மோசடிக் கும்பலொன்று இனங்காணப்பட்டுள்ளது; அவதானமாக இருங்கள்; பொலிசார் அறிவித்தல்!!

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் மற்றும் தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டுள்ளவர்களைப் பிணையில் விடுவித்துத் தருவதாக் கூறி , பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபடும் ஒருங்கமைக்கப்பட்ட குழு ஒன்று தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒருங்கமைக்கப்பட்ட குழுவினர், விளக்கமறியலில் அல்லது தடுப்பில் வைக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களை பிணையில் விடுவிப்பதற்குத் தங்களால் முடியும் என்றும் அதற்காகப் பணம் தர வேண்டுமென்றும் கோருவது தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இவ்வாறான மோசடிக் குழுவினர் பொதுமக்களைத் தொடர்பு கொண்டு, நீங்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதாகத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறி, அவ்வாறு நீங்கள் கைது செய்யப்படாதிருக்க வேண்டுமாயின் தங்களுக்கு கப்பம் தர வேண்டுமென்று கோருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

எனவே, இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் இவ்வாறான அழைப்புக்கள் கிடைத்தால் குறித்த அழைப்பு எடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கத்தைக் குறித்து அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு வழங்கி முறைப்பாடு செய்யுமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.