லிபியா தடுப்பு முகாம் மீதான தாக்குதலில் 40 குடியேற்றவாசிகள் கொல்லப்பட்டுள்ளனர்!!

லிபிய தலைநகர் திரிபோலியின் புறநகர் பகுதியில் உள்ள குடியேறிகள் தடுப்பு முகாம் ஒன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலில் 40 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த முகாம் மீது வான் தாக்குதல் ஒன்று இடம்பெற்றதாக திரிபோலியை தளமாகக் கொண்டு இயங்கும் ஐ.நா ஆதரவு லிபிய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் மேலும் 80 பேர் காயமடைந்துள்ளனர்.

அரச எதிர்ப்புப் போர்த் தலைவர் கலீபா ஹப்தரின் படை இந்தத் தாக்குதலை, அரச படை நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது.

இதில் லிபியா ஊடான ஐரோப்பாவை கடக்க முயற்சிக்கும் ஆபிரிக்க நாட்டு புலம்பெயர்வோரே அதிகம் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான ஆயிரக்கணக்கான குடியேறிகள் தடுக்கப்பட்டு அரசினால் நடத்தப்படும் தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

லிபியாவின் நீண்டகாலத் தலைவர் முஅம்மர் கடாபி 2011இல் பதவி கவிழ்க்கப்பட்டு கொல்லப்பட்டது தொடக்கம் லிபியாவில் அரசியல் பதற்றம் மற்றும் வன்முறைகள் நீடித்து வருகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நேரடித் தாக்குதலுக்கு இலக்கான டஜுரா தடுப்பு மைய கொட்டகை ஒன்றில் சுமார் 120 குடியேறிகள் இருந்ததாக அவசர சேவைகள் பிரிவின் பேச்சாளர் ஒசாமா அலி ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

இந்த தடுப்பு முகாமில் சுமார் 600 குடியேறிகள் தங்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

தாக்கப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் இருப்பதாக ஐ.நா ஆதரவு அரசியல் குழுவின் குமா எல் கமட்டி குறிப்பிட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற லிபிய சுகாதார அமைச்சின் அதிகாரியான மருத்துவர் காலித் பின் அத்தியா அங்கு ஏற்பட்டிருக்கும் படுகொலைகள் குறித்து விபரித்துள்ளார்.

“மக்கள் எல்லா இடமும் சிதருண்டுள்ளனர். முகாம் அழிக்கப்பட்டுள்ளது. மக்கள் அழுதபடி உள்ளனர். அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை எம்மால் தெளிவாக பார்க்க முடியாமல் இருந்தது. ஆனால் ஆம்புலன்ஸ் வண்டிய வந்த பின் பயங்கரமாகவும், எல்லா இடங்களிலும் இரத்தம் படிந்தும் காணப்பட்டது. சில உடல்கள் துண்டு துண்டாக சிதறி இருந்தன” என்று அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா ஆதரவு தேசிய உடன்படிக்கை அரசின் பிரதமர் பாயிஸ் அல் சர்ராஜ், தன்னிச்சையாக உருவாக்கப்பட்ட தேசிய லிபிய இராணுவம் இந்த மைத்தின் மீது வான் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

முன்கூட்டி திட்டமிட்டு, துல்லியமாக இந்தக் கொடிய குற்றம் இழைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் ஜெனரல் ஹப்தரின் படை அரச படையுடன் சண்டையிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. திரிப்போலி இலக்குகள் மீது கடும் வான் தாக்குதல்களை ஆரம்பித்ததாக ஹப்தர் படை கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தமது போர் விமானங்கள் தடுப்பு முகாமுக்கு அருகில் உள்ள அரச ஆதரவு முகாம் மீது வான் தாக்குதல் நடத்தியதாகவும் அரச ஆதரவுப் படை நடத்திய பதில் தாக்குதலில் இந்த தடுப்பு முகாம் இலக்காகி இருப்பதாகவும் ஹப்தர் படை தனது சார்பு விளக்கத்தை அளித்துள்ளது.

இந்த தாக்குதலின் பின்னணியில் யார் இருப்பது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று ஐ.நா அகதி நிறுவனத்தின் பேச்சாளர் சார்லி ஹெக்ஸ்லி ரோய்ட்டர்ஸுக்கு குறிப்பிட்டுள்ளார்.

லிபியாவில் எந்த தரப்பும் நாட்டை முழுமையாக கட்டுப்படுத்தவில்லை என்பதோடு, பல போட்டி அரசுகள் மற்றும் ஆயுதக் குழுக்கள் அதிகாரத்தில் உள்ளன. இதில் பிரதான இரு தரப்புகளாக பிரதமர் சர்ராஜ் மற்றும் ஹப்தர் தலைமையிலான தரப்புகள் உள்ளன.

ஜெனரல் ஹப்தர், அரசுக்கு எதிராக கடந்த ஏப்ரலில் தாக்குலை ஆரம்பித்தார்.

கடந்த நான்கு தசாப்தத்திற்கு மேலாக லிபிய அரசியலில் ஈடுபட்டு வரும் ஹப்தர் கடாபியின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து 1980களில் பிளவுபட்டதை அடுத்து நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார்.

2011 கிளர்ச்சிக்குப் பின் மீண்டும் லிபியா திரும்பிய ஹப்தர் நாட்டின் கிழக்கு பகுதியில் தனது அதிகாரத் தளத்தை கட்டியெழுப்பினார். அவருக்கு பிரான்ஸ், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆதரவு உள்ளது.

கடந்த காலத்தில் கடாபியுடன் தொடர்புபட்டிருந்த அவரின் செயற்பாடுகள் குறித்து லிபிய மக்களிடை முரண்பட்ட நிலைப்பாடுகள் உள்ளன. பெங்காசி நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இருந்து இஸ்லாமியவாதிகளை வெளியேற்றுவதில் அவர் முன்னின்று செயற்பட்டார்.

அரசியல் பதற்றம் நிலவும் லிபியாவில் ஆட்கடத்தல்காரர்களின் செயற்பாடு அதிகரித்துள்ளது. ஆபிரிக்காவின் துணை சஹாரா பிராந்தியத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு சில டொலர்களுக்கு லிபியாவை நோக்கி ஆட்கடத்தப்படுவது இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு லிபியாவில் இருந்த ஐரோப்பாவுக்கு செல்ல முயற்சிக்கும் குடியேறிகள் நிறுத்தப்பட்டு தடுப்பு முகாம்களில் வைக்கப்படுவதோடு அவ்வாறான தடுப்பு முகாம்கள் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post