இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்!!

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது.

உடல் நலக்குறைவு காரணமாக சுஷ்மா 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்திரா காந்திக்குப் பிறகு இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் சுஷ்மா ஸ்வராஜ் ஆவார்.

அவர் கடைசியாக பகிர்ந்திருந்த ட்விட்டர் பதிவில், "நன்றி பிரதமர். மிகவும் நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளுக்காகதான் காத்திருந்தேன்" என்று காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பதிவிட்டு இருந்தார்.

வழக்கறிஞரான சுஷ்மா ஸ்வராஜ் பா.ஜ.கவின் டெல்லி முதல்வராக 1998ஆம் ஆண்டு சிறிது காலம் பதவி வகித்து இருக்கிறார்.

எமெர்ஜென்ஸியை எதிர்த்து போராடிய சுஷ்மா, 25 வயதிலேயே ஹரியானா மாநில அமைச்சராக பதவி ஏற்றார்.

1990ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினரானார்.
1996 ஆம் ஆண்டு இந்திய 11ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒளிப்பரப்புத் துறை, குடும்ப நலம், வெளியுறவு என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றி இருக்கிறார்.

ட்விட்டரில் தொடர்ந்து இயங்கிய இவர், ட்வீட் மூலம் தமக்கு வைக்கப்படும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி இருக்கிறார்.

"இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது" என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோதியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதைத் தடுக்க எல்.கே.அத்வானி மேற்கொண்ட முயற்சிகளுக்கு சுஷ்மா ஸ்வராஜ் ஆதரவாக இருந்தார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

எனினும் தேர்தல் வெற்றிக்குப் பிறகு மோதி தலைமையிலான அமைச்சரவையில் சுஷ்மா ஸ்வராஜ் முக்கிய அங்கம் வகித்தார்.

"மிக சிறந்த அரசியல் தலைவர், பேச்சாளர் மற்றும் கட்சிக்கு அப்பாற்பட்டு நல்லுறவு பேணிய நாடாளுமன்ற உறுப்பினரான சுஸ்மா ஸ்வராஜ் காலமானதை அறிந்து அதிர்ச்சியுற்றேன்" என்று ராகுல் காந்தி ட்விட்டர் பதிவிட்டுள்ளார். 

மேலும், "இந்த துக்கமான நேரத்தில் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் இளைபாறட்டும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

சுஷ்மாவின் உடல் புதன்கிழமை மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் பின்னர் லோதி ரோட்டில் உள்ள மின் தகன மேடையில் எரியூட்டப்படும் என்றும் அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.