பெண்ணைக் கொலை செய்து எரித்தவர் மினுவாங்கொடையில் கைது!!

பெண் ஒருவரைக் கொலை செய்து சிலாபம் முகுனுவட்டவான் பரப்பன்முல்ல குளக்கரையில் எரித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை மினுவங்கொடை பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி பகல் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து குறித்த பெண்ணின் சடலத்தை அரைவாசி எரிந்த நிலையில் பொலிஸார் மீட்டிருந்தனர்.
சிலாபம் மாவட்ட நீதிபதி மஞ்சுள ரத்நாயக்க குறித்த சடலத்தை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வழங்கிய உத்தரவுக்கு அமைய பிரேத பரிசோதனை மேற்கொண்டபோது கழுத்தை நெரித்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருந்தமை தெரிய வந்திருந்துள்ளது.

இந்தப் பெண் இத்தாலி மற்றும் இந்நாட்டின் பிரஜா உரிமையைப் பெற்றவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இப்பெண்ணின் கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர் சிலாபம் பரப்பன்முல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவராவார். கொலை செய்யப்பட்ட பெண் சிறிது காலம் சந்தேக நபருடன் நட்பை பேணி வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.