தர்ம சக்கர ஆடை விவகாரம்: ஹசலக பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம்!!

ஹசலக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சந்தன நிஷாந்த  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தர்ம சக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு மஹியங்கனை – ஹசலக பிரதேசத்தைச் சேர்ந்த  முஸ்லிம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஹசலக பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக உள்ளக நடவடிக்கையாக அவர் இவ்வாறு குருணாகல் பொலிஸ் நிலையத்தின் சாதாரண கடமைகள் தொடர்பில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் சேவை அவசியம் கருதி அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக, இடமாற்றங்கள் தொடர்பில் வழமையாக பொலிஸார் கூறும் காரணத்தை உத்தியோகபூர்வமாக பொலிஸ் தலைமையகம் அறிவித்தது. 

பாத்திமா மஸாஹிமா எனும் பெண் தர்மச் சக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்தார் என குற்றம் சுமத்தி  சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தனர். இந்த சம்பவம் மஹியங்கனை நீதிவான் உள்ளிட்ட பலரின் கண்டனத்துக்கு உள்ளாகியிருந்தது.


எவ்வாறாயினும் குறித்த ஆடையில் இருந்தது தர்ம சக்கரம் தான் என இதுவரை பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவிக்காத நிலையில்  குறித்த பெண்ணை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல மஹியங்கனை நீதிவான் ஏ.ஏ.பி. லக்ஷ்மன் அனுமதித்திருந்தார்.

No comments

Powered by Blogger.