங்கள் யக்‌ஞங்கள் செய்து மன்னனதும் மக்களதும் சிக்கல்களை தீர்த்ததாக வரலாறுகளின்மூலம் அறிந்திருப்பீர்கள். எவ்வாறு தியான ஜெபங்கள், தான தருமங்கள் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் என நீங்கள் வினவலாம். ஜெபதியானங்கள் மன ஓட்டத்தினை குறைக்கவல்லது. மன ஓட்டம் குறைந்ததும் ஐம்புலன்களும் அடங்கும், புத்தி வேலை செய்யும். புத்தி ஆழ்மனம், ஆன்மாவுடன் தொடர்புபட்டது. ஆன்மாவே இறைவன். வையகமெங்கும் பரந்திருக்கும் இறைவன் சுருங்கி மனித உடலில் ஆன்மாவாக இருக்கின்றான். எனவே தொடர்ந்துஜெபதியானங்கள் செய்துவர, உலக விடையங்களிலிருந்து ஆன்மா விலகி, தருமத்தின் பக்கம் சாயும். இவை எமது மனதில் நல்லெண்ணங்களை தூண்டும். நற்காரியங்களான உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல், உதவிசெய்தல், கீழ்ப்படிவு, கடமை தவறாமை, தன்னைப்போல் பிறரையும் நேசித்தல், ஜீவகாருண்யம், தான தருமங்கள் என்பன செய்ய நேரம் கைகூடும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர மனதில் நேரான நல்லெண்ணங்கள் விருத்தியாகும். மனம் சிறிது சிறிதாக சக்திபெறும், மனம் சக்தி பெறும்போது, மனமானது அதனுடன் தொடர்புடைய நல்ல விடையங்களான அன்பு, அறிவு, ஞானம், செல்வம் போன்றவற்றினை இப்பிரபஞ்சத்தில் இருந்து ஈர்த்துத் தரும். இதனையே ”மனித காந்தம்” என பகவான் கண்ணையா யோகி மகரிஷி மற்றும் காயத்திரிச் சித்தர் முருகேசு சுவாமிகள் ஆகியோர் கூறுவார். உதாரணமாக ஜெபதியானங்கள், தான தருமங்கள் என்பனவற்றுடன் மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும் நோவினை ஏற்படுத்தாது வாழ்ந்துவரும் ஒருவர் நோய்வாய்ப்பட்டாரெனில், அவரது சக்திபெற்ற ஆழ்மனமானது அவரின் நோயினை தானாகவே குணப்படுத்தும், அல்லது யாரேனும் ஒருவர்மூலம் அந்நோயினை குணப்படுத்தும் மார்க்கத்தினை அவருக்கு தெரியப்படுத்தும். ஆனால் அவர் ஜெபதியானங்கள் மற்றும் தருமம் செய்யாத ஒருவரெனின் அல்லது பிற உயிர்களை துன்பப்படுத்தி அதில் இன்பம் காண்பவராயின் அவர் எண்ணங்கள் விகாரமடைந்திருக்கும்,நோயினை குணமாக்குவதற்குரிய மார்க்கங்களை அறியாமல் மிகுந்த சிரமங்களை, துன்பங்களை அனுபவிக்க வேண்டி வரும், சிலவேளை மரணமும் சம்பவிக்கலாம். அதே போன்று மனம் சக்தி பெற்றவர்களுக்கு விபத்துக்கள், துன்பங்கள், இயற்கைச் சீற்றங்கள் என்பவற்றில் சிக்கும்போதெல்லாம் ஏதோவொரு வகையில் அவர்கள் அதனை வென்று, காப்பாற்றப்படுவார்கள்.
"தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது"   "தருமம் தலை காக்கும்"
என்ற சான்றோர் வாக்குகள் இதனையே குறித்து நிற்கின்றன. இவற்றிலிருந்து மனமே எண்ணங்கள் மூலம் எம்மை செயற்படுத்துகின்றது எனவும் எமக்கு ஏற்படும் நன்மை, தீமைகள் அனைத்தும் மனதின் எண்ணங்கள் மூலமே தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது எனவும் உணரலாம், தனியே தியான ஜெபங்கள் செய்து வரும்போது மனம் பண்படும், சக்திபெறும், ஆனாகும் இது மெதுவாகவே நிகழும், எனவேதான் காலையும் மாலையும் ஜெப தியானங்களில் ஈடுபடுங்கள்;முடியுமான வரை தான தருமங்கள் செய்யுங்கள்; பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுங்கள்; குருபக்தியாக இருங்கள்; கடமையினை சரிவர செய்யுங்கள்; கூட்டுப்பிராத்தனைகள் சத்சங்கங்களில் கலந்து கொள்ளுங்கள் என ஆன்மீகக்குரு வழிகாட்டுவார். அனைவருக்கும் எடுத்த எடுப்பிலே இலகுவாக தகுந்த ஒரு ஞானத்தினை அருளவல்ல குரு அமையப்பெற மாட்டாது. அவ்வாறாக ஞானகுரு அமையப்பெற்றாலும் எமது பூர்வஜென்மத்துக் கரும வினைகள் அந்த குருவினை ஏற்றுக்கொள்ளவும், உணரவும் விடுவதுமில்லை. அதனால் மனதினை வளப்படுத்த இலகுவான பயிற்சி ஒன்றினை நாம் மேற்கொள்ளலாம். மனத்தினை வளப்படுத்தும் பயிற்சிமுறை அதிகாலை 3.30 மணி முதல் 5.00 மணி வரையான பிரம்ம முகூர்த்தத்தில் படுக்கையிலிருந்து எழுந்திருக்க வேண்டும். நீராடி உடலை சுத்தப்படுத்திய பின் கண்ணை மூடியவாறு அமர்ந்திருந்து முடிந்தால் காயத்திரி மந்திர ஜெபம் செய்து பின்னர் சற்று தியானமிருந்து மனம் அமைதியடைந்ததும் மனதில் பின்வருவனவற்றை எண்ணி கற்பனை செய்து மனதில் பதித்துக்கொள்வோம்,

*நான் நன்றாக இருக்கிறேன்நான்

*அமைதியாக இருக்கிறேன்

*நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்

*நான் சந்தோசமாக இருக்கிறேன்

*நான் ஆனந்தமாக இருக்கிறேன்

*நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்

*நான் மிகுந்த அறிவாளியாக இருக்கிறேன்

*நான் புத்திக்கூர்மையானவனாக இருக்கிறேன்

*நான் அனைவருடனும் அன்பாகவும் இரக்கமாகவும் இருக்கிறேன் 

*நான் தொழில்ரீதியாக மிகவும் திருப்தியாக இருக்கிறேன்

*எனது வருமானம் போதுமானதாக இருக்கின்றது 

*எனது சட்டைப்பை, அலுமாரி, மேசை அனைத்திலும் பணம் கொட்டிக்கிடக்கிறது

*எனது வங்கிக்கணக்கில் பல இலட்சங்கள், கோடிகள் சேமிப்பாக இருக்கின்றன 

*நான் செல்வந்தனாக இருக்கிறேன் 

*எனது வீட்டில் உள்ள மனைவி/கணவன் குழந்தைகள் அனைவரும் மிகவும் அமைதியாகவும், சந்தோசமாகவும், ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் 

*எனது வீட்டில் உள்ள அம்மா அப்பா சகோதர சகோதரிகள் உறவினர்கள் அனைவரும் மிகவும் அமைதியாகவும், சந்தோசமாகவும், ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்

*எனது அயல் வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாகவும், சந்தோசமாகவும், ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் 

*எனது கிராமத்தில் உள்ள அனைவரும் அமைதியாகவும், சந்தோசமாகவும், ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் 

*எனது மாவட்டத்தில் உள்ள அனைவரும் அமைதியாகவும், சந்தோசமாகவும், ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் எனது 

*மாகாணத்தில் உள்ள அனைவரும் அமைதியாகவும், சந்தோசமாகவும், ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் 

*எனது நாட்டில் உள்ள அனைவரும் மிகவும் அமைதியாகவும், சந்தோசமாகவும், ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் ஐசுவரியம் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள் 

*இந்த பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் மிகவும் அமைதியாகவும், சந்தோசமாகவும், ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கின்றன 

*மாதம் மும்மாரி பொழிகின்றது விவசாயம் தழைக்கின்றது 

மேலே குறிப்பிடப்பட்ட வாக்கியங்கள் மனதில் நேர் அதிர்வலைகளை (Possitive thoughts) ஏற்படுத்தவல்லன. அந்த நேரான எண்ணங்கள் மனதில் ஒரு புத்துணர்ச்சியினைத் ஏற்படுத்துவதுடன், காலப்போக்கில் இந்த எண்ணங்கள் சக்திபெற்று செயற்பட ஆரம்பிக்கும். அப்போது எமது கரும வினைகள் படிப்படியாக வலுவிழந்து குறைந்துவரும்; தகுந்த ஞானகுரு வாய்க்கப்பெறும்; பின் அந்த ஞானகுருவின் உபதேச நெறிநின்று கருமமாற்ற, எம் வாழ்க்கை நாம் எண்ணியபடி இன்பமாக அமையும். இப்பயிற்சியினை, அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நீராடி, மனதில் குருவை தியானப் பொருளாகக் கொண்டு, முள்ளந்தண்டு நேராக அமையும்வண்ணம் நிமிர்ந்து அமர்ந்திருந்து, காயத்திரி ஜெபம் செய்து சிறிதளவு தியானம் செய்தபின் இப்பயிற்சியினை செய்யலாம். அல்லது இஷ்ட தெய்வத்தினை மனதில் எண்ணி சிறிதளவு வழிபட்டபின், இப்பயிற்சியினைச் செய்யலாம். அதுவும் முடியவில்லையாயின், அதிகாலையில் எழுந்தவுடன் படுக்கையில் அமர்ந்திருந்து இப்பயிற்சியினை செய்யலாம். இப்பயிற்சியானது மனதினை வளப்படுத்த பயன்படுத்தப்படும் மிக இலகுவான செயல்முறையாகும். 

மனம் சற்று வளம் பெறுமாயின் கரும வினைகள் சற்று விலக, எம்மால் குருவினை உணர முடியும். குருவில் பூரண சரணாகதியடையவும், கருமவினைகளை வெல்லவும் சித்தி பெறவும் இயலும். இவ்வாறாக நேரான எண்ணங்களை மனதில் பதித்து, தொடர்ந்து தகுந்த குருவின் உபதேசநெறி நின்று, தியான ஜெபங்கள், தான தருமங்கள், உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல், உதவிசெய்தல், கீழ்ப்படிவு, கடமை தவறாமை, தன்னைப்போல் பிறரையும் நேசித்தல், ஜீவகாருண்யம், என்பனவற்றை கடப்பிடித்து வருவோமானால், எமது கரும வினைகள் நீங்கப்பெற்று, இறை சூட்சும இரகசியமான ஞானத்தினையும் பெற்று பிறவிக்கடல் நீந்தி பிறவாப் பேரின்ப நிலையினை பெற்றேகலாம்.

"ஓம் நமோ பகவதே 
புண்ணியரெத்தினாய! ஓம் புவனலோக ஈஸ்வராய நம"!!

0/Post a Comment/Comments

Previous Post Next Post