நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க் 2.0... மீண்டும் நிலாவுக்கு ஸ்கெட்ச் போடும் அமெரிக்கா!



விண்வெளித்துறையில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும் அடுத்தகட்ட முயற்சிகளுக்குத் தயாராகிவருகிறது அமெரிக்கா.

``விண்வெளி என்று வந்துவிட்டால் அங்கே அமெரிக்காதான் முதலாவதாக இருக்க வேண்டும். நமது பொருளாதாரம் மற்றும் நாட்டைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்லாமல் எல்லா விஷயங்களிலும்கூட.’’ கடந்த வாரம் இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்தார் அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் (Mike Pence). அமெரிக்கா மீண்டும் நிலவுக்குச் செல்ல திட்டமிட்டிருக்கும் விஷயத்தைக் குறித்துதான் இந்தக் கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்னரே நிலவில் முதல் ஆளாகக் கால் பதித்து சாதனை படைத்துவிட்ட அமெரிக்கா இப்போது ஏன் மீண்டும் நிலவில் கால் பதிக்கத் துடிக்கிறது, அதற்கான காரணம் என்ன?

இது இந்த நூற்றாண்டுக்கான விண்வெளிப் போட்டி

நிலவில் மனிதன் முதல் முறையாகக் கால் பதித்த தினம் 1969-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி. நாசாவின் விண்வெளி வீரரான நீல் ஆம்ஸ்ட்ராங்தான் முதல்முறையாக நிலவில் கால்பதித்தார். அன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையேயான விண்வெளிப் போட்டி உச்சத்தில் இருந்தது. தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் வளராத அந்தக் காலகட்டத்தில் இது மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டது. பின்னர், சோவியத் யூனியனும் பிற உலக நாடுகளும் அந்தப் போட்டியிலிருந்து பின்வாங்கிக் கொண்டன. ஆனால், அப்போதும் நிலவுப் போட்டிதான் முடிவுற்றதே தவிர விண்வெளியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற போட்டி அதிகரிக்கவே செய்தது. இந்நிலையில்தான் மீண்டும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்திருக்கிறது அமெரிக்கா. அதற்காகச் சமீபத்தில் பல மில்லியன் டாலர்கள் தொகையை ஒதுக்கியிருக்கிறது ட்ரம்பின் நிர்வாகம். அதைத் தொடர்ந்துதான் அமெரிக்காவின் துணை அதிபர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். நாசாவும் அதற்கான திட்டங்களையும் வகுத்துவிட்டது.


அதன்படி அடுத்த வருடம் மனிதர்கள் நிலவுக்குச் செல்வதற்கான பணிகள் தொடங்கவுள்ளன. அப்போது மனிதர்கள் இல்லாமல் திட்டம் பரிசோதனை செய்யப்படும். அதைத் தொடர்ந்து பல கட்டப் பரிசோதனைகளுக்குப் பிறகு, 2024-ம் ஆண்டில் நாசாவின் விண்வெளி வீரர்கள் நிலவுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். அடுத்த ஆர்ம்ஸ்ட்ராங்குகள் தயாராகிக்கொண்டிருக்கின்றனர். எனவே, இன்னும் ஐந்து வருடங்களில் நிலவில் எப்படியும் மனிதர்கள் மீண்டும் கால்பதித்துவிடுவார்கள். இது இந்த நூற்றாண்டுக்கான புதிய விண்வெளிப் போட்டியின் தொடக்கமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தமுறை போட்டி என்பது நிலவைத் தாண்டியும் இருக்கப்போகிறது.

கால் பதிப்பது என்னவோ நிலவுதான்... ஆனால் இலக்கு அதுவல்ல!

கடந்த முறை நிலவில் விண்வெளி வீரர்கள் சில மணி நேரம் மட்டுமே அங்கே இருத்து ஆய்வுகளை மேற்கொண்டனர். பூமிக்குக் கொண்டு வந்து பரிசோதனை செய்வதற்காக நிலவின் தரைப்பகுதியில் இருந்து சில மாதிரிகளையும் கையோடு எடுத்து வந்திருந்தனர். ஆனால், இந்த முறை நிலவின் தரைப்பகுதியே ஆராய்ச்சிக் களமாக மாறப்போகிறது. 2024-ம் ஆண்டில் நிலவைக் குறிவைத்திருக்கும் நாசாவின் இலக்கு, செவ்வாய்க்கிரகமாக இருக்கப்போகிறது. நிலவில் கால்பதித்த அடுத்த ஆறு வருடத்தில் செவ்வாயில் தனது விண்வெளி வீரர்கள் இருக்க வேண்டும் என நாசா திட்டமிட்டுள்ளது. அதற்கான பரிசோதனைக்களமாக இந்த முறை நிலவு இருக்கப்போகிறது. அதற்காக 
ரோவர்கள் உட்படப் பல கருவிகள் நிலவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளன. இதன் மூலமாக விண்வெளி வீரர்கள் தரைப்பகுதியில் பயணம் செய்ய முடியும். மேலும், அங்கேயே சில நாள்கள் தங்கியிருந்து ஆய்வு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன.


கடந்த முறை நிலவுப் போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக சோவியத் யூனியன் மட்டுமே இருந்தது. ஆனால், இப்போது காலம் மாறியிருக்கிறது. அன்றைக்கு இருந்த சோவியத் யூனியன் அப்படியே இன்று இல்லை. ஆனால், போட்டியாளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். பல தனியார் நிறுவனங்கள் இந்தப் போட்டியில் தற்போது இணைந்திருக்கின்றன. அவற்றில் நாசாவைவிடவும் முன்னிலையில் இருப்பது அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். எலான் மஸ்க்குக்கு சொந்தமான இந்த நிறுவனம் செவ்வாய்க்கிரகப் போட்டியில் நாசாவுக்கு முன்னால் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது. அதன்படி அடுத்த 2025-ம் ஆண்டில் ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பிவைக்கும் மனிதன் முதலாவதாகச் செவ்வாய்க்கிரகத்தில் கால்தடத்தைப் பதிப்பான். அது மட்டுமன்றி அடுத்த ஐந்து வருடங்களில் சிறிய அளவிலான நகரத்தைக் கட்டமைக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.