'பட்ட மரமும் பூக்கும்!' - புது முயற்சியில் சிம்ஸ் பூங்கா ஊழியர்கள்!!

சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா ,பைக்காரா அருவி, ஊட்டி படகு இல்லம் ,தொட்டபெட்டா காட்சி முனை, குன்னூர் சிம்ஸ் பூங்கா என ஏராளமான சுற்றுலாத் தளங்கள் உள்ளன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு அடுத்தபடியாக, குன்னூர் சிம்ஸ் பூங்கா சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் பூங்காவாக உள்ளது. 12 ஹெக்டேர் பரப்பளவில், கடல் மட்டத்திலிருந்து 1780 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 1874-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின்போது, ஜே.டி.சிம்ஸ் மற்றும் மேஜர் முற்றே ஆகியோரால் நிருவப்பட்ட இந்தப் பூங்காவில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மரங்கள் இங்கு நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

இந்தப் பூங்காவில், ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும் பழக் காட்சி மிகவும் பிரசித்திபெற்றது. தற்போது, தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், 2 லட்சத்து 6௦ ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது. தற்போது புது முயற்சியாக, மரக் கட்டைகளைப் பயன்படுத்தி பெரணி,ஆர்க்கிட் உள்ளிட்ட தாவரங்களை நடவுசெய்துவருகின்றனர். இது, சுற்றுலாப் பயணிகளிடம் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

இதுகுறித்து சிம்ஸ் பூங்கா ஊழியர்கள் கூறுகையில், “ இந்தப் பூங்காவில், நூற்றாண்டுகளைக் கடந்த மரங்கள் அதிக அளவில் உள்ளன.மழை மற்றும் காற்று வீசும் சமயங்களில், முதிர்ந்த மரங்கள் வேருடன் சாயும். விழுந்த மரங்களில் தேவைக்கு ஏற்ப துண்டுகளாக வெட்டி, சதுரம் ,செவ்வக வடிவங்களாக மாற்றுகிறோம். பின்பு, அந்த மரத் துண்டுகளில் லேசான துளைகள் இட்டு, இயற்கை உரம், மரத்தூள் சிறிதளவு மண் சேர்த்து, பரணி அல்லது ஆர்க்கிட் கிழங்குகளை வைப்போம் .தற்போது முதல் கட்டமாக, சிம்ஸ் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் வைத்துள்ளோம். இந்த முறையில் செடிகளை வளர்க்க பெரணி, ஆர்க்கிட் போன்ற தாவரங்கள் உகந்தவை. குறைந்த நீர் ,மண் மற்றும் சூரிய ஒளி இருந்தால் போதும். வீடுகளிலும் இதுபோன்று முயற்சிக்கலாம்” என்றார்.

No comments

Powered by Blogger.