யாழ் மானிப்பாயில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்!!!

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் ஆவா குழுவினை சேர்ந்தவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மானிப்பாய் பகுதியில் பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் கறுப்பு நிற துணியால் முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் சென்றுள்ளனர்.

இதன்போது சோதனை நடவடிக்கைக்காக அவர்களை மறித்தபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சென்றுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், இதில் கறுப்பு நிற துணியால் முகத்தை மறைத்துச் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 23 வயது மதிக்கத்தக்க இளைஞரே இவ்வாறு உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. எனினும் அவரின் பெயர் விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதேவேளை சம்பவ இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.