நியூயோர்க்கில் கட்டடமொன்றில் மோதிய உலங்கு வானூர்தி; வான் வெளி விதிகளை மீறிய செயற்பாடா?!!

நியூயோர்க் மாநகரத்தின் மென்ஹெட்டன் பகுதியில் உள்ள கட்டடத்தின் மீது மோதிய உலங்கு வானூர்தியை செலுத்திய விமானி அந்த வட்டாரத்தின் வான்வௌி விதிகளை மீறினாரா என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்றுமுன்தினம் நள்ளிரவுக்குப் பின்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உலங்கு வானூர்தியை செலுத்திய விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் இடம்பெற்ற மென்ஹேட்டன் (Manhattan) வட்டாரத்தில் உலங்கு வானூர்தியை செலுத்த அருகிலுள்ள லாகர்டியா (LaGuardia) விமான நிலையத்தில் அனுமதி பெற வேண்டும்.

அத்துடன் 1,100 அடி (335 மீட்டர்) உயரத்திற்கு மேல் செலுத்தப்படும் விமானங்கள் லாகர்டியா விமான நிலையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செலுத்தப்பட வேண்டும்.

இந்தநிலையில் விபத்துக்குள்ளான உலங்குவானூர்தி எவ்வளவு உயரத்தில் செலுத்தப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்குச் சொந்தமான வீடு அமைந்திருக்கும் கட்டடத்துக்கு அருகாமையிலேயே குறித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானது.

தனிப்பட்ட பயன்பாட்டுக்கான அந்த உலங்கு வானூர்தி எதற்காக அந்த பகுதியில் செலுத்தப்பட்டது என்பது குறித்த விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

விசாரணைகளை முன்னெடுத்து வரும் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை, சம்பவத்துக்குப் பயங்கரவாதம் அல்லது குற்றவியல் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.