உலகக் கோப்பையில் இரண்டு முறை ஒரு ரன்னில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியா


உலகக்கோப்பையில் இதுவரை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 11 முறை மோதியுள்ளன. இதில் மூன்று முறை மட்டும் இந்தியா வென்றுள்ளது. 1992லிருந்து கடந்த ஆறு உலகக்கோப்பையில் ஏழு முறை மோதிய இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிகளில் ஆறு முறை ஆஸ்திரேலியாவே வென்றுள்ளது.

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு 353 ரன்கள் இலக்கு வைத்துள்ளது இந்தியா. உலகக்கோப்பையில் இதுவரை எந்தவொரு அணியும் 350 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை வெற்றிகரமாக கடந்ததில்லை.

முன்னதாக உலகக்கோப்பையில் இந்தியா இரு முறை ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா உலகக் கோப்பையில் மோதிய போட்டிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

உலகக்கோப்பையில் இந்தியா v ஆஸ்திரேலியா

 • 1983 - லீக் சுற்று - ஆஸ்திரேலியா இந்தியாவை 162 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா 320 ரன்கள் குவித்தது. இந்தியா 158 ரன்கள் மட்டுமே எடுத்தது.

 • 1983 - லீக் சுற்று - இந்தியா ஆஸ்திரேலியாவை 118 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்து 247 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா 129 ரன்களில் சுருண்டது.

 • 1987- லீக் சுற்று - சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்திருந்தது. இந்தியா 269 ரன்கள் எடுக்க, ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.

 • 1987 லீக் சுற்று - இந்தியா நிர்ணயித்த 289 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா 233 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

 • 1992 லீக் சுற்று - ஆஸ்திரேலியா 237 ரன்கள் எடுத்தது. மழை குறுக்கீடு காரணமாக இந்தியாவுக்கு 47 ஓவர்களில் 236 ரன்கள் இலக்கு வைக்கப்பட்டது. இந்தியா 234 ரன்கள் மட்டும் எடுக்க, மீண்டும் ஆஸ்திரேலியாவிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா.

 • 1996 லீக் சற்று - ஆஸ்திரேலியா 258 ரன்களும் இந்தியா 242 ரன்களும் எடுத்தன. 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.

 • 1999 லீக் சுற்று - இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 283 ரன்களை துரத்திய இந்திய அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்து. 77 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்திய அணி.

 • 2003 லீக் சுற்று - இந்தியா 125 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

 • 2003 இறுதிப் போட்டி - ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது. இந்தியாவால் 234 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

 • 2011 - காலிறுதிப் போட்டி - யுவராஜ் சிங்கின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 261 ரன்கள் எனும் இலக்கை கடந்து ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

 • 2015 அரை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 328 ரன்கள் எடுத்தது. இந்தியா 233 ரன்கள் மட்டும் எடுத்து 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அரை இறுதியோடு உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது.