ஐக்கியதேசியக் கட்சியின் அடையாளத்தினை சந்திரிக்கா அழித்திட ஒரு போதும் இடமளித்திட முடியாது; ரவி கருணாநாயக்க!!

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் அணியினருக்கு கட்சியின் அடையாளத்தை அழிக்க எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்க வெளியில் உள்ள கட்சிகள் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.

கதிர்காமத்தில் நேற்று நடைபெற்ற பூஜை ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதியில் அமைப்பாளராக இருந்தும் அந்த தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலைமையே காணப்படுகிறது. அப்படியான ஒருவருடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வது என்பது கேலிக்குரியது.

ஐக்கிய தேசியக்கட்சியின் ஐக்கியத்தை சிதைக் வேண்டும் என்ற தேவை வெளியில் உள்ள கட்சிகளுக்கு இருக்கின்றது. அனைத்து கட்சிகளிலும் தலையிடலாம் என சந்திரிக்கா நினைக்கின்றார். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவருக்கு தேவையான வகையிலேயே தற்போதும் செயற்பட்டு வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியில் தலையிட்டு, கட்சியின் ஒற்றுமையை சிதைக்கலாம் என அவர் நினைக்கின்றார். ஐக்கிய தேசியக் கட்சியில் தலையீடுகளை செய்ய சந்திரிக்காவுக்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம் எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை மரண தண்டனை அமுல்படுத்தப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு தலைவரே இருக்கின்றார்.

அவர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதை எதிர்க்கின்றனர். சிங்கள பௌத்த நாட்டுக்கு இப்படியான தண்டனை பொருந்தாது.

ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்களில், முதிர்ச்சியான, நாட்டை நேசிக்கும் தூர நோக்கம் கொண்ட, பணியாற்றக் கூடி, நாட்டை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல முடிந்த தலைவரை நாங்கள் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவோம். இது எங்களது முடிவல்ல, கட்சியின் ஏகமனதான முடிவு.

நாம் எமது நாட்டை சர்வதேச தளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

நாட்டில் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். இவற்றை செய்யக் கூடியவரே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post