மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685


தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலியை சந்தித்தார் மைத்திரி !!

(விஜித்தா)
இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருங்கிய நட்புறவைப் பேணுவது தமது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மானுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின்போதே மைத்திரிபால மேற்கண்டவாறு கூறினார்.
"ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள்" பற்றிய 5ஆவது மாநாட்டில் பங்குபற்றுவதற்காக தஜிகிஸ்தான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது விஜயத்தின் முதலாவது நடவடிக்கையாக தஜிகிஸ்தான் ஜனாதிபதியைச் சந்தித்தார்.
துஷன்பேயில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான சுமுகமான கலந்துரையாடலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்புப் பேச்சுகள் இடம்பெற்றன.
பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் அர்ப்பணிப்புடன் உள்ளன எனவும், எனவே முறையான திட்டமொன்றின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்த வேண்டும் எனவும் இரு தலைவர்களும் கலந்துரையாடினர்.
மேலும், இரு நாடுகளுக்கிடையில் முதலீட்டு மற்றும் வியாபார வாய்ப்புக்களை கண்டறியும் துரித நிகழ்ச்சித் திட்டமொன்று பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
பிராந்திய பாதுகாப்பு தொடர்பிலும் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பது தொடர்பிலும் ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான் 2016ஆம் ஆண்டு தான் இலங்கைக்கு விஜயம் செய்ததை நன்றியுடன் நினைவுகூர்ந்ததுடன், அந்த விஜயத்தின்போது தமக்கு வழங்கப்பட்ட உபசரிப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கைக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையிலான நட்புறவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த விஜயத்தின் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் மேலும் நெருங்கிய உறவுகள் கட்டியெழுப்பப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
ஜனாதிபதி மைத்திரி இன்று முற்பகல் தஜிகிஸ்தான் தேசிய தொல்பொருள் நிலையத்துக்கும் விஜயம் செய்தார். அங்கு வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமை வாய்ந்த புத்தர் சிலையையும் அவர்  பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரி, துஷன்பே நகரில் உள்ள நுரெக் நீர் மின்சார நிலையத்துக்கும் விஜயம் செய்தார். நுரெக் நீர் மின்சார நிலையம் தஜிகிஸ்தானின் பிரதான மின்சக்தி நிலையமாகும்
மின்சக்தி நிலையத்தின் நடவடிக்கைகளை பார்வையிட்ட ஜனாதிபதிக்கு அதன் செயற்பாடுகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

மின்சார நிலைய வளாகத்துக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரியை வரவேற்பதற்காக அமோக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், தஜிகிஸ்தான் நாட்டின் உப பிரதமர் ஜனாதிபதியை வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விருந்துபசாரத்தில் தஜிகிஸ்தான் ஜனாதிபதியும் அந்தா நாட்டின் உப பிரதமரும் கலந்துகொண்டனர்.
ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய 5ஆவது மாநாடு நாளை (15) தஜிகிஸ்தானின் துஷன்பே மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதுடன், அதில் பங்குபற்றுவதற்காக ஆசிய நாடுகளின் பல அரச தலைவர்கள் துஷன்பே நகருக்கு வருகை தந்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை பிற்பகல் மாநாட்டில் உரையாற்றவுள்ளார். அத்துடன், மாநாட்டில் பங்குபற்றும் சில அரச தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

No comments

Powered by Blogger.