இலங்கையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; சர்வதேசம் முழு நம்பிக்கை வைத்துள்ளது!!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலால் சுற்றுலாத்துறை மோசமாகப் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தை, ஒரு மாத காலத்துக்குள் முறியடித்து மீண்டும் சுற்றுலாத் துறையின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று விடுத்த விஷேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் சிறந்த சுற்றுலாச் சஞ்சிகையான “லோன்லி பிளாநட்” சஞ்சிகை இதனை வலியுறுத்தி இருப்பதை சுட்டிக்காட்டியே பிரதமர் இந்த விஷேட அறிக்கையை விடுத்திருக்கின்றார்.

உலகின் சுற்றுலாத்துறைக்கு இலங்கை மிகவும் சிறந்த கேந்திர நிலையமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எமது நாடு பெருமையடைகின்றது. இந்த கௌரவத்தை பெற்றுக்கொள்ளப் பாடுபட்ட சுற்றுலாத்துறையின் சகல தரப்பினருக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இதனை சிறப்பாக முன்கொண்டு செல்வதற்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். பிளாநட் சஞ்சிகை வெளியிட்ட அறிவிப்பில், உலகில் சுற்றுலாவுக்கு மிகச் சிறந்த இடமாக இலங்கையை வர்ணித்து சான்று வழங்கி இருந்தது. ஆனால், ஏப்ரல்

21இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால், சுற்றுலாப் பயணிகள் வெளியேறினர். இங்கு மீண்டும் வருவதற்கு பலரும் அச்சம் கொண்டனர். நாம் பெற்றுக் கொண்ட கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படலாமெனவும் பெரும்பாலானோர் கவலை கொண்டனர்.

எனினும், கடந்த வாரம் வெளியிட்ட லோன்லி பிளாநட் சஞ்சிகை மீண்டும் நற்சான்றிதழை வழங்கியுள்ளது. என்னதான் பிரச்சினை இருந்தபோதும் இன்னமும் உலகில் சுற்றுலாவுக்கு உகந்த, பொருத்தமான நாடு இலங்கைதான். இலங்கையர்கள் பாரிய சவால்களுக்கு மத்தியிலும் சுற்றுலா பயணிகளை மகிழ்வுடன் வரவேற்பதாக அச்சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. இதனையிட்டு எமது நாடு பெருமையடைகின்றது. குறுகிய காலத்துக்குள் ஒரு சவாலை முறியடித்து மீண்டும் நற்பெயரை ஈட்டிக்கொள்ள எமக்கு முடிந்துள்ளது.

இதன்மூலம் எமக்கு தைரியத்துடன் செயற்பட வழிபிறந்து,சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புக் கிட்டியுள்ளது. அரசாங்கம் இது விடயத்தில் கூடுதல் கவனமெடுத்துச் செயற்படும்.

ஏப்ரல் 21 தாக்குதலில் பின்னர் பாதுகாப்புத் தரப்புக்கு, தான் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய பாதுகாப்புத் தரப்பு மேற்கொண்ட நடவடிக்கைகளால், ஐ. எஸ். ஐ. எஸ் பயங்கரவாதிகள் சகலரும் கைது செய்யப்பட்டு விட்டனர். இரண்டு மாதங்கள் நிறைவடைய முன்னர், நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதில் பாதுகாப்புத் தரப்பு வெற்றி கண்டுள்ளது. இதனையிட்டு பாதுகாப்புத் தரப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் மத்தும பண்டார

இதேவேளை, நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் சர்வதேச நாடுகளும் இது தொடர்பில் நம்பிக்கையை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எனினும், தமது குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள, எதிர்க்கட்சியினர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அது நாட்டின் நலனுக்கு சிறந்ததல்ல. அவ்வாறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் எனத் தாம் எதிர்க் கட்சியினரை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றது. உலக நாடுகள் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன. சர்வதேச சஞ்சிகையான ‘லோன்லி பெனட்’ இலங்கை சுற்றுலாத்துறைக்கான சிறந்த நாடாக விளங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நாடு மற்றும் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஊடகவியலாளர் ஒருவர், நாட்டின் சில பாடசாலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் மீண்டும் பாதுகாப்புப் பலப்படுத்தப் பட்டுள்ளதே அதற்கு விசேட காரணங்கள் ஏதும் உண்டா? எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை. பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்களுக்கு இராணுவத்தினரின் பாதுகாப்பு அவசியமில்லை என்றே பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. எனினும், எதிர்க்கட்சிகளின் அவ்வப்போதைய மக்களைத் திசை திரும்பும் கருத்துக்களால் இத்தகைய பாதுகாப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post