திருகோணமலை கன்னியா பிரச்சினைக்கு இணக்கப்பாடு மனோகணேசன் நேரடி விஜயம்!!

                                                                                         - திருமலை நிருபர் -
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைந்த இடத்தில் பெளத்த விகாரை அமைக்க மாட்டோம் எனவும், தமிழ் பெளத்த வரலாறு இருப்பதையும்  ஏற்றுக்கொள்கிறோம் எனவும் கன்னியா விகாரை தேரர்கள் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் உடன்பாட்டுக்கு வந்தனர் இவ்விடயம் சம்பந்தமாக இன்று கன்னியாவுக்கு நேரடியாக விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் மனோகணேசன் ஆலயபுனரமைப்புக்கான நிதி ஒதுக்கீடுகளையும் தனது அமைச்சின் ஊடாகமேற்கொள்ளவுள்ளார்.

புராதன சிதைவுகளுக்கு சேதம் ஏற்படாத வகையில்  கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைக்கவும்,  வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தை புனரமைக்கவும் உடன்பாடு காணப்பட்டது.  

இது தொடர்பான அடுத்த கட்ட கலந்துரையாடலை  கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், இந்து, பெளத்த விவகார அமைச்சர்கள் கலந்துக்கொள்ளும் மட்டத்தில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

கன்னியா விநாயகர், சிவன் ஆலய கட்டுமானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சு வழங்கும் என அமைச்சர் மனோ கணேசன் இதன்போது தெரிவித்தார். 

அமைச்சர் மனோ கணேசனுடன்  யோகேஸ்வரன் எம்பி,  வேலுகுமார் எம்பி, சுசந்த புச்சிநிலமே எம்பி, ஜமமு அமைப்பு செயலாளர் ஜனகன், திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமார, கன்னியா விநாயகர் ஆலயம் சார்பாக கணேஷ் கோகிலரமணி, கன்னியா விகாரை தேரர்கள், ஜமமு பிரசார செயலாளர் பரணிதரன்  ஆகியோர் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற  கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். 

கலந்துரையாடலில் பின்னர் அமைச்சர் மனோ கணேசன்  தலைமையிலான குழுவினர் கன்னியா வெந்நீர் ஊற்று பகுதிக்கு சென்று நேரடியாக ஸ்தலத்தை பார்வையிட்டதுடன்  சிவன்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜையிலும் கலந்துகொண்டதுடன் அங்குள்ள பௌத்த விகாரைக்கும் சென்று வழிபட்டார் இதன்போது ஸ்ரீதரன் எம்பியும் அமைச்சருடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.