பிரதமரையும் நிதி அமைச்சரையும் சிறையிலடைக்க தயாராகும் ஜனாதிபதி!!


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரை கட்டாயம் கைது செய்து விளக்கமறியலில் வைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கியின் மோசடி தொடர்பாக வழக்கின் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், முன்வைக்கப்பட உள்ள சாட்சியங்களின் அடிப்படையில், ரணில் மற்றும் ரவியை சிறையில் அடைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 வது ஆண்டு நிறைவு மாநாட்டில் சூசகமான கருத்தை வெளியிட்ட ஜனாதிபதி, அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வரவும் அவரை விட மிகப் பெரியவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தவும் தேவையான ஆவணங்கள் ஏற்கனவே தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

பிரச்சினைக்குரிய இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி கொடுக்கல், வாங்கலில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தவிசாளர் மலிக் சமரவிக்ரம, தற்போதைய தவிசாளர் கபீர் ஹாசிம் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

எனினும் கடந்த சில ஆண்டுகளா அர்ஜூன் அலோசியஸூடன் இருக்கும் தனிப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில் செய்யாத ஒன்றுக்காக அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது குற்றச்சாட்டை சுமத்தி விட்டு, சம்பந்தப்பட்டவர்கள் ஒதுங்கியிருந்ததாகவும் பேசப்படுகிறது.

வழக்கு விசாரணைகளில் அமைச்சர்கள் மலிக் மற்றும் கபீர் ஆகியோர் ஆரம்பத்திலேயே சிக்குவார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டிய பின்னர், ரணில் மற்றும் ரவி ஆகியோருக்கு எதிராக சாட்சியங்களை வழங்கி, அரச சாட்சியாளர்களாக மாறி மன்னிப்பு கோர, மலிக் மற்றும் கபீர் ஆகியோர் இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே கடந்த ஜூன் மாதம் வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் மிகவும் நெருக்கமாக இருந்த மலிக் மற்றும் கபீர் ஆகியோர் திடீரென ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் அணியில் இணைந்துக்கொண்டதுடன் கட்சியின் செயற்குழுவில் ரணிலுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும தலைவர்களாக மாறியதாகவும் பேசப்படுகிறது.

அமைச்சர் மலிக் மற்றும் கபீர் ஆகியோர், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஊடாக ஜனாதிபதியின் முகவர்களாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க போவதில்லை என திட்டவட்டமாக கூறியிருந்தார்.

எனினும் இறுதியில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதிக்கு நேரிட்டது. இந்த சம்பவமானது தனது வாழ்நாளில் தனக்கு ஏற்பட்ட மிகப் பெரிய தலைக்குனிவாக கருதும் ஜனாதிபதி, முடிந்தளவில் அதற்கான பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட தயாராகி வருகிறார்.

சஜித் பிரேமதாச, எப்படியாவது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றி, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நோக்கத்தில் இருந்து வருகிறார். இவரும் தமது பரம எதிரிகளாக ரணில் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோரை கருதி வருகிறார்.

இதனடிப்படையில், மைத்திரி - சஜித் கூட்டணி தமது பொது தேவைக்காக அடுத்த சில மாதங்களில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
Gator Website Builder