கடந்த காலங்களில் கைச்சாத்திடப் பட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டது என்பதே உண்மை!!

விழுந்த பாட்டுக்கு குறி சுடுவதில் சிலர் விண்ணர்களாக இருக்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு நிகழ்வு நடந்து முடிந்த பின்னர் “நான் அன்றே சொன்னேன்! நீங்கள் எனது பேச்சைக் கேட்கவில்லை” எனக் கெட்டித்தனம் பேசுவார்கள். இதனை ஆங்கிலத்தில் “one is wise after the event” என்பார்கள்.
“இந்தச் சிங்களத் தலைவர்களை நம்பாதீர்கள். இவர்கள் காலம் காலமாக ஏமாற்றி வந்தவர்கள். இனியும் அதைத்தான் செய்வார்கள். அதனால் குறைந்த பட்சம் அவர்களுடன் எழுத்தில் ஓர் உடன்படிக்கை செய்து அதனடிப்படையில் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் ஏற்பாட்டுக்கு வாருங்கள். பலமான மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தோடு அந்தச் செயற் பாட்டை முன்னெடுங்கள் என்றெல்லாம் கூட்டமைப்புக்கு வெளியில் நின்ற தமிழ்த் தலைவர்கள் பலரும் மாறி மாறி ஆரம்பம் முதல் வற்புறுத்தினார்கள்; திரும்பத் திரும்ப எச்சரித்தார்கள். தமிழ்க் கூட்டமைப்பு கேட்கவில்லை” என காலைக்கதிர் ஆசிரியர் “மாவையின் ஒப்புதல் வாக்கு மூலம்” என்ற தலைப்பில் எழுதிய  ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“குறைந்த பட்சம் அவர்களுடன் எழுத்தில் ஓர் உடன்படிக்கை செய்து அதனடிப்படையில் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் ஏற்பாட்டுக்கு வாருங்கள் எனத் தலைவர்கள் சொன்னார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கேட்கவில்லை.” வெளியில் இருந்து சொன்ன  இந்தத் தலைவர்கள் யார் என்பது தெரியவில்லை.
இப்படி எழுதுபவர்கள், சொல்பவர்கள் வரலாற்றைச் சரியாகப் படிக்கவில்லை போல் தெரிகிறது. அல்லது அதை வசதியாக மறந்துவிட்டு இரட்டை நாக்கோடு பேசுகிறார்கள். அல்லது எழுதுகிறார்கள்.
1957 இல் எழுதப்பட்ட பண்டா – செல்வநாயம் உடன்பாடு எழுத்தில் எழுதிய உடன்பாடுதான். இல்லை என்று யாரும்  மறுக்க முடியாது.
1965  இல் எழுதப்பட்ட  டட்லி – செல்வா உடன்பாடும் எழுத்தில் எழுதிய உடன்பாடுதான். இல்லை என்று யாரும் சொல்ல முடியாது.ஆனால் இந்த இரண்டு உடன்பாட்டுக்கும் என்ன நடந்தது என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். அவை கிழித்தெறியப்பட்டன.

2015 இல் ஒரு உடன்பாடு சிறிசேனா அவர்களோடு எழுதியிருந்தாலும் அதனைக் கிழித்தெறிந்திருப்பார். சிறிசேனா, ரணில், சந்திரிகா ஆகிய மூவரோடும் நடத்திய பேச்சுவார்த்தையில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டன. முக்கியமாக ஒரு புதிய அரசியல் யாப்பின் மூலம் மாகாண அரசுகளுக்கு கூடிய அதிகாரங்களை பகிர்ந்தளித்தல், காணி ஆணையம், காவல்துறை ஆணையம் நிறுவுவது தொடர்பாக இணக்கம் காணப்பட்டது.
இந்தப் பேச்சு வார்த்தைகளின் போது தமிழர் தரப்பு முன்வைத்த கோரிக்கைகளை எழுத்தில் கொடுக்க சிறிசேனா, ரணில், சந்திரிகா முன்வந்தார்கள். அதனை வேண்டாம் என்று சொன்னவர் சம்பந்தன் ஐயா. காரணம் “ஏற்கனவே எழுத்தில் எழுதிய உடன்பாடுகளை கிழித்தெறிந்து விட்டீர்கள். இப்போது எழுதினாலும் அதனை கிழித்தெறிய மாட்டீர்கள் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. இந்தக் கனவான் உடன்பாட்டை இதய சுத்தியோடு நடைமுறைப் படுத்தினால் போதும்” எனச் சொன்னவர் சம்பந்தன் ஐயா.
இப்போது 2014 ஆம் ஆண்டுக் கடைசியில் நிலவிய அரசியல் நிலைப்பாட்டைப் பார்ப்போம். “வி.புலிகளைத் தோற்கடித்து நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து விட்டோம். வி.புலிகளின் இறுக்கமான பிடியில் அகப்பட்டிருந்த தமிழ்மக்களை விடுவித்து விட்டோம். இப்போது நாட்டைக் கட்டியெழுப்ப எனக்கு வாக்களியுங்கள்” என மகிந்த இராசபக்சா சிங்கள – பவுத்த வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.
போர் 2009 இல் முடிவுக்கு வந்தாலும் வட கிழக்கு இராணுவத்தின் பிடியில்தான் இருந்தது. போரில் வெற்றி பெற்றுவிட்டோம் என்ற மமதையில் இராணுவ அதிகாரிகள் வீதிகளில் வலம் வந்தார்கள். புலனாய்வுது: துறையினர் மக்களின் ஒவ்வொரு அசைவையும் கழுகுக் கண்ணோடு கண்காணித்தனர். மக்கள் மூச்சுவிடக் கூடப் பயப்பட்டார்கள்.
வெள்ளைவான் கடத்தல், கிறீஸ் பூதம் ஆங்காங்கே தொடர்ந்து இடம்பெற்றன.
சட்ட ஆட்சி காலால் மிதிக்கப்பட்டுக் குற்றுயிரும் கொலையுயிருமாய் புழுதியில் கிடந்தது. யுத்த மீறல்கள் விசாரணை செய்யப்படாது குப்பைக் கூடத்தில் நிலுவையில் போடப்பட்டது. அவசரகால பாதுகாப்புச் சட்டங்கள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டன. சிங்கள மக்கள் மத்தியிலும் இராசபக்ச விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டார்.
வடக்கில் போர் வெற்றி நினைவுச் சின்னங்கள் கண்ட இடமெல்லாம் முளைத்தன. பவுத்த விகாரைகளை இராணுவம் பவுத்தர்கள் இல்லாத இடமெல்லாம் கட்டினார்கள். மகிந்த இராசபக்ச போர் வெற்றி விழாவை பெரும் எடுப்பில் கொண்டாடினார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களது துயர் துடைக்க இராசபக்ச அரசு ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட முன்வரவில்லை. ஒரு வீட்டைத்தானும் புதிதாகக் கட்டவோ அல்லது உடைந்த வீடுகளைத் திருத்தவோ மகிந்த இராசபக்ச அரசு முன்வரவில்லை. அமைச்சர் பசில் இராசபக்ச வீடுகளைக் கட்டிக் கொடுக்கவோ திருத்தவோ அரசிடம் நிதியில்லை என்று கையை விரித்தார்.
2015 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்த அரசியல் நிலைமை இதுதான். சனாதிபதி தேர்தலில் தமிழ்மக்களுக்கு நேரான தெரிவு இருக்கவில்லை. மகிந்த இராசபக்சாவை

ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றுவதைவிட வேறு வழியும் இருக்கவில்லை.
துணையின்றித் தனித்திருப்பவன் தன்னை எதிர்த்த இரு பகையில் ஒன்றைத் துணையாகக் கொள்ள வேண்டும். இதற்குப் பெயர்தான் அரசியல் சாணக்கியம். இன்றுகூட இதுதான் நிலைமை. அதன் காரணமாகவே இரணில் விக்கிரமசிங்க அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முண்டு கொடுத்து வருகிறது. மக்கள், அரசை எதிர்த்துப் போராட, தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க ஒரு சனநாயக வெளி திறக்கப்பட்டுள்ளது.
இராசபக்ச ஆட்சியை அகற்றுவதில் ததேகூ மட்டும் அல்லாது தமிழ்மக்களது மன ஓட்டமும் அவ்வாறுதான் இருந்தது. அஞ்சல்மூல வாக்கெடுப்பு நடந்து முடிந்த பின்னரே எதிர்க்கட்சிப் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிக்கும் முடிவை ததேகூ இன் தலைவர் சம்பந்தன் ஐயா சனவரி 01, 2015 அன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தார். (https://youtu.be/bKjpMYT_ub8https://youtu.be/bKjpMYT_ub8)
ஆனால் டிசெம்பர் 23, 24, 2014 நாட்களில் அஞ்சல் மூலம் வாக்களித்தவர்களில் பெரும்பான்மை வாக்குகள் சிறிசேனாவுக்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டன. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சிறிசேனாவுகுக்கு 10,885 வாக்குகளும் (69.17 விழுக்காடு) இராசபக்சவுக்கு 4,607 வாக்குகளும் (29.17 விழுக்காடு) கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
காலைக்கதிர் ஆசிரியர் வழக்கம் போல இன்னொரு விடயம் தொடர்பாக தனது இலவச ஆலோசனை வழங்கியுள்ளார்.
“அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஒன்றுபட்டுத் தீர்மானிப்பதற்காக, அனைத்துத் தமிழர் தரப்புகளையும் ஒரு மேசைக்கு அழைக்கும் வேளை – வேலை – கூட்டமைப் புக்கு வந்திருப்பதாக நினைக்கிறோம். தமிழ்த் தலைமை அதைச் செய்யுமா? அல்லது தொடர்ந்தும் கூட்டமைப்பாகத் தனிக் கூத்து முன்னெடுக்குமா?” இதுதான் அவரது விசாரம்.
ஏதோ ததேகூ தான் மேசைக்கு அழைக்கும் வேளை முட்டுக் கட்டையாக இருக்கிறதாக நினைத்து இப்படி எழுதியிருக்கிறார். இது அவலை நினைத்து உரலை இடித்த கதை போன்றது.
ததேகூ பிரிந்து நின்ற கட்சிகளை ஒன்றாக இணைத்த அமைப்பு. அதன் தோற்றம் ஒக்தோபர் 20, 2001 ஆகும். அதனை கிழக்கிலங்கை சிவராம், நடேசன் போன்ற ஊடகவியலாளர்கள் முன்மொழிய வி.புலிகள் அதனை வழி மொழிந்தார்கள். தமிழ்த் தேசியத்தின் பெயரால் கூட்டுச் சேர்ந்த கட்சிகளுக்குள் நீண்ட வரலாற்றையும் மக்கள் ஆதரவையும் பெற்றிருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களே ததேகூ இன் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடலாம் என கஜேந்திரகுமார் முன் வைத்த யோசனையை வி. புலிகள் நிராகரித்து விட்டார்கள்.
ஏப்ரில் 17, 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் கஜேந்திரகுமார் அதே ஆண்டு பெப்ரவரி மாதம் ததேகூ விட்டு வெளியேறினார். வெளியேறிய கையோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற ஒரு காளான் கட்சியை பெப்ரவரி 28, 2010 இல் தொடக்கினார். தமிழ்க் காங்கிரஸ் கட்சியை தமிழ்மக்கள் மத்தியில் விலைப்படுத்த முடியாது என்ற காரணத்தாலேயே ததேமமு தொடக்கப்பட்டது என்பது அரசியலில் அ, ஆ படித்தவர்களுக்குத் தெரியும். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைப் புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாராரே பப்பாசி மரத்தில் ஏற்றினார்கள். அவர் ததேகூ உடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாட்டால் அதிலிருந்து வெளியேறினார் என்பதில் துளியும் உண்மையில்லை. அது வடிகட்டிய பொய்யாகும்.
ஓகஸ்ட் 17, 2015 இல் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் இபிஆர்எல்எவ் கட்சியின் சார்பில் யாழ்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட சுரேஸ் பிறேமச்சந்திரன் 29, 906 வாக்குகள் பெற்று 7 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இன்னொரு இபிஆர்எல்எவ் வேட்பாளர் அனந்தராஜ் 9 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இருந்தும் தான் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் தன்னைத் தேசியப்பட்டியல் நா.உ ஆக நியமிக்குமாறு கேட்டார். மொத்தம் 42,925 வாக்குகள் பெற்று ஆறாவது இடத்தைப் பிடித்த தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர் அருந்தவபாலனை ஓதுக்கிவிட்டு அவரை நியமிப்பது அறம்சார்ந்த அரசியலாக இருக்க முடியாது. இதன் பின்னர் பிறேமச்சந்திரன் ததேகூ இல் சனநாயகம் இல்லை என்று சொல்லி நொவெம்பர் 07, 2017 இல் அதிலிருந்து வெளியேறினார். அவரது கோபம் முழுதும் இரா சம்பந்தர் மற்றும் ம.ஏ. சுமந்திரன் மேல் இருந்தது. இந்த இரண்டு பேரையும் ததேகூ இல் இருந்து அகற்ற தனது புலம்பெயர் ஆதரவாளர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் நிதி திரட்டியிருந்தார்.
முன்னாள் வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவி ஏற்ற சொற்ப காலத்தில் தமிழ் அரசுக் கட்சியோடு முரண்டு பிடிக்கத் தொடங்கினார். தனது வெற்றிக்கு மக்களிடையே தனக்கு இருந்த சொந்தச் செல்வாக்குத்தான் காரணம், தமிழ் அரசுக் கட்சி அல்ல, என பகிரங்கமாக பேசத் தொடங்கினார். அமைச்சர்கள் நியமனத்தில் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டார். தமிழ் அரசுக் கட்சி செய்த பரிந்துரையை புறம்தள்ளிவிட்டுத் தனக்குப் பல்லக்குத் தூக்குபவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கி அழகு பார்த்தார். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பதவியைக் கேட்டார். அது மறுக்கப்பட்ட போது தமிழ் மக்கள் பேரவை என்ற அரசியல்சாராத அமைப்பை டிசெம்பர் 27, 2015 இல் உருவாக்கினார். பின்னர் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஒக்தோபர் 24, 2018 அன்று தொடக்கி தானே அதன் நிறுவனர்/ தலைவர் ஆகிவிட்டார். அதன் மூலம் அவரது ஆசை நிறைவேறிவிட்டது! அவரது கூட்டணியில் இதுவரை ஒரு கட்சிதானும் சேரவில்லை!
இபிஆர்எல்எவ் இருக்கும் இடத்தில் ததேமமு இருக்காது என கஜேந்திரகுமார் வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லி வருகிறார். இவர் யார் அதைச் சொல்வதற்கு என சுரேஸ் பிறேமச்சந்திரன் சண்டைக்குப் போகிறார். இந்த இருவரையும் எப்படி ஒன்று சேர்ப்பது என்பது தெரியாமல் விக்னேஸ்வரன் தலைமயிரைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்!
கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை கொள்கை, கோட்பாடு, இலட்சியம் போன்றவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும். கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே குழிபறிக்கத் திட்டம் தீட்டுவர்களோடு கூட்டணி வைக்க முடியாது.
கோயில் நவக்கிரகங்கள் போல் ஒன்றை ஒன்று பார்க்காது சித்தம் போக்கு சிவன் போக்கு என்று நடந்து கொள்பவர்களை எப்படி ஒரு பட்டியலில் அடைப்பது? மாற்றுத் தலைமை வேண்டும் என்று இரவு பகல் பாராது, பசி நோக்காது, கண்துஞ்சாது எழுதித் தள்ளிய மு. திருநாவுக்கரசு, யதீந்திரா போன்றவர்களே களைத்துப் போனார்கள். விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
“இனியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திட்டித் தீர்த்துக்கொண்டிருப்பதில் நேரத்தைச் செலவழிக்காமல் ஒரு புதிய, பலம் பொருந்திய, பரந்தளவிலான மாற்றுத் தலைமையை உருவாக்கும் தகுதியும், ஆற்றலும் தமக்கு உண்டா என்ற கேள்விக்கு பதில் காணும் வகையில் மேற்படி மாற்றுத் தலைமை அமைய வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்தவர்களின் பணி முன்னிலையில் உள்ளது. மாற்றுத் தலைமையைப் பற்;;றிப் பேசிய மேற்படி தரப்பினர் தமக்கிடையே ஒருவருக்கு எதிராக இன்னொருவர் அம்புகளை ஏவுவதைத் தவிர்த்து பலம்பொருந்திய, பரந்துபட்ட மாற்றுத் தலைமையை தாமதிக்காது உருவாக்க வேண்டிய அவசியத்தை ‘உயிர்த்த ஞாயிறு’ தாக்குதலைத் தொடர்ந்த அரசியல் நிலவரம் பறைசாற்றி நிற்கின்றது.பத்தாவது ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுநாள் இதனை நிறைவேற்றவல்ல ஒரு புள்ளியாய் அமையவல்லதா?” என மு.திருநாவுக்கரசு வாயிலும் வயிற்றிலும் அடித்து ஒப்பாரி வைக்கிறார்.
“மறுபுறமாக புலம்பெயர் சமூகத்தின் பெரும் பகுதியினர் – கூட்டமைப்பின் மீது அதிருப்தியுள்ளவர்களாகவும் மாற்றுத் தரப்புக்களை தேடியவர்களாகவும் இருந்தனர். அதே வேளை, சிறிலங்கா விவகாரத்தை ஜநாவின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்ல வேண்டும், சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றவாறான சுலோகங்களோடு அவர்களது செற்பாடுகள் நகர்ந்தன. ஆனால் அதிலும் கடந்த பத்தாண்டுகளில் எந்தவொரு முன்னேற்றத்தையும் காண்பிக்க முடியவில்லை. மொத்தத்தில் அனைத்து தரப்பினருமே தங்களது தோல்வியைத்தான் பதிவு செய்திருக்கின்றனர்” என யதீந்திரா புலம்புகிறார். அவரே தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர்தான்!
எண்ணிக்கையில் சிறுபான்மை தேசிய இனமான தமிழர் தங்களது உரிமைகளுக்காக சிங்கள – பவுத்த பேரினவாதத்தோடு போராடுவது எளிதான காரியம் அல்ல. சிங்களக் குடியேற்றங்கள், பவுத்த விகாரைகள், தொல்பொருள் திணைக்களத்தின் பேரில் நிலப்பறிப்பு, அரச வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு போன்றவற்றுக்காக ஓயாது போராட வேண்டியுள்ளது. பல போராட்டங்கள் தோல்வியிலும் முடிந்துள்ளன. அதற்காக போராட்டத்தை கைவிட வேண்டியதில்லை. தமிழரது உரிமை பற்றிய போராட்டத்தை உலக மயப்படுத்தியுள்ளோம். ஐநாமஉ பேரவையில் அது பேசு பொருளாக இருக்கிறது.
பூகோள அரசியலில் எந்த நாடும் தனித் தீவாக இயங்க முடியாது. சிறிலங்கா ஐநாமஉ பேரவைத் தீர்மானங்களை புறந்தள்ள முடியாது. அப்படிப் புறந்தள்ள நினைத்தால் அதற்கான விலையை சிறிலங்கா கொடுக்க வேண்டி இருக்கும்.
மாற்றுத் தலைமைக்காக ஏங்கும் சிலருக்கு ஒரு அறிவுரை. தலைவர்களை அங்காடிகளில் வாங்க முடியாது. அல்லது அவர்களை நகை, நட்டுப்போல் இணக்க முடியாது. அல்லது செயற்கையாக உருவாக்க முடியாது. அவர்கள் மக்களிடம் இருந்துதான் வரவேண்டும். இதுதான் இன்றைய யதார்த்தம். அதனை மாற்றுத் தலைமையை உருவாக்கப் பாடுபடுவோர் புரிந்து கொள்ள வேண்டும்.
நூற்றுக் நூறு விழுக்காடு ஒற்றுமை ஒருபோதும் இருக்க மாட்டாது. வி. புலிகள் காலத்திலும் அவ்வாறான ஒற்றுமை இருந்ததில்லை. ததேகூ யை எழுபது விழுக்காடு தமிழ்மக்கள் ஆதரிக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் அதைத்தான் காட்டுகிறது!

0/Post a Comment/Comments

Previous Post Next Post