மாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0771519458


ஹெச்.ஐ.வி-க்கு மருந்து... முதல்கட்ட வெற்றி

மனித குலத்துக்கு சவால்விடும் ஓர் உயிர்க்கொல்லி நோய் ஹெச்.ஐ.வி. இந்தக் கிருமி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை காலிசெய்துவிடும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டுமொத்த செயல்பாட்டையும் முடக்கிவிடும். ஹெச்.ஐ.வி கிருமிகளை, கட்டுப்படுத்தி தங்களின் வாழ்நாளை நீட்டித்துக்கொள்ளும் மருந்து மட்டுமே இப்போதுவரை இருக்கிறது. பாதித்தவர்களின் உடலிலிருந்து கிருமியை முற்றிலுமாக அழிப்பதற்கான மருந்து கண்டறியப்படவில்லை. இதுகுறித்து உலகெங்கும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்தத் தொடர் முயற்சியில் தற்போது புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த நெப்ரஸ்கா பல்கலைக்கழக மருத்துவ மைய ஆராய்ச்சியாளர்கள், ஹெச்.ஐ.வி வைரஸ் குறித்து தொடர்ச்சியான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை நற்பொழுதாக விடிந்திருக்கிறது. தாங்கள் கண்டுபிடித்த மருந்தை, ஹெச்.ஐ.வி கிருமி செலுத்தப்பட்ட ஓர் எலியின் உடலில் செலுத்தியபோது, எலியின் ஜீனிலிருந்து கிருமி அழிந்திருக்கிறது. ''ஹெ.ஐ.வி-க்கான மருந்தைக் கண்டறிவதில் இது முதல் வெற்றி. இந்தச் சோதனை முடிவு கண்டிப்பாக ஹெச்.ஐ.வி பாதித்த மனிதர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தரும்" என நம்பிக்கைத் தெரிவிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த ஆராய்ச்சி முடிவு குறித்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவ அதிகாரி சேகரிடம் பேசினோம்,

``இந்த ஆராய்ச்சியில் இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். ஒன்று, தற்போது, ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்கள் ஏ.ஆர்.டி எனும் கூட்டு மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்கின்றனர். வாழ்நாள் முழுவதும் அந்த மருந்தை அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிவரும். அதற்குப் பதிலாக, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஊசி மருந்தைஇரண்டுமுறை எடுத்துக்கொண்டால் போதுமானது என்கிறார்கள். இது வரவேற்கக்கூடிய ஒன்று. மற்றொன்று, தற்போது எலியில் நடத்திய சோதனை வெற்றி பெற்றதுபோல் மனித உடலிலும் நடந்துவிட்டால், மனிதகுல மருத்துவ வரலாற்றில் இது மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பு'' என்கிறார் மருத்துவர் சேகர்.

No comments

Powered by Blogger.