மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் அமெரிக்காவுக்கு உலக சாதனை (13 – 0) வெற்றி!! 

பிரான்ஸில் நடைபெற்றுவரும் எட்டாவது மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் எவ். குழுப் போட்டியில் தாய்லாந்தை 13 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட நடப்பு உலக சம்பியனான, அமெரிக்க அணி, மகளிர் உலகக் கிண்ண வரலாற்றில் உலக சாதனைமிகு மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது.
ரெய்ம்ஸ், ஒகஸ்டே டேலோன் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப் போட்டியின் முதலாவது ஆட்ட நேர பகுதியில் 3 கோல்களை மாத்திரமே ஐக்கிய அமெரிக்கா போட்டிருந்தது.

ஆனால் இடைவேளையின் பின்னர் 6 நிமிடங்களில் 4 கோல்களையும் கடைசி 16 நிமிடங்களில் 6 கோல்களையும் போட்டு ஐக்கிய அமெரிக்கா உலக சாதனையுடன் கூடிய வெற்றியைப் பதிவு செய்தது.

ஐக்கிய அமெரிக்கா சார்பாக அலெக்ஸ் மோர்கன் 5 கோல்களையும் ரோஸ் லெவெல், சமன்தா மியூஸ் ஆகியோர் தலா இரண்டு கோல்களையும் லிண்ட்சே ஹோரான், மெகான் ரெப்பினோ, மெலோரி பியூக், கார்லி லொய்ட் ஆகியோர் தலா ஒரு கோலையும் போட்டனர்.

இதற்கு முன்னர் 2007இல் ஆர்ஜன்டீனாவை ஜேர்மனி 11 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிகொண்டிருந்தமையே மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் ஈட்டப்பட்ட மிகப் பெரிய வெற்றியாக இருந்தது.

இதேவேளை லே ஹெவ்ரே ஓஷேன் விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஈ குழுவுக்கான போட்டியில் நியூஸிலாந்தை 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் நெதர்லாந்து வெற்றிபெற்றது.

சிலிக்கு எதிராக ரெனெஸ் ரொஸோன் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற எவ் குழுவுக்கான மற்றொரு போட்டியில் 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் சுவீடன் வெற்றிபெற்றது.