அமெரிக்க வர்த்தக ஆணைக்குழுவின் அனுமதியோடு; பேஸ்புக் நிறுவனத்திற்கு 500 கோடி டொலர் அபராதம்!!பாவனையாளர்களின் அந்தரங்க உரிமை மீறல்கள் தொடர்பாக நிறுவனத்துக்கு 500 கோடி அமெரிக்க டொலர்கள் (சுமார். 88,070 கோடி இலங்கை ரூபா, சுமார் 34,280 கோடி இந்திய ரூபா) அபராதம் விதிப்பதை அமெரிக்க வர்த்தக ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா எனும் அரசியல் ஆலோசனை நிறுவனமானது, பேஸ்புக் பாவனையாளர்கள் 87 மில்லியன் (8.7கோடி) பேரின் தரவுகள், தகவல்களை
 
முறையற்ற விகிதமாக பெற்றுக்கொண்டது என குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பாக அமெரிக்க சமஷ்டி வர்த்தக ஆணைக்குழு 2018 மார்ச் மாதம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

பாவனையளர்களின் தரவுகளை பெற்றுக்கொள்ளும்போது, அது தொடர்பாக அவர்களுக்குத் தெளிவாக அறிவிக்கப்பட்டு, அவர்களின் சம்மதம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற 2011 ஆம் ஆண்டின் உடன்படிக்கையை பேஸ்புக் மீறிவிட்டதா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக 5 பில்லியன் (500 கோடி) டொலர் அபராதம் விதிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்க சமஷ்டி வர்த்தக ஆணைக்குழுவின் வாக்கெடுப்பில் 3:2 விகிதத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறெனினும், இந்த அபராதத்தை அமெரிக்க நீதித் திணைக்களத்தின் சிவில் பிரிவும் அங்கீகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பேஸ்புக், மற்றும் அமெரிக்க சமஷ்டி வர்த்தக ஆணைக்குழுவினால் அறிவித்தல் எதுவும் விடுக்கப்படவில்லை.

அடுத்த ஜென்மத்தில் நீங்கள் என்னவாக இருப்பீர்கள் என்பது போன்ற புதிர்ப்போட்டிகளை விளையாடும்போது பாவனையாளர்களின் தகவல்கள் சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பேஸ்புக் ஊடாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் பெற்றுக்கொண்ட தரவுகள், 2016 ஆம் ஆண்டின் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்துக்காக வாக்காளர்களின் உளவியல் விபரங்களை சேகரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

No comments

Powered by Blogger.