இலங்கை வைத்தியர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் குற்றவாளியென; ஆஸி நீதிமன்றம் தீர்ப்பு!!

அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவரை பாலியல் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கில் இலங்கையரான மருத்துவர் ஒருவர் குற்றவாளி என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

49 வயதான பிரியந்த பத்மிகே தயானந்த எனும் மருத்துவரே இவ்வாறு குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.

மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் வைத்தியசாலையொன்றில் தான் பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டதாக பெண்ணொருவர் முறைப்பாடு செய்திருந்தார்.

பன்பரி நகரிலுள்ள வைத்தியசாலையொன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் 2017 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இச்சம்பவம் இப்பாலியல் தாக்குதல் இடம்பெற்றதாக அப்பெண் தெரிவித்துள்ளார். அடிவயிற்றில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின்பின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.மேற்படி மருத்துவர், வைத்தியசாலை அறையில் அவருக்குப் பின்னாலிருந்த திரைச்சீலையை மூடிவிட்டு, தனது ஆடையையும் பிராவையும் கழற்றியதுடன் அவரின் கையை தனது உள்ளாடைக்குள் நுழைத்தார் என 45 வயதான அப்பெண் முறைப்பாடு செய்திருந்தார்.

இச்சம்பவத்தையடுத்து வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்படாமலேயே தான் வெளியேறி டெக்ஸி பிடித்த வீடு சென்றதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.

பின்னர் சுமார் 6 வார காலம் அப்பெண்ணுக்கு மருத்துவர் பிரியந்த தயானந்த குறுஞ்செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்ததாகவும், ‘அவசரசிகிச்சைப் பிரிவில் ‘உங்கள் அழகிய வயிற்றை நான் தொட்டதை எண்ணுகிறேன்’ என ஒரு தகவலில் குறிப்பிட்டிருந்ததாகவும் முறைப்பாடு செய்யப்பட்டது.

மேற்படி பெண் இது தொடர்பாக முறைப்பாடு செய்த பின்னர், மருத்துவர்களின் புகைப்படங்களிலிருந்து குறித்த மருத்துவரை அடையாளம் காட்டுமாறு வைத்தியசாலை அதிகாரிகளால் அப்பெண் கோரப்பட்டார்.

எனினும் அவர் மற்றொரு மருத்துவரின் படத்தை காண்பித்தார். மீண்டும் பார்த்து உரிய நபரை அடையாளம் காட்டுமாறு அப்பெண்ணை உத்தியோகத்தர்கள் ஊக்குவித்தனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரே குற்றம் புரிந்தவர் என, மருத்துவர் பிரியந்த தயானந்த சார்பில் ஆஜரான சட்டத்தரணி வாதாடினார். எனினும், குறித்த பாகிஸ்தான் மருத்துவர் அதை நிராகரித்தார்.

மருத்துவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்கையில், அப்பெண்ணை தான் முறையற்றவிதமாக தொடவில்லை எனக் கூறினார். அப்பெண்ணைப் போன்ற ஒரு யுவதியை தான் முறையற்ற விதமாக அப்படித் தொடப்போவதில்லை எனவும் ஏனெனில் அவர் வசீகரமற்றவர் எனவும், நோயுள்ளவர் எனவும், தனக்கு ஒரு மனைவி இருப்பதாகவும் தெரவித்தார்.

ஒரு பிள்ளையின் தந்தையான மருத்துவர் தயானந்த, மேற்படி பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பவில்லை எனவும் கூறினார்.

ஆனால், அவரின் தொலைபேசியிலிருந்து அக்குறுஞ்செய்திகள் எவ்வாறு அனுப்பப்பட்டன என்பதை அவரல் விளக்க முடியவில்லை.

இவ்வழக்கில் வைத்தியர் பிரியந்த பத்மிகே தயானந்த குற்றவாளி என மேற்கு அவுஸ்திரேலிய மாவட்ட நீதிமன்றமொன்று தீர்ப்பளித்தது.

அவருக்கான தண்டனை எதிர்வரும் 21 ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதி பெலிண்டா லோன்ஸ்டேட் அறிவித்தார்.

அதுவரை, கடும் நிபந்தனைகளுடன் மருத்துவர் பிணையில் செல்ல பிரியந்த தயானந்தவுக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.