வன்முறையற்ற இலங்கைக்காய் ‘அவளுடன் நாம்’ ; ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம்!!


                                                                                                        - விஜித்தா -
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை சர்வதேச பொதுச்சுகாதார, மனித உரிமை பிரச்சனையாக அடையாளம் காணப்படுகிறது. இலங்கையில் 3 இல் 1 பெண்களின் கொலைகள் அவர்களின் நெருங்கிய துணைவரினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை தொடர்பானவை, அவற்றில் 69% முறையிடப்படுவதில்லை என ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம்(UNFPA) ஐந்து மாகாணங்களில் நடாத்திய ஆய்வு தெரிவிக்கிறது. 

2018 இல், பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை தடுப்பதற்கும், பொது நிறுவனங்களை ஸ்திரப்படுத்தவும் கனடா உயர்ஸ்தானிகராலயம் CAD 900,000ஐ UNFPA இற்கு வழங்கியிருந்தது. இந்த 2.5 வருட செயற்றிட்டம் “அவளுடன் நாம்” ஆனது UNFPA இனால் பெண்கள் , சிறுவர் விவகாரங்கள் , உலர்வலய அபிவிருத்தி அமைச்சு , புள்ளிவிபரவியல் திணைக்களம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணையத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. அரசசேவை அதிகாரிகள் பால்நிலை அடிப்படையிலான வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கவும், அவர்களுக்கு பாதுகாப்பு, நலவாழ்வு மற்றும் நீதி கிடைக்க துணை நிற்பதையும் உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டது. 

6 ஜூன் 2019 அன்று, இந்த செயற்றிட்டம் வழியாக நிறைவேற்றப்பட்ட முக்கிய பணிகள் மற்றும் மேலும் எதிர்காலத்தில் அதை எடுத்துச்செல்ல வேண்டிய விதம் ஆகியவற்றை குறித்து பகிர்ந்து கொள்ள முன்னேற்ற மதிப்பீட்டு கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டிருந்தது. 


நிகழ்வில் பெண்கள் , சிறுவர் விவகாரங்கள், உலர்வலய அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி. தர்ஷன சேனநாயக்க, பேசிய போது யாரும் கைவிடப்பட்டிராததை உறுதி செய்ய பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பில் ஆதார அடிப்படையிலான கொள்கைகள் அவசியம் ஆகும். UNFPA மற்றும் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகராலயம் ஆகியன பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை எதிர்கொள்வது பொருட்டில் எங்களது அலுவலர்களின் திறன்களை விருத்தி செய்ய பெரும் பங்காற்றியுள்ளன.”
திருமதி. இந்து பண்டார, புள்ளி விவரவியல் திணைக்களத்தின் நிர்வாக இயக்குனர், கருத்து தெரிவிக்கும் போது “ பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான வன்முறை குறித்த தரவுகள் இந்த பிரச்சனையின் ஆழத்தை புரிந்து கொள்ளவும் வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஒரு ஒருங்கிணைந்த, முறைப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதலை உறுதிப்படுத்தவும் அவசியம் ஆகும், 
UNFPA பிரதிநிதி ரிட்சு நக்கேன் கருத்து தெரிவித்தபோது “ துயரமான ஈஸ்டர் வன்முறை தாக்குதல்கள் வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை எமக்கு நினைவுறுத்தின.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கெதிராக செயலாற்றுதல் சமாதானமான இலங்கையை உருவாக்குவதில், சமுதாயத்தின் பன்முகத்தன்மையை மதித்து ஏற்றுக்கொள்ளும் இலங்கையின் பயணத்தில் முக்கிய பங்கான பால்நிலை சமத்துவத்தை முன்னேற்றுவதில் முக்கியமான ஒரு படியாகும்” என்று தெரிவித்தார்.
திரு. க்ளோட் கொலேட், அபிவிருத்தி ஆலோசகர், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகராலயத்திற்கான கூட்டுத்தாபன தலைவர் பேசும்போது “ பால்நிலை சமத்துவத்திற்கான பெரியதொரு எதிர்மறை காரணி பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை ஆகும். கனடாவின் பெண்ணியத்துக்கான சர்வதேச உதவிகொள்கையின் முக்கிய முயற்சிகளில் ஒன்றான இந்த செயற்றிட்டத்தில் பங்குபெறுவதில் கனடா மிக்க மகிழ்ச்சியடைகிறது” என்றார்.

இலங்கை மனித உரிமை ஆணையத்தின் தலைவர் Dr. தீபிகா உடகம வன்முறையின் கட்டமைப்பை புரிந்து கொள்வதன் அவசியம் குறித்து பேசியபோது “சமூகம் ஆண்களும் பெண்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பதால் பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை சாதாரணமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது பெண்களின் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகளை பாதிக்கிறது. பெண்கள் தாங்கள் விரும்பிய படி குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்களா? இல்லையேல் கலாச்சார அடிப்படையிலான கடமை என்ற ரீதியில் பெற்றுக்கொள்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியதோடு “ இலங்கைப்பெண்கள் கடந்த காலங்களில் நிறைய சாதித்திருக்கிறார்கள் இருந்தும் இவ்வன்முறையின் கட்டமைப்பு காரணமாக எம் முன்னேற்றத்தில் தடங்கல் ஏற்படுகிறது” என்று தெரிவித்தார்.
பெண்களுக்கெதிரான வன்முறையின் அனைத்து வடிவங்களையும் ஒழிக்க ஒவ்வொரு பொலிஸ் அதிகாரியும், ஒவ்வொரு வைத்தியரும், ஒவ்வொரு தாதியும் மற்றும் ஒவ்வொரு அரச அலுவலரும் அவளுக்கு துணை நிற்க வேண்டும். நாங்கள் அவளுடன் துணை நின்றால் மட்டுமே வன்முறை அற்ற இலங்கையை உருவாக்க முடியும்.