முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை கவலைக்குரிய விடயம்!!

முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை கவலைக்குரியது என பெரு நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

‘முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக பதவி விலகியதற்கு வௌ;வேறு காரணங்களைக் கூறினாலும், அவர்கள் அனைவரும் முஸ்லிம் மக்களுக்கு மாத்திரம் சார்பாக செயற்பட்டதாகவே கருதப்படும். இதே முடிவை பௌத்த, கிறிஸ்தவ மற்றும் இந்து அமைச்சர்கள் என ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களும் எடுத்தால் நாட்டின் நிலைமை என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும். எனவே முஸ்லிம் அமைச்சர்களின் இந்த முடிவு கவலைக்குரியது என அவர் கூறினார்.

‘நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான தேசிய வழி‘ வேலைத்திட்டம் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டும் மாநாடு வியாழக்கிழமை கண்டியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும்கூறியதாவது, ” முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் முன்னாள் கிழக்கு, மேல் மாகாண ஆளுனர்களுக்கு எதிராக சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கு அவர்கள் ஊடக சந்திப்புக்களை நடத்துவது பொறுத்தமல்ல.

பொலிஸ் அல்லது புலனாய்வுத் துறையில் தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றால் அதனை நிரூபிக்க வேண்டும். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்ற ரீதியாக மாத்திரமன்றி சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எடுக்க முடியும்.

நாடாளுமன்றத்திற்கோ அல்லது தெரிவுக்குழுவிற்கோ இது குறித்து விசாரிக்க முடியாது. ஆனால் அதன் உண்மை தன்மை குறித்து ஆராய முடியும். ஆனால், விசாரணைகள் பாதுகாப்பு சபையிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். முஸ்லிம் அமைச்சர்கள் எடுத்த முடிவு கவலைக்குரியது.

‘ நீங்கள் இந்த முடிவினை எடுத்ததற்கு என்ன காரணம் கூறினாலும், முஸ்லிம்கள் சார்பில் மாத்திரம் இருந்து இந்த முடிவை எடுத்ததாகவே ஏனையோர் எண்ணுவார்கள் ‘ என்று நான் அவர்களிடம் தெரிவித்துள்ளளேன்.

இவர்கள் இவ்வாறு முடிவொன்றினை எடுக்கும் போது பௌத்தர்கள் என்ற ரீதியில் நாம் ஒரு பக்கமும், கிறிஸ்தவ அமைச்சர்கள் ஒரு பக்கமும் தத்தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தொடங்கி விடுவார்கள். இது நாட்டுக்கு உகந்ததல்ல. எனவே பாதுகாப்புத்துறை மற்றும் பொலிஸாருக்கு பாரிய பொறுப்பு உள்ளது.

குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் யாராக இருந்தாலும் விசாரணைகளை துரிதப்படுத்தி உண்மையை மக்களிக்கு வெளிப்படுத்த வேண்டும். வைத்தியர் தொடர்பான குற்றச்சாட்டுக்களை மருத்துவ சபை விசாரிக்க வேண்டும்.

1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கு – தெற்கு பாரிய பிரச்சினையாகக் காணப்பட்டது. 1971 ஆம் ஆண்டு ஜே.வி.பியால் ஏற்பட்ட கலவரத்தில் பெரும்பாலான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு – தெற்கு பிரச்சினை புறந்தள்ளப்பட்டது. அந்த பிரிவினைவாதத்துடன் கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் புலிகள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் இலங்கை இரண்டாகப் பிரிந்தது. விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக பலர் ஒன்றிணைந்தனர். ஆனால் எவ்வாறு அவர்களை தோற்கடிப்பது என்பதில் ஒவ்வொருவர் மத்தியிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

விடுதலைப்புலிகளுக்கு வெளிநாட்டு தொடர்ப்பு குறிப்பாக இந்தியாவிடமிருந்து முழுமையான ஆதரவு கிடைக்கப் பெற்றதால் பாதுகாப்புத்துறையினருக்கு அவர்களை தோல்வியடையச் செய்ய முடியவில்லை. எனினும் 2009 ஆம் ஆண்டு அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் தேர்தல்களின் போது வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள மக்கள் தமிழ் பிரதிநிதிகளுக்கு மாத்திரம் வாக்களிக்கக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில். ஏப்ரல் 21 ஆம் திகதி தற்கொலை குண்டு தாக்குதல்களின் பின்னர் நாடு என்ன நிலைமையில் உள்ளது ? மத கொள்கைகளைக் கொண்டு நாட்டில் அடுத்த யுத்தம் இடம் பெறுவதற்கு வழிவகுத்துள்ளதா? இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியது.

சிரியா, ஈராக் மற்றும் லிபியாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும் கொச்சிக்கடை, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் வாழ்கின்ற கிறிஸ்தவ மக்களுக்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை. எனினும் மத வாதத்தினால் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

எனவே தான் இந்த பிரச்சினையை வருடக்கணக்கில் இழுத்தடித்துக் கொண்டிருக்காது ஓரிரு மாதங்களில் தீர்வினைக் காணும் வகையில் இந்த யோசனைகளை முன்வைத்துள்ளோம். இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் நடபெறவுள்ளது. டிசம்பர் 8 ஆம் திகதி ஆகும் போது புதிய ஜனாதிபதி ஒருவர் இந்த நாட்டில் இருக்க வேண்டும்.

ஜனாதிபதி தான் இந்த நாட்டின் அரசியர் தலைவர். ஜனாதிபதியே நிறைவேற்று அதிகாரத்தின் பிரதானியுமாவார். எனவே ஜனரிபதி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் காணப்படுகின்றது.

மதப் பிரிவினையோடும், குரோதத்துடனும் ஜனாதிபதி தேர்தலுக்குச் சென்றால் அதனால் சிறந்த பலனை அடைய முடியாது. உணர்வுகளின் அடிப்படையில் ஆவேசத்துடன் எடுத்தவொரு முடிவாகவே அது அமையும். எனவே நாம் அனைவரும் நாட்டுக்காக பொறுப்புடன் செயற்பட வேண்டும்’ 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்கள் தொடர்பில் ஆராய்வது சிறந்த விடயம். ஆனால் இதனைக் கொண்டு அரசியல் இலாபம் தேடுவதற்கு முற்சிக்காமல் எந்த இடத்தில் தவறிழைக்கப்பட்டது என்று அறிய வேண்டும்.

தாக்குதல் நடத்தபடவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தால் புலனாய்வுத்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் அரசியல் தலைவர்கள் என்று இம்மூன்று தரப்பினரும் ஒன்றிணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வவுணதீவில் பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அதன் போது புலிகள் மீண்டும் உருவாகிவிட்டதாகக் கூறி முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

இந்த இடத்தில் முதலாவது தவறிழைக்கப்பட்டது. புலிகள் மீண்டும் வந்துவிட்டதாகக் கூறியவர்களின் பேச்சை நம்பி ஏமாந்து தேசிய பாதுகாப்பு கீழ் தள்ளப்பட்டது. இதே போன்று தான் மாவனெல்லலையில் நத்தார் தினத்தன்ற புத்தர் சிலை உடைக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் தேவாலயங்கள் உடைக்கப்பட்டமை பிற்போடப்பட்டது. மிகச்சிறிய ஒரு குழுவினர் நாட்டில் கடும் நெருடிக்கடியை ஏற்படுத்தியுள்ளனர்.

விடுதலைப்புலிகளைப் போன்று ஆட்சியைக் கைப்பற்றுவது இவர்களது நோக்கம் கிடையாது. உயிர்களைப் பலியெடுப்பது மாத்திரமே இவர்களது எதிர்பார்ப்பாக இருந்தது. அதற்காக நூற்றுக்கணக்கான உயிர்களைக் கொன்றனர். எனவே இந்த விடயத்தில் அறிவு பூர்வமாகச் செயற்படாவிட்டால் பாரிய மதப் பிரச்சினையாக இது பெரிதாகும்” என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post