மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருடாந்தம் 6 பில்லியன் அமெரிக்க டொலர் அன்னியச் செலாவணி கிடைக்கின்றது; கே.கே.மஸ்தான்

                                                                                                - வவுனியா நிருபர் -
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருடாந்தம் 6 பில்லியன் அமெரிக்க டொலர் அன்னியச் செலாவணி கிடைப்பதாகவும் தற்போது அதில் பாதிப்பு ஏற்பட்டுனள்ளதாகவும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தீவிரவாத தாக்குதலின் பின்னர் இஸ்லாமிய சமூகம் இஸ்லாமியர்களாக கடைப்பிடிக்கும் சில விடயங்களுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நிகாப், புர்கா போன்றவற்றால் முகம் மூடுவது உடனடியாகவே நிறுத்தப்பட்டுள்ளது. சில கடும்போக்காளர்கள் எமது பள்ளிகளில் சொல்லப்படும் பாங்கு நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்து வந்தது. மதரஸா மூடவேண்டும் என பல பிரச்சனைகளை எமது சமூகம் நேரடியாக முகம் கொடுக்கின்றது. தேசிய ஜமாத் போன்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் அவசரகால சட்டத்தின் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என பல கைதுகள் இடம்பெற்றுள்ளது. அதில் பல அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றது. இவ்வாறான பாரிய பிரச்சனைகளை எமது சமூகம் முகம் கொடுக்கின்றது.

தீவிரவாத தாக்குதல் மற்றும் வன்முறைகளால் உல்லாசத்துறை பாதிப்படைந்துள்ளது. இவற்றை மீள கட்டியெழுப்ப ஒரு வருடம் செல்லும். முஸ்லிம் நாடுகளில் இருந்து வந்த உல்லாசப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் புர்கா, நிகாப் போன்றவற்றை அணிபவர்கள். அப்படியான பெண்கள் இங்கு வராவிட்டால் அவர்களது குடும்பம் இங்கு வராது. அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளில் 6 பில்லியன் அமெரிக்க டொலர் அன்னிய செலாவணியாக இந்த நாட்டிற்கு வருடாந்தம் கிடைக்கிறது. அதிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் வன்முறையாளர்களை விரைவாக பிடித்ததன் மூலம் இந்த நாடு தற்போது பாதுகாப்பாகவுள்ளது.

அத்துடன் வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் விடயத்தை மனிதாபிமானம் என்று பார்க்கும் போது எங்கிருந்தாலும் அகதிகளை ஏற்க வேண்டும். அதற்கு பொருத்தமான இடம் வேண்டும். முன்னர் இங்கு முகாம் இருந்ததையிட்டு பொருத்தமான இடம் இருக்கும் என்ற அடிப்படையில் இங்கு கொண்டு வந்துள்ளார்கள். ஆனால் தென்பகுதியில் பொருத்தமான இடம் இருந்தால் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து அந்த இடத்தில் இருந்துமாறு கூறலாம். எமது நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியாவில் கூட அகதிகளாக உள்ளனர். ஆகவே மனிதாபிமானமாக சிந்திக்க வேண்டும். அவர்களை விரைவில் இங்கிருந்து கொண்டு சென்று விடுவார்கள் என நம்புகின்றேன் என்றார்