போத்துக்கேயரின் சிற்பத்தை கோபுரத்தில் தாங்கிய இந்து ஆலயம்!!

                                                                                                                                 - ஆர்.கே -
இந்து மதத்தை பொறுத்தவரையில் ஆலயங்கள் என்பது இன்றியமையாத ஒன்றாகவே திகழ்கிறது; இறைவனை உள்ளன்போடு தரிசிப்பதற்கான சிறந்த இடமாக இந்துக்களின் வழிபாட்டு தலங்களே முதன்மையாக திகழ்கின்றன; இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்” என வேதாந்தங்கள் கூறினாலும் இறைவனை தரிசிக்க ஏற்ற இடம் ஆலயமே எனலாம்.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என எம் முன்னோர்களின் கூற்றிற்கமைவாக உண்மையில் பிரதானமான காரணமாக அமைவது கோயில்களின் கோபுரமாகும்; கோயில் கோபுரங்கள் தொலைதூரத்தில் இருக்கும் ஒருவருக்கும் ஆலயத்திற்கு வராமல் இறைவனை தரிசிக்கும் வாய்ப்பை வழங்கி நிற்கிறது; கோயில் கோபுரம் உயரமாகவும் மேலே கலசங்களுடனும் அமைக்கப்படுவதற்கு நிறைய காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மையில் அதற்கான காரணம் கோபுரத்தின் மேல் காணப்படும் கலசங்கள் இடி,மின்னல் தாங்கிகளாக செயற்பட்டு அவ் அனர்த்தங்களின் போது எமக்கு பாதுகாப்பை வழங்கி நிற்கிறது; இத்தகைய சிறப்புக்களை கொண்ட ஆலய கோபுரங்களில் வழமையாக கடவுள்களின் திருவுருவ சிற்பங்கள் மற்றும் தேவ தேவியர்களின் சிற்பங்களையே கண்ணுற்றிருப்போம்! எனினும் வழமைக்கு மாறாக ஒரு ஆலயத்தில் கடவுளர் சிற்பங்களோடு போத்துக்கேயர் ஒருவரின் உருவ சிற்பமும் அமையப்பெற்றுள்ளதென்றால் நம்பமுடிகிறதா!? 

அதுவும் இவ் ஆலயம் ஈழத்திலேயே அமையப்பெற்றுள்ளது என்பது ஆச்சரியத்தை தருகின்றதல்லவா!

ஈழத்திருநாட்டில் காணப்படும் இரண்டு தான்தோன்றீச்சரங்களில் ஒன்றாக திகழும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தின் ஆலய கோபுரத்திலேயே இவ்வாறு போத்துக்கேயர் ஒருவரின் உருவத்திலமைந்த சிற்பமும் வைக்கப்பட்டுள்ளது; சைவமும் தமிழும் தழைத்தோங்கும் மட்டுநகரில் இருந்து 13 கிலோ மீற்றர் தொலைவில் கொக்கட்டிச்சோலை எனும் நகரின் மத்தியில் அமைந்துள்ளது இவ் ஆலயம்; கொக்கட்டி மரங்களின் சோலைகள் நிறைந்த இடமாக திகழ்ந்தமையே கொக்கட்டிச்சோலை எனும் பெயரை இவ் ஊருக்கு வழங்க காரணமாயிற்று.

இவ் ஆலய வரலாற்றை பொறுத்தவரையில் கலிங்க தேசத்திலிருந்து வந்து மண்முனை பிரதேசத்தினை ஆட்சி செய்து கொண்டிருந்த குகசேனனின் மகளான உலகநாச்சியார் காலத்தில் அவரது கட்டளையின் பெயரில் காடுகளை அழித்து களனிகளாக மாற்றும் செயற்திட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவ்வேளையில் வேடர்குல திடகன் என்பவன் கொக்கட்டி மரம் ஒன்றின் மரப்பொந்தொன்றிலிருந்து தேன் கசிந்திருப்பதை கண்டு அந்த மரத்தினை வெட்டுவதற்கு முயற்சி செய்த போது அம்மரத்திலிருந்து இரத்தம் குபீரென வெளிப்பட்டதை கண்டு திகைத்துப் போன வேடன் தான் வைத்திருந்த துணியினால் இரத்தம் வெளிப்பட்ட இடத்தினை சுற்றிகட்டிவிட்டு உலகநாச்சியாரிடம் சென்று முறையிட்டான்; உலகநாச்சியார் அவ்விடம் விரைத்தபொழுது அவ்விடத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பதை கண்டு பக்தியுடன் ஆலயம் அமைத்து வழிபட வழி செய்தாள். 

இங்கு காணப்படும் சிவலிங்கம் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டததாகவும், கி.மு 4ம் நூற்றாண்டுகளுக்கும் முற்பட்டதாகவே இருக்க கூடும் என வரலாற்றாசிரியர்கள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதாவது உலகநாச்சியாரினால் கண்டுபிடிக்கப்படமுதலே இது உருவாகியிக்ககூடும். இவ் ஆலயம் குளக்கோட்டன், கலிங்கமாகன், விமலதர்மசூரியன், விக்கிரம இராஜசிங்கன் போன்ற மன்னர்களால் பரிபாலிக்கப்பட்டதாக அறியமுடிகிறது; 
கோபுரத்தில் போத்துக்கேயரின் சிலை அமைக்கப்பட்டதற்கு ஒரு பெரிய வரலாற்று பின்னணியே உள்ளது.

வழமையில் கோபுரங்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் இறைவனின் திருவிளையாடல், அவர்களுடன் சம்மந்தமான நிகழ்வுகளை வெளிக்காட்டும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கும். அந்தவகையில் இவ் ஆலயத்தில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வொன்றினை சித்தரிக்கும் வகையிலேயே போத்துக்கேயர் ஒருவரின் சிலை கோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ளது. 

ஈழத்தில் போத்துக்கேயரின் ஆட்சிக்காலத்தில் ஈழத்தில் காணப்பட்ட இந்து ஆலயங்களை அழிக்கும்படி உத்தரவிடப்பட்டது; இக்காலகட்டத்திலேயே இலங்கையின் பிரதானமான கோயில்கள் தகர்த்தெறியப்பட்டன அந்தவகையில் கொக்கட்டிச்சோலை ஆலயத்தை அழிப்பதற்கு போத்துக்கேய தளபதி ஆலயத்தை நோக்கி பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தான் அவ்வேளை ஆலய பூசகர் நந்தி சிலைக்கு பூசை செய்து கொண்டிருந்தார் இதை கண்ட போத்துக்கேய தளபதி "இந்த மாடு புல் தின்னுமா" என கேட்க பூசாரி பயத்தில் ஆம் என்று கூற தளபதி புல்லை நந்திக்கு வழங்குமாறு கட்டளை பிறப்பித்தான் பூசகர் புல்லை நந்திக்கு திணிக்க முயன்றபோது கல் நந்தி எழுந்து புல்லைத்தின்றது மட்டுமல்லாது சாணமும் இட்டு மீண்டும் கல்லாக அமர்ந்தது இதை கண்டு திகைத்த தளபதி ஆலயத்தை இடிக்கும் முயற்சியை கைவிட்டதுடன் மட்டுமல்லாது ஆலயத்திற்கு நன்கொடைகள் பலவற்றையும் கொடுத்துசென்றான் இந் நிகழ்வினை சித்தரிக்கும் பொருட்டே ஆலய கோபுரத்தில் போத்துக்கேய தளபதியின் சிலை வடிக்கப்பட்டது இச்சிலையினை இன்றும் ஆலய கோபுரத்தில் காணமுடியும் இவ்வாறு உண்மை வரலாற்று நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டு இன்று வரை மங்காப் புகழோடு தலை நிமிர்ந்து தனித்துவமாக இந்துக்களின் வரலாற்று பொக்கிஷமாக ஆன்மீகத் தலமாக அருள் சுரக்கும் இடமாக கரம் கூப்பி தொழுவோர்க்கு இல்லையெனாது அருள் வழங்கும் கற்பக விருட்சமாக திகழ்கிறது கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் என்றால் மிகையாகாது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post