மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


சர்வாதிகாரத்தை பயன்படுத்தி தெரிவுக்குழுவை யாராலும் அடக்க முடியாது : விசாரணையின் நிறைவில் பல உண்மைகள் வெளிவரும் என்கிறார் ரணில்

(விஜித்தா)

"தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி எவரும் அடக்கவும் முடியாது; கலைக்கவும் முடியாது."  என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தா.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று சிங்கப்பூர்  செல்வதற்கு முன்னர்  அலரி மாளிகையில் வெளிநாட்டுச் செய்தி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

"நாடாளுமன்றின் ஏகோபித்த தீர்மானத்துக்கமையவே தெரிவுக்குழுவை சபாநாயகர் நியமித்தார் என்பது அனைவரும் அறிந்த விடயம். இதில் நாடாளுமன்றத்தைத் தவிர வேறு எவரும் தலையிட முடியாது. 

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினமன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட 260 இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். அந்தக் கொடூரத் தாக்குதலின் பின்னணியையும் அதனுடன் தொடர்பட்டவர்களையும் நாம் கண்டுபிடித்தே ஆகவேண்டும். எவர் குற்றமிழைத்திருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். 

எனவே, தெரிவுக்குழு பெயர் குறிப்பிட்டு அழைக்கின்ற அனைவரும் பதவி வேறுபாடின்றி அதன் முன்னிலையில்  சாட்சியமளித்தே ஆகவேண்டும். இது தொடர்பில் ஊடகங்கள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். 

சாட்சியமளிக்க வரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை மீறி எவரும் கட்டுப்பாடுகளைப் போட முடியாது. அதேபோல், இந்தத் தெரிவுக்குழுவை சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி எவரும் அடக்கவும் முடியாது. இதைக் கலைக்கவும் முடியாது.

பொது எதிரணியினர் ஆட்சியைப் பிடிப்பதற்காகவும், குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்காகவும் தெரிவுக்குழுவை கண்டபடி விமர்சிக்கின்றனர். இது தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளவில்லை.

தெரிவுக்குழு விசாரணையின் நிறைவில் பல உண்மைகள் வெளிவரும். அப்போதுதான் தெரிவுக்குழுவின் நம்பகத்தன்மையை அனைவரும் உணர்ந்து கொள்வார்கள். 

தெரிவுக்குழுவைக் கலைக்கவில்லை என்பதற்காக அமைச்சரவையும் இயங்காது என எவரும் நினைக்கக்கூடாது. அமைச்சரவை தொடர்ந்து இயங்குகின்றது. ஏதோவொரு வழியில் விரைவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும்"  என்று பிரதமர்  குறிப்பிட்டுள்ளார். 
No comments

Powered by Blogger.