பயங்கரவாத தாக்குதல்களின் பொறுப்புக் கூறலிலிருந்து அரசு ஒரு போதும் நழுவிட முடியாது!!


புதிய பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்; ஓரிடத்துடன் முடிந்துவிடாது

ஆயுதம் என்பது துப்பாக்கி மட்டுமல்ல

நாடு புதிய பயங்கரவாதத்துக்கு முகங்கொடுத்துள்ளது. இது புற்றுநோய் போல, ஒரிடத்துடன் முடிவடைந்துவிடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பொறுப்புக் கூறுவதிலிருந்து அரசாங்கமும், அமைச்சரவையும் தப்பிவிட முடியாது. புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில் குறைபாடு இருந்தது. இதனை நிவர்த்தி செய்ய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். நேற்று மாலை 6 மணிமுதல் இரவு 7.30 மணிவரை அவர் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.

குண்டுத்தாக்குதல் சதியுடன் சம்பந்தப்பட்டவர்கள் உயிருடன் இருந்தால் அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுவிட்டனர். இது தவிரவும் குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், அந்த அமைப்புடன் சேர்ந்தவர்களுடன் ஒரு கோப்பை தேநீர் அருந்தியவர்கள் என சகலரும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். ஓரிடத்துடன் விசாரணை முடிவடைந்துவிட்டது எனக் கைவிட்டுவிட முடியாது. ஒரு குழு முடிந்துவிட்டது என நாம் இருந்துவிடவும் முடியாது. இது புற்றுநோய்போல ஓரிடத்துடன் முடிந்துவிடாது. நாடு புதியதொரு பயங்கரவாதத்துக்கு முகங்கொடுத்துள்ளது. இவற்றின் பின்னால் யாருடைய கருத்துக்கள் இருக்கின்றன என்பதே சவாலானதாகும். ஆயுதம் என்பது துப்பாக்கி மாத்திரமல்ல சிறிய கத்திகூட பயன்படுத்தப்படலாம் என்றும் கூறினார்.

இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படலாம் என ஏப்ரல் 9ஆம் திகதி விடுக்கப்பட்ட எச்சரிக்கை கடிதம் தனது பாதுகாப்புப் பிரிவுக்குக் கிடைக்கவில்லையென்றும், தனது பாதுகாப்புப் பிரிவுக்கு அக்கடிதத்தின் பிரதி அனுப்பப்படவில்லையென்பதை பொலிஸ்மா அதிபர் பின்னர் ஏற்றுக்கொண்டிருந்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

சஹரான் தொடர்பிலோ, பயங்கரவாத செயற்பாடுகள் குறித்தோ அமைச்சரவையில் எந்தவிடயமும் கலந்துரையாடப்படவில்லை. எனினும், உயிர்த்தஞாயிறுத் தாக்குதலுக்கான பொறுப்புக் கூறலிலிருந்து அமைச்சரவைக்கோ அரசாங்கத்துக்கோ தப்பிவிடமுடியாது. புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் குறைபாடுகள் இருந்துள்ளன. இவற்றை நிவர்த்திசெய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.


தேசிய தௌஹத் ஜம்ஆத் அமைப்பினர் மத அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் கிடைத்திருந்தபோதும், அவர்களின் பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து எந்தவித தகவல்களும் கிடைத்திருக்கவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லையென்றும், பாதுகாப்புச் சபைக்குத் தானும் அழைக்கப்படவில்லையென கட்டாயவிடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தனக்குக் கூறியதுடன், பாதுகாப்புச் சபை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருந்ததாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அடிப்படைவாதத்திலிருந்தே பயங்கரவாதத்துக்கே செல்கின்றனர். எமது புலனாய்வுப் பிரிவினர் அந்த இடத்தையே அடையாளம் காணவேண்டும். எமது பொறிமுறையானது எல்.ரி.ரியினரை கையாள்வதற்காக உருவாக்கப்பட்டது. எனினும் நாம் உலகத்துடன் உள்ள விடயங்களுடன் இணைவதற்கு முன்வரவேண்டும்.

அத்துடன், வெறுக்கத்தக்க பேச்சுத், மதரசாக்களை நிர்வகிப்பது போன்றவற்றுக்குப் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு வருவதாகவும், இவற்றுடன் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் சட்டவரைபுகளைத் தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன. சட்டங்களை இயற்றும்போது 2000 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் பயங்கரவாதம் தொடர்பில் பிரித்தானியா கொண்டுவந்த சட்டங்களை ஆராய்ந்து அவற்றில் அவசியமான விடயங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் கூறினார்.