மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


மின் சக்தியினை சேமிப்பதற்கான புதிய வேலைத் திட்டம் ஆரம்பம்!!

ஆசியாவில், உற்பத்தி மற்றும் விநியோகத்தில் அதிகுறைந்த மின் விரயத்தைக் கொண்டுள்ள நாடு இலங்கையாகும். 24 மணித்தியாலமும் நியாயமாக மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் 92 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் ஆசிய நாடுகளில் குறைந்த மின்சாரக் கட்டணத்தையும், இலங்கையே முறையாகக் கொண்டுள்ளது எனலாம்.

இந்தியாவின் தமிழ்நாட்டில், 30 அலகுக்கும் குறைந்தளவு ​மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் மக்களுக்கு, மின் அலகொன்றுக்காகச் செலவிடப்படும் தொகையிலும் பார்க்க மிகக் குறைந்த தொகையே, இலங்கையில் செலவிடப்படுகிறது. தமிழ்நாட்டின் சென்னை நகரில், தினமொன்றுக்கு 02 மணித்தியால மின் துண்டிப்பும் கிராமங்களில் 08-12 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பும், வாரத்துக்கு தொழிற்சாலைகளுக்காக இரு தினங்கள் மின் துண்டிப்பும் நடைபெறுகின்றது. ஆனால் இலங்கையில், தொழிற்சாலைகள் மற்றும் வீட்டுப் பாவனையாளர்களுக்கு, 24 மணித்தியாலமும் மின்சாரம் விநியோகிக்கப்படுகின்றது.

இலங்கையில், 1988ஆம் ஆண்டு தொடக்கம் நிலக்கரி உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்க மேற்கொண்ட முயற்சி, அரசியல் தீர்மானம் பெற்றுக்கொள்ள முடியாமை காரணமாக 2006ஆம் ஆண்டு வரையிலும் வெற்றியளிக்கவில்லை. பின்னர், குறைந்த செலவில் மின் உற்பத்தி மேற்கொள்ளும் நிலையங்கள் இரண்டான புத்தளம் லக்விஜய, இஹல கொத்மலை ஆகிய நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டன. இருந்தும், மின்சாரத்துக்கான கேள்வி, அதிகரித்துக்கொண்டே செல்வதால், இருக்கின்ற வளங்களைக் கொண்டு அதைப் பூர்த்தி செய்வதற்கான கடப்பாடு, அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், மின்சக்திப் பாதுகாப்பும் செயற்றிறன்மிக்கப் பயன்பாட்டுச் சேமிப்பும் தொடர்பான தேசிய வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

ஜனாதிபதி செயலகமும் இலங்கை பேண்தகு சக்தி அதிகார சபையும் இணைந்து, இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்த மின்சக்தி அமைச்சு, இந்த வேலைத்திட்டத்துக்காக, அனைத்து அமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், அதிகார சபைகள் என்பவற்றையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியது. 

இதன்படி, மேற்படி அனைத்து நிறுவனங்களுக்குள்ளேயும் மின்சக்தி முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு, அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக, மின்சக்தி பாதுகாப்புக் குழுவொன்றை நியமிக்கவே எதிர்பார்ப்பதாக, அமைச்சு தெரிவித்தது. 

இந்தக் குழுவினூடாக, உரிய நிறுவனத்துக்குள் மின்சக்திப் பயன்பாடு தொடர்பில் கண்டறிந்து, அதன் சிக்கனப் பயன்பாடு குறித்தும் செயற்றிறன்மிக்க சேமிப்பு குறித்தும் அவதானம் செலுத்தி, அதற்கேற்றவாறு செயற்படுவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமென்றும், அமைச்சு கூறியது.  

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சக்திப் பிரச்சினைக்கு, நிலையான தீர்வுகளைத் தேடும் நோக்கிலேயே, இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. 

இதற்காக, மின்சக்தி பாதுகாப்பும் செயற்றிறன்மிக்கப் பயன்பாட்டுச் சேமிப்பும் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்துக்குரிய புதிய சுற்றுநிரூபமொன்றை வெளியிட்டு, இதற்காக அரச ஊழியர்களை ஈடுபடச் செய்வதற்கும் அதற்கான அவர்களை ஊக்குவிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வேலைத்திட்டத்தினூடாக, வருடந்தோறும், 300 கிகாவொட் மணித்தியாலங்களைச் சேமிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதோடு, இது, இலங்கையில் 10 நாள்களுக்குரிய மின்சாரத்துக்கான கேள்வியாகும். 

இதன்படி, இந்த மின்சக்திப் பாதுகாப்பும் செயற்றிறன்மிக்க சேமிப்பினூடாக, அனைத்து அரச அலுவலகங்களிலும், முன்னைய வருடங்களுடன் ஒப்பிடுமிடத்து, 10 சதவீத மின்சக்தியையும் எரிபொருள் பாவனையையும் குறைத்துக்கொள்ள முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது. 

நாள்தோறும் அதிகரித்துவரும் மக்கள் சனத்தொகைக்கு ஏற்ப, மின்சாரத்துக்கான கேள்வியும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. ஆனால், அந்தக் கேள்விக்கான மின்சக்தி உற்பத்தியென்பது, சாத்தியமற்றதாகவே காணப்படுகின்றது. காரணம், அந்த உற்பத்திக்குத் தேவையான வளங்கள், குறைவாகக் காணப்படுவதாகும். இது, மின்சக்தி உற்பத்தியில், நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. 

விசேடமாக, இலங்கை போன்ற வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்ட நாட்டில், பொதுமக்களுக்குத் தேவையானளவு மின்சக்தியை உற்பத்தி செய்வதென்பது பிரச்சினைக்குரிய விடய​மாகும். இதை, இலங்கை போன்ற பல நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன. 

ஆகக் குறைந்த கட்டணத்தில் மின்சார உற்பத்தியை மேற்கொள்வதாயின், அதற்கு நீரைப் பயன்படுத்துவதே சிறந்ததாகும். இலங்கை போன்ற நாடுகளுக்கு, அதுவே சிறந்த வழியுமாகும். ஆனால், நீரேந்துப் பிரதேசங்கள் வற்றிப்போகும் காலங்களில், மின்சார உற்பத்தியென்பது, கேள்விக்குறியாகிவிடும். இன்று இலங்கை, அந்தப் பிரச்சினையையே எதிர்கொண்டுள்ளது. இதனால், மின்சார உற்பத்திக்காக, இலங்கையின் தேசிய ஏற்றுமதி வருமானத்திலிருந்து 25 சதவீதத்தை, வருடந்தோறும் ஒதுக்கவேண்டிய நிலைமை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. 

அத்துடன், பொதுமக்களின் முறையற்ற மின்சாரப் பாவனை காரணமாக, 25 சதவீத மின்சாரம், வீணடிக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால், மின்சக்திப் பாதுகாப்பும் செயற்றிறன்மிக்கப் பயன்பாட்டுச் சேமிப்பும் தொடர்பான தேசிய வேலைத்திட்டம் காரணமாக, மின்சாரப் பாவனையாளர்களான பொதுமக்கள், மின்சாரத்தை வீண்விரயமாக்காமல், அதனைச் செயற்றிறன்மிக்க வகையில் பயன்படுத்தப் பழக்கப்படுவர் என்பது தின்னம். அத்துடன், மின்சாரத்தைச் சேமிக்கவும் நாடு தற்போது எதிர்நோக்கிவரும் மின்சாரப் பிரச்சினையிலிருந்தும் எதிர்காலத்தில் எதிர்நோக்கவுள்ள மாபெரும் மின்சார நெருக்கடியிலிருந்தும் விடுபடவும் முடியுமென்பதே, அனைவரதும் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாகும்.

No comments

Powered by Blogger.