மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


உள்ளூராட்சி மன்றத்தில் அனுமதி பெறவேண்டும்; சுமத்திரனின் வெற்றியளித்த வாதம்!!

உள்ளூராட்சி மன்ற எல்லைகளிற்குள் நாட்டும் கம்பங்களிற்கு குறித்த வீதியின் ஆளுகை திணைக்களத்துடன் உள்ளூராட்சி மன்றங்களின் அனுமதியையும் பெற்றுக்கொள்ள தனியார் ஊடக நிறுவனம் மேன் முறையீட்டு நீதிமன்றில் இணக்கம் தெரிவித்த அடிப்படையில்யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு எதிரான வழக்கு முடிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் மாநகர சபையின் அனுமதி இன்றி தனியார் ஊடக நிறுவனம் ஒன்று கம்பங்களை நாட்டியுள்ளது. இதை மாநகர சபை பிடுங்கி அகற்றியுள்ளது.

அவ்வாறு கம்பங்கள் அகற்றப்பட்ட சமயம் தமது சொத்திற்கு சேதம் ஏற்படுத்தியதாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அதே நேரம் உள்ளூராட்சி சபைகளின் எல்லைப் பகுதிகளானாலும் வீதி அபிவிருத்தி அதிகார சபைகளின் ஆளுகை வீதியோரம் வீதி அதிகார சபையின் அனுமதியுடன் மின் கம்பம் நாட்ட முடியும். அவற்றினை உள்ளூராட்சி மன்றங்கள் தடை போட முடியாது என உத்தரவிடக் கோரி தனியார் ஊடக நிறுவனம் மேன் முறையீட்டு நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஊடாக வழக்கு தாக்கல் செய்துள்ளது.

இதேநேரம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி உள்ளூராட்சி அதிகார சபைகளின் அனுமதி தேவை கிடையாது வீதி அபிவிருத்தி அதிகார சபைகளின் அனுமதி போதுமானது என்பதனை ஏற்க முடியாது.

வீதி அதிகார சபை தனது வீதியோரம் நாட்டுவதற்கான சிபார்சை அல்லது அனுமதியை வழங்க முடியும். ஆனால், இது உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம். ஆகவே அங்கே அனுமதி பெற்றே ஆக வேண்டும்.

இதேநேரம் குறித்த தனியார் ஊடக நிறுவனம் தற்போது அனுமதி பெற்றிருப்பினும் கம்பங்களை நாட்டும் போதும், குறித்த வழக்கை தாக்கல் செய்யும்போதும் ஒளிபரப்பு அனுமதியும் கிடையாது என்ற வாதத்தை முன்வைத்தார்.

இவற்றைக் கேட்டறிந்த நீதியரசர்களான யசந்த கொதாகொட மற்றும் அர்ச்சுனா ஒபயசேகர ஆகியோர் மேலதிக விளக்கங்களுடன் முறைப்பாட்டு சட்டத்தரணியை வினாவிய போது, உள்ளூராட்சி மன்ற எல்லைகளிற்குள் நாட்டும் கம்பங்களிற்கு குறித்த வீதியின் ஆளுகை திணைக்களத்துடன் உள்ளூராட்சி மன்றங்களின் அனுமதியையும் பெற்றுக்கொள்ள தனியார் ஊடக நிறுவனம் சார்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இதே ஒத்த ஓர் வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றிலும் இடம்பெறும் நிலையில், குறித்த வழக்கை கை வாங்கவும் தனியார் ஊடக நிறுவனம் இணைக்கம் தெரிவித்த நிலையில் கடந்த 10ஆம் திகதி வழக்கு முடிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.