திருகோணமலையில், கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு 3 நாள் செயலமர்வு!!

                                                                                                                      - லோஜி -
உலக சமுத்திர தினத்தினை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கு சமூத்திரம் மற்றும் சமுத்திரம் சார் விடயங்கள் குறித்து விளக்கமளிக்கும் வகையிலான 3 நாள் பயிற்சிச் செயலமர்வு கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் மேற்பார்வையின் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபை இயங்குகின்றது. 

திருகோணமலை மாவட்ட செயலகத்திலுள்ள கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வடக்கு கிழக்குக்கான பிரிவின் ஏற்பாட்டில் நடைபெறும் இச் செயலமர்வில், இலங்கையின் தேசிய ஊடகங்களினைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கு பெறுவதுடன், ஏனைய திணைக்களங்களின் பிரதிநிகளும் இணைந்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை திருகோணமலை சேபர் தீவில் ஆரம்பமான 2019ம் ஆண்டுக்கான சமுத்திரதினத்தையொட்டியதான இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில், வடக்கு கிழக்கு பிராந்தியத்துக்கான உதவி முகாமையாளர் ரி.சிறிபதி வரவேற்புரைநிகழ்த்தினார்.

அதனையடுத்து கடல் சார் விடயங்களின் முக்கியத்துவங்கள், பெறுமானங்கள், கடல் சார் பிரச்சினைகளை எதிர்கொள்ளல், தீர்வுகாணல், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டன. சனிக்கிழமை வரையில் நடைபெறவுள்ள இச் செயலமர்வில் விரிவுரைகள் தவிர கடல் குளியல், கடலுக்குள் உள்ள உயிரினங்கள், தாவரங்கள் தொடர்பான நேரடியான களப்பயிற்சிகளும் நிலாவெளி, புறாத்தீவு, மற்றும் கடல் பயணப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. 

கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளரும் றுகுணு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி ரெர்னி பிரதீப்குமார வளவாளராகக் கலந்து கொண்டு விரிவுரைகளையும், பயிற்சிகளையும் வழங்கினார். 

நாடு முழுவதும் காணப்படும் கடற்கரைகளை சுத்தமாக வைத்திருத்தல் என்பது மிகப்பெரும் சவாலாக இருந்து வருகிறது. சில கடற்கரைகள் கண்ணாடி, பிளாஸ்ரிக் பொதிகள், போத்தல்கள், தேங்காய் சிரட்டைகள், பழைய சப்பாத்துக்கள் போன்ற பல பொருட்களால் மாசடைந்திருந்தன. 

இந்த கழிவுப் பொருட்கள் கடற்கரைச் சூழலை அண்மித்து வசிப்போருக்கு மட்டும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துவிடாமல், நுளம்பு பெருக்கத்துக்கும் டெங்கு வைரஸ் பரவலுக்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன. அத்துடன், கடல்சார் விலங்களுக்கும் இவை பெரும் பாதிப்பாக அமைந்திருக்கும். 

இலங்கை ஒரு சுற்றுலா நாடாக கருதப்படுகிறது. பெருமளவானோர் கடற்கரைசார் விடுமுறையை செலவிட விரும்புகின்றனர். பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்துடன் இணைந்து குப்பைகள் முறையாக அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 

கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை என்பது, வினைத்திறன் வாய்ந்த சட்ட விதிமுறைகளின் அமுலாக்கத்தின் மூலமாக கடற்கரை மாசுறலை தடுத்தல் மற்றும் நிர்வகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்பாக திகழ்கிறது. இது தொடர்பாக முன்னெடுக்கப்படும் சர்வதேச மாநாடுகள், ஒருங்கிணைப்பு சந்திப்புகள் போன்றவற்றின் தீர்மானங்களை தனது வளங்களைக் கொண்டு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தனியார்-பொது பங்காண்மைகளினூடாக மேற்கொள்கிறது. இதன் மூலம் இலங்கையை 2020 ஆம் ஆண்டளவில் மாசற்ற கடற்கரை கொண்ட நாடாக திகழச் செய்து, நாட்டு மக்களின் ஆரோக்கியத்துக்கு நிலையான பங்களிப்பை வழங்குவதை நோக்காக கொண்டுள்ளது.

No comments

Powered by Blogger.