சஜித் பிரேமதாஸாவிற்கு ஆதரவாக பதுளையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்குமாறு வலியுறுத்தும் பொதுக்கூட்டத்தைப் பதுளையில் பிரமாண்டமாக நடத்துவதற்கு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது மாநாடு எதிர்வரும் 11ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. தமது தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச அன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

இந் நிலையில் இந்தக் கூட்டத்துக்குப் பதிலடியாகவும், ஐ.தே.கவின் பலத்தை வெளிப்படுத்தும் நோக்கிலுமே மாபெரும் கூட்டத்தை 12ஆம் திகதி பதுளையில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடக்கும் இந்தப் பொதுக் கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்.

இதன்போது சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிடுமாறு கோரி தீர்மானமும் நிறைவேற்றப்படவுள்ளது.

தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சிஇ கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலின்போதே எழுச்சி பெற்றது. கட்சியின் முக்கிய தலைவர்கள் ஓரணியில் மேடையேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே ஊவா மண்ணில் சஜித்துக்கான முதல் ஆதரவு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.