அரசியலினுள் ஆன்மீகம்; ஊடக தர்மமும் கோட்பாடும்; விதுரனின் அரசியல் அதிரடி கட்டுரை!!


"சொற்கேளாப் பிள்ளை குலத்துக்கு ஈனம்" அது போல் "அரசியலின் பக்கம் சாயும் ஊடகங்களும் மனித குலத்தின் சாபம்" ஒவ்வொரு மனிதர்களுமே ஏதோ ஒன்றினை சார்ந்துதான் வாழவேண்டும் என்பது நியதி ஆனால் அவர்கள் சார்ந்து வாழுகின்ற அந்த மனிதர்களாக அல்லது பொருட்களாக இருக்கட்டும் அவற்றின் குணம் குறிகள் தத்தமக்கு நன்மைபயப்பதனையே விரும்புகிறோம் அதன்படியே நமது சார்பு வாழ்க்கை தொடர்கிறது ஆக பிறர் நன்மையினை நாம் எப்போதும் கருத்தில் கொள்வது கிடையாது அதே போல ஒவ்வொரு மனிதர்களும் ஏதோ ஒரு விதத்தில் கடந்த காலங்களில் பாதிப்படைந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள் தனிப்பட்ட பாதிப்புகளை கருத்தில் வைத்துக் கொண்டே ஏனையவர்களையும் கணக்கெடுத்து விடுகிறார்கள் உதாரணத்திற்கு பயிர்களுக்கு களை நாசினி விசிறும் போது பல புல்பூண்டுகள் நன்மைபயக்கும் பூச்சி புழுக்களும் மடிந்து போவதென்பது நியதி அல்லது வழமை அதற்காக நாம் பயிரிட்ட பயிரினை வெட்டி வீழ்த்தி விடுவதுமில்லை அதே போல மடிந்து போன பூச்சி புழுக்கள் மீண்டும் இனத்தை பெருக்கிக் கொள்வதனை நிறுத்துவதுமில்லை.

சரி விடயத்திற்கு வருவோம் துரோகம் என்பதனை யார் செய்யவில்லை அல்லது யார்தான் செய்யாமல் வாழ்கிறோம் அன்றாடம் மனிதர்களான நாம் ஏதோ ஒரு செயல் மூலம் துரோகத்தை செய்து கொண்டுதான் இருக்கிறோம் களவு என்றாலும் கொலை என்றாலும் சின்னக்களவு ,கொலை பெரிய களவு, கொலை என்று தரம் பிரிப்பது கிடையாது நீதி ஒன்றுதான் அது போலதான் துரோகமும் சிறு துரோகம் பெரும் துரோகம் என்று ஒன்றில்லை அன்றாடம் உண்ணும் உணவின் மூலமாக நமக்கு நாமே துரோகம் செய்கிறோம் ஏழை பசித்திருக்க பணக்காரன் உணவினை கழிவுகளில் போடுகிறான் மரக்கறி வியாபாரி கடினப்பட்டு உழைக்கும் விவசாயிடம் பேரம் பேசி குறைந்த விலையில் கொள்வனவு செய்து உழைப்பிற்கேற்ற வருமானத் தராமல் துரோகம் செய்கிறான் இவ்வாறு தொடர் சங்கிலியாக துரோகம் சுழன்று கொண்டுதான் இருக்கிறது ஆனால் மனிதர்களான நாம் ஏதோ புனிதர்கள் போல இன்னொருவரை நோக்கி நமது விரலினை நீட்டுகிறோம் மீதி நான்கு விரல்கள் நம்மை நோக்கியிருக்கிறது என்பதனை உணராமல்.

மனித வாழ்க்கை என்பது வெறும் நாடக மேடைதான் ஒவ்வொருவரும் நடிகர்களே நாமேற்ற பாத்திரத்தினை ஏற்றவாறு நடிப்பவர்கள் வாழ்வில் வெற்றியடைகிறார்கள் நடிக்கத் தெரியாதவர்கள் தோல்வியினைத் தழுவுகிறார்கள் விடயம் அவ்வளவே மிகக் குறுகிய வாழ்நாளில் சராசரியாக வாழும் வருடங்கள் 60-70 வருடங்களே மிஞ்சினால் ஒரு சிலர் 95-100 இதுவே மனித வாழ்வின் காலம் வெயில் மழை குளிர் போல காலம் மாறுபட்டே வரும் இன்று பெரும் தனவந்தர்களாக வாழும் மக்கள் அடுத்து வரும் பத்து வருடங்களில் ஏழைகளாக மாறலாம் அல்லது இன்னும் செல்வந்தர்களாக வாழலாம் ஆக காலம் நேரம் இரண்டும் மனிதர்கள் கைகளில் இல்லை என்பதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் ஆனால் கால நேர சக்கரத்தில் சரியாக பயணிப்பவர்கள் அதாவது மேற்கூறியபடி நடிப்பினை சரியாக நடிக்கத் தெரிந்தவர்கள்  வெற்றியடைகிறார்கள் ஏனையோர் தோல்வியினைத் தழுவிக் கொள்கிறார்கள் இந்த தோல்விகள்தான் அவர்களை இன்னொருவரை நோக்கி விரல் நீட்ட வைக்கிறது அவ்வாறுதான் தற்போதைய சூழலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு சில மக்கள் தான் உண்டு தன் குடும்பம் உண்டு எனும் போக்கிலே வாழ்கிறார்கள் இவர்கள் சமூகத்தின் விரோதிகள் ஏனெனில் தமக்கொரு சிக்கல் வரும் வரைக்கும் சமூகத்தை பற்றியே சிந்தித்திடாதவர்களாக செல்வந்த வாழ்க்கை ஆடம்பர நிகழ்வுகள் என அந்தப் பக்கமே சார்ந்து வாழுகிறார்கள் தமக்கு கீழுள்ள வாழ்வாதாரத்திற்கே கடினப்படும் மக்களை பற்றிய சிந்தனையற்ற ஜடங்களாக இவர்களது வாழ்க்கை அமைந்து விடுகிறது இதனால்தான் சமூகத்தை பற்றி சிந்திக்காதவர்களை சமூக விரோதிகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. சரி அவ்வாறுதான் ஏதாவது உதவி செய்கிறார்கள் என்று பார்த்தால் தனது குடும்ப உறவுகளுக்கே செய்திருப்பார்கள் அதாவது பிறவிக் குருடர்களுக்கு சத்திர சிகிச்சை செய்வதனைப் போன்ற செயல் அவர்களுக்கு அவ்வாறான உதவிகள் ஒன்று கார் வாங்க அல்லது சொத்துக்கள் வாங்குவதற்காகவே இருக்கும் ஏற்கனவே கோடி கோடியாக குவித்து வைத்திருப்பவர்களுக்கே இவ்வாறான உதவிகள் கிடைக்கின்றன அதற்காகவே பிறவிக் குருடர்களை ஒப்பிட வேண்டியேற்பட்டது இந்த உவமைக்கு ஆண்டவன் என்னை மன்னிப்பானாக.

மகாபாரதப் போரிலே பாண்டவர்கள் கௌரவர்களை வெற்றி கொள்வதற்காக எத்தனை துன்பங்கள் வேதனைகளை அனுபவித்தார்கள் எதற்காக அனுபவித்தார்கள் யாருக்காக அனுபவித்தார்கள் சற்று ஆழமாக சிந்திப்போமானால் பெரும் உண்மை புலப்படும் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் அதே போல ராமாயணத்தில் அரச பதவியினை பெற்றிட பதினான்காண்டுகள் பெரும் சோதனைகள் பெரும் அவமானங்கள் அதே போல மாபெரும் வெற்றிகள் அங்கே துரோகம் இரு தரப்புகளிலும் இருந்தது கௌரவர்களின் துரோகமானது பரம துரோகம் ஆனால் அவர்களை வெல்வதற்காக கண்ணன் செய்த துரோகம் ஒரு பக்கம் துரியோதனின் மகன் அபிமன்யுவை சக்கரவியூகத்திற்குள் அகப்பட செய்து அரிச்சுனனை 

துரியோதனனுக்கெதிரான குரு துரோணருக்கெதிரான வம்சத்தின் வித்தான பீஷ்மருக்கு எதிராக போராட வைத்திட இத் துரோகம் நிகழ்கிறது ஆனால் அந்த துரோகத்தால் நன்மையே உண்டாகியது வரலாறு ஏற்கனவே குறிப்பிட்டது போல பயிர்களின் செழிப்பு மற்றும் விளைச்சலுக்காக கிருமிநாசினி தெளிக்கும் போது எவ்வாறு நன்மைபயக்கும் புழு பூச்சிகளும் இறந்து போகின்றனவோ அது போல ஒரு நிகழ்வுதான் தற்கால அரசியல் களமும் அவ்வாறுதான் சுக்கிரீவனுக்காக பராக்கிரம சக்தி படைத்த வாலியினை வதம் செய்த நிகழ்வாகவே நாம் பார்க்கவேண்டிய நிலையில் உள்ளோம் கட்சித்தாவல்கள் எதிரெதிர் பிரச்சாரங்கள் வாய் சவடால்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

இங்கே பூனை யார்? கழுத்தில்  மணியினை கட்டப் போவது யார்? என தீர்மானிப்பது சமூகத்தின் அதாவது மக்களின் கரங்களிலே திணிக்கப்பட்டுள்ளது எனலாம் அதிலும் சிறுபான்மை எனப்படும் முன்னொருகாலத்தில் உலகினையே  கட்டியாண்ட தமிழர்கள் பெரும்பான்மையாக கொண்ட உலகம் இன்று சிறுபான்மை என்று அழைக்கப்படும் இலங்கையிலே ஏனெனில் வரலாறுகள் அதற்கு சான்று ராவணன் எனப்படும் அரசன் சிவபக்தன் ஆண்ட பூமிதான் இலங்காபுரி இது இவ்வாறிருக்க வரலாறுகளும் வழித்தோன்றல்களும் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது காரணம் சுயநலத்திற்கான தேடல்களை அன்றிலிருந்தே எமது வழிகாட்டிகளாக வலம்வந்த தமிழ் தலைமைகளின் அசமந்த போக்கே என்று கூறலாம்.

ஆளையாள் விமர்சனம் செய்யும் தமிழ் தரப்பு அரசியல்வாதிகள் தம்மைத்தாமே சில கேள்விகளை கண்டிப்பாக கேட்டேயாகவேண்டும்.
நான் என் சமூகத்திற்காக என்ன செய்தேன்?  எந்த நோக்கத்தோடு அரசியலில் களமிறங்கினேன்? எதற்காக என்னை எனது மக்கள் அவர்களது பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தார்கள்? இதற்கான விடையினை தூங்கும் முன்னர் ஒரு தடவையேனும் கேட்டு விட்டு தூங்கச் செல்லுங்கள் கனவிலாவது விடை கிடைக்கும்.

சமூகம் சார்பில் அரசியல் பேதமின்றி நான் முன் வைக்கும் கேள்விகளும் விடைகளும்...

தமிழர்களின் பிரதிநிதிகளாக அல்லது பிரதிநிதிகளாக காண்பிக்க முயலுகின்ற அரசியல்வாதிகளின் ஒவ்வாமைக்கான காரணம் என்ன? ஏனெனில் ஒரு விடயத்திற்காகத்தானே மக்களால் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள் அவ்வாறெனில் ஏன் அந்த ஒரு விடயத்திற்கான ஒரு தீர்வேனும் எட்டப்படவில்லை? 

ஆட்சி அதிகாரமென்பது மலை முகட்டில் மறையும் சூரியன் என்று கூறலாம் ஏனெனில் மலைக்கு முன் நின்று பார்ப்பவர் கண்களுக்கு சூரியன் மறைந்து இருள் சூழ்ந்து விட்டதாகவே தோன்றும் ஆனால் மலையின் பின்புறத்தில் நிற்பவர்களுக்குத்தான் தெரியும் இன்னமும் சூரியன் மறையவில்லை என்று அது போல்தான் மேலோட்டமாக சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் வானொலி தொலைக்காட்சிகளிலும் பார்க்கும் கேட்கும் விடயங்களே உண்மை என மக்கள் நம்பவைக்கப் படுகிறார்கள் ஆனால் ஆட்சியில் சில துரோகங்கள் பழிவாங்கல்கள் காட்டிக்கொடுப்புகள் போன்றன தினம் தினம் மலை முகட்டில் சூரியன் மறைந்து விட்டது என்று நாம் எண்ணும் விடயத்தினை கடந்து மலையின் பின்புறம் நிற்பவர்களுக்கு இன்னும் மறையாமல் சூரியன் இருப்பதனைப்போன்ற ஒரு விடயமாகும் இவ்வாறான சதியும் சகதியும் நிறைந்த ஆட்சியாளர்களிடமிருந்து நமக்கான உரிமைகளை பெறுவதற்கு அரசனாவன் உனக்கு வேண்டியதைக் கேள்! என்று அவன் வாயால் சொல்லும் வரைக்கும் அவனது கவனத்தினை ஈர்ப்பதுதான் ராஜதந்திரம் இதையே விகடகவியான தெனாலிராமன் செய்த செயல் அவர் விகடகவி மட்டுமல்ல ராஜதந்திரிகளில் சிறந்த ராஜ தந்திரியும் கூட இதைத்தான் இன்று பேரம் பேசி பெறுதல் என்கிறார்கள் ஆனால் பேரம் பேசுதல் என்பது ராஜதந்திரம் கிடையாது என்பதனை உணர்வதே சிறந்த புத்திஜீவிகளை தோற்றுவிக்கும் அந்த வகையிலான நகர்வுகளையே தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அரசியல்ரீதியான முன்னெடுப்புகள் தொடர்கிறது. 

ஆனால் எட்டப்பனைப் போன்ற சில அரசியல் கட்சிகள் அல்லது கொள்கையியலாளர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்றே ராமாயணத்தில் வாலியினை கொன்றது தவறு மகாபாரதத்தில் சூழ்ச்சி செய்து கர்ணனைக் கொன்றது தவறு என்று கூறிக் கொண்டு நகர்வுகளை பிற்போட அல்லது வேகம் தடைப்பட வேகத்தடை போடுபவர்களாக மாற்று கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள்  முதலில் இவர்கள்தான் துரோகிகள் இவர்கள் மனம் மாறி பெரும் தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க ஒரே மேசையில் ஒன்றுகூடி எதற்காக அரசியல் களத்திலே நாடகமாட நாம் வந்துள்ளோம் எல்லோரும் ஒரே வேடத்தை போடாமல் ஆளுக்கொரு வேடத்தை போடுவோம் ஒரே மேடையில் பல பாத்திரமேற்று நடிப்போம் ஆனால் நடிப்பின் நோக்கம் பார்வையாளர்களான மக்களை திருப்திப்படுத்தவேண்டும் என்பதிலே குறியாக இருப்போம் என்ற உடன்பாட்டினையும் யதார்த்தத்தினையும் எட்ட வேண்டும். 

உதாரணத்திற்கு பல நாடகமேடை பல நடிகர்கள் ஆனால் ஒரே பெயரிலான நாடகங்கள் " தமிழர்களுக்கான தீர்வு" பல நாடகமேடைகளை கண்ணுற்று சலித்துப் போன மக்கள் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டாலென்ன எனும் நிலைப்பாட்டுக்கு வந்து விட்டார்கள் எந்த நாடக கொட்டகைகளிலும் மக்கள் இனி கூடமாட்டார்கள் ஒரு வேடத்தை பல நடிகர்கள் ஏற்றதன் விளைவே இந்த சலிப்புக்கான காரணம் இதுவே ஒரு பாரிய நாடக மேடை அமைத்து அனைத்து நடிகர்களும் ஆளுக்கொரு தகுந்த வேடமேற்று நடிப்பதென்றால் மக்கள் கூட்டத்தினையும் ஆதரவினையும் ஒருகணம் கற்பனை செய்து பார்த்திடுங்கள் இங்கே ரசனை கரகோஷம் என பல விதத்திலும் மக்கள் மத்தியில் அவர்கள் மனதில் நீங்காத இடத்தினைப் பெற்று விடுவீர்கள் இதனையே தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனும் செயல்படுத்தினார் அதில் நிறைந்த வெற்றியினையும் கண்டார் இருந்தும் ஒரே பாத்திரத்தினை பலர் ஏற்று நடிக்க முற்பட்ட வேளையில் பிரிவினை உருவானது நாம் அனைவரும் அறிந்த விடயமே ஏனெனில் உனக்கு உனக்கென்ற வேடத்தினை அதன் தரத்தினை நீதான் மெருகூட்ட வேண்டுமேயன்றி இன்னொருவர் ஏற்ற வேடத்தினை போட முயல்வது முட்டாள் தனத்தின் உச்சம் எனலாம்.

சரி ஒரு குடையின்கீழ் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரே கொள்கையோடு களமிறங்கமுடியுமா? ஆம் முடியும் தனக்கு தனக்கேற்ற வேடங்களை ஏற்று சரியாக நடிக்க முயற்சிக்கும் எந்த அரசியல்வாதியும் கண்டிப்பாக இணைந்து ஒரு அரசியல் மேடையில் கூட்டாக நிற்பான் அந்த கூட்டு முயற்சியில் தமிழ் தேசியம் எனும் அடையாளம் மேலோங்கும் ஆட்சியாளன் அஞ்சுவான் அவன் அச்சத்தின் வெளிப்பாடு "உனக்கு என்ன வேண்டுமோ கேள்" என்ற ஒற்றை வார்த்தையாகத்தானிருக்கும் இதை செய்து பாருங்கள் அரசியவாதிகளே நீங்கள் அரசியல் வர்த்தகத்தை கடந்த சாணக்கியத்தினை உணர்வீர்கள் நம் சமூகம் சிறப்பாக வாழும் போது நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன!  நீங்களும் நன்மதிப்போடுதானே வாழ்வீர்கள்.

இனி ஊடகம் ஊடக தர்மம் மகாபாரத காலத்தில் கண் தெரியாத திருதராஷ்டிரனுக்கு சஞ்சயன் எனும் ஞானப் பார்வை கொண்ட ஒருவன் ஊடகமாக செயலாற்றினான் அந்த வரலாற்றினை படித்தால் ஊடக தர்மத்தினை ஒரு போதும் ஊடகங்கள் நெறி தவறாமல் கடைப்பிடிக்கும் உள்ளதை உள்ளபடி நேரடி வர்ணனை செய்தான் அதனை மனக்கண்ணில் படமாக்கி கண்டுகளித்தார் திருதராஷ்டிரன் இப்படி உள்ளதை உள்ளபடி பார்வையற்ற திருதராஷ்டிரனைப் போன்ற எம் சமூக மக்களுக்கு சஞ்சயனாக இருந்து உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்கவேண்டியது ஊடக தர்மமல்லவா அதை விடுத்து யாரோ ஒருவரின் மனக்குறைகளை அல்லது மனங்குழம்பியவர்களின் துணையாளர்களாக கைகேயியிற்கு கூனி வாய்த்தனைப்போல துரியோதனனுக்கு சகுனியைப் போல செயற்படுவதானால் ஊடகம் எதற்கு அங்கே ஊடக தர்மம் எவ்வாறு வரும் சற்றே சிந்திப்போம். 

ஊடகங்களே! உங்கள் கற்பனைகளை கதைகளாக்கி நிஜமாக்கிடத்தான் இந்த ஊடக வலையமைப்பு உருவாக்கம் பெற்றிருக்கிறதென்றால் தயவு செய்து அதனை புறக்கணியுங்கள்; போட்டி இருக்கவேண்டும் ஆனால் பொய் புறம்பேசுதல் கோப தணிப்புகள் திணிப்புகளுக்காக இதனை பயன்படுத்தியதன் விளைவே இன்று அடியோடு அனைத்தையும் மக்கள் நிராகரிக்க தலைப்பட்டுள்ளார்கள் நீதி அறிந்த நீதியரசர்களுக்கே நீதி ம(ற)றைந்து போய் விட்டது ஏனெனில் ஊடகம் நீங்கள் செய்த கோளாறுகளே காரணம் இதில் மாற்றுக்கருத்தில்லை.

ஊடக பேதமின்றி இக் கட்டுரையினை அனைத்து தளங்களிலும் பகிருங்கள்...

நன்றி 
விதுரன்

No comments

Powered by Blogger.