தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்திட விரைகிறது ஜெனிவா குழு!!

இலங்கையின் மலையகத்தில் பல தசாப்தங்களாக தீர்க்கப்படாமல் காணப்படுகின்ற பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக ஐ.நா விசேட பிரதிநிதிகள் அடுத்த மாதமளவில் விஜயம் செய்யவுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் இலங்கை பிரதிநிதியாக கலந்து கொண்ட மத்திய மாகாண பொது சேவை ஆணைக்குழுவின் பிரதிநிதியான மருத்துவர் கிரிஷான் ஜெனீவாவில் இருந்து எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைக்கு அப்பால் இலங்கையில் பல்வேறு பிரச்சினைகள் பேசப்படாதிருப்பதாகவும் ஐ.நா கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச நலன்புரி ஒன்றியம் சார்பாக இலங்கையின் பிரதிநிதியாக கலந்து கொண்ட மருத்துவர் கிரிஷான், மலையக பகுதியிலும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் அடிப்படை சம்பளம் என்பது மிகவும் குறைந்த அளவிலேயே பகிரப்பட்டு வருவதையும் ஐ.நாவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

குறிப்பாக மலையகத்தில் பல தசாப்தங்களாக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் என்பது ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 03 அமெரிக்க டொலர்களே வழங்கப்படுவதாகவும் மருத்துவர் கிரிஷான் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, சுகாதாரம், பொருளாதாரம், போக்குவரத்து எனப் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் மலையகப் பகுதிகளில் தலைவிரித்தாடுவதாகவும், இதுவரை அவை தீர்க்கப்படாத மற்றும் சர்வதேவ அளவில் கண்டுகொள்ளப்படாதவைகளாக இருப்பதாகவும் ஐ.நா கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைக் கவனத்திற்கொண்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம், இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஐ.எல்.ஓ என்கிற உலகத் தொழிலாளர் சம்மேளனத்திற்கு பரிந்துரை விடுத்திருக்கின்றது.

மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜெனீவாவில் பேசப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது என்றும் சுட்டிக்காட்டிய மருத்துவர் கிரிஷான், இந்த பிரச்சினைகளை நேரில் கண்டு தீர்வுகாண்பதற்காக ஜெனீவாவிலிருந்து பிரதிநிதிகள் அடுத்தமாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post