மனிதா! அறம் சார்ந்து வாழப் பழகிக் கொள்; வாழ்க்கையில் என்றென்றும் சந்தோசமாய் வாழ்வாய்!!

ஆன்மீக மெய்யன்பர்களுக்கு இனிய வணக்கங்கள்.... பிரபஞ்ச இயக்கத்தில் புவியிலே பிறப்பெடுத்துள்ள மனிதர்கள் தொடக்கம் அனைத்து ஜீவராசிகளும் அறம் எனும் தர்மத்தினை சார்ந்து வாழப் பழகிக் கொண்டால் வாழ்வில் துன்பம் ஏது துயரம் ஏது இவ்வாறான தலைப்பிலே சற்குருநாதர் ஆன்மீகக்குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகள் உலக மக்களின் மனதினை பீடித்துள்ள காம,லோப,மோக,மத,மாத்சர்ய,அகங்கார,ஆணவ மாயைகளை போக்கி அகத்தூய்மையான மகிழ்வு நிறைந்த பேரின்ப வாழ்வினை வாழ்ந்து பெரும் பேறான ஆன்ம ஈடேற்றத்தினை பெறவைத்திட அருளிய ஞான உபதேசத் தொகுப்பினை தொடர்ந்தும் தரவிருக்கிறோம்.

மானிடர்களே! நாம் எதற்காக இவ்வுலகில் பிறந்தோம்?

வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் என ஏற்றத் தாழ்வுகளுடன் பயணிக்கும் ஒரு பயணம் ஆனால் சம நிலை பாதிக்கப்படும் போது மானிடர்கள் அல்லலுறுகிறார்கள் பெரும் அவஸ்த்தைப் படுகிறார்கள் மீட்சி பெற வழிகளின்றி தவிக்கிறார்கள் இவ்வாறு துன்பத்தினை கூட்டிக் கொண்டு துன்பமயமான வாழ்வினையே வாழ்ந்து வருகிறார்கள்; இந்த பிரபஞ்சத்தில் துன்பம் நிறைந்த வாழ்க்கைதானா மனிதர்களுக்கு விதிக்கப்பட்டது அல்லது அதுதான் விதியா? என்றால்; இல்லவே இல்லை மனிதர்கள் மாத்திரமல்ல உலகில் படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் அது இயற்கையாக இருக்கட்டும் செயற்கையானதாக இருக்கட்டும் அனைத்துமே ஒரு இன்பம் சுகம் வேண்டித்தான் படைக்கப்படுகிறது அல்லது படைக்கப்பட்டுள்ளது ஏனெனில் நன்மை தராத எந்த ஒரு பொருளினையும் எவரும் படைத்திடவோ உருவாக்கிடவோ முயல்வதில்லை ஆனால் சந்தர்ப்பமும் சூழலும் அந்தப் பொருளின் தன்மை குணம் பண்புகளில் தீங்கு விளைவிக்கும் பெரும் காரணியாக செயல்பட்டு துன்பமான விளைவுகளையே நல்குகின்றன; இவ்வாறு நிகழும் போதுதான் மனிதர்கள் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டு விரக்தியின் உச்சகட்டத்தில் தமது பலம் என்னவென்று உணராமையினால் தான் பலவீனமடைந்து அதன் தன்மையினால் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைபாடு, இனம்தெரியாத நோய்கள், சித்தப் பிரம்மை, ஈற்றில் தற்கொலை என தனது வாழ்வின் முழுமையினை உணராமல் துன்பத்தை சார்ந்தே வாழப் பழகிக் கொண்டுவிட்டான் ஆனால் இன்பம் துன்பம் இரண்டு தன்மைகளும் மனிதர்களுக்குள்ளேதான் இருந்து வெளிப்பட்டு செயற்படுகிறது இது எவ்வாறு செயல்படுகிறது என்பதனை தமது புத்தியின் மூலம் சிந்திக்க முற்பட்டவர்களே அன்றும் இன்றும் என்றும் உலகிற்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டி போதித்த மகான்கள் ஞானிகள் யோகிகள் சித்தர்கள் என பலர் உள்ளனர்; அவர்கள் அறம் சார்ந்த வாழ்க்கையினை வாழப் பழகிக் கொண்டார்கள் ஏனெனில் அறம் என்ற சொல்லிலே ஆண்டவன் வாழ்கிறார் அறமே தர்மம் அதுவே இறைவன் அதுவே மனித வாழ்வின் ஆதார பீடம் அதுவே வாழ்க்கையின் முழுமையினை இன்பமாக அனுபவிக்க சார்ந்து வாழ வேண்டிய மையப்பகுதி இவ்வாறு அறம் சார்ந்த வாழ்விலே பொறுமை,சகிப்புத்தன்மை,விடாமுயற்சி என்னும் வெற்றிக்கான தாரக மந்திரங்கள் உட்பொதிந்து உள்ளது.

அறம் சார்ந்த வாழ்க்கை என்றால் என்ன?

தன்னை நேசிக்க தெரிந்தவர்களுக்கே பிறரையும் தன்னைப் போல் நேசிக்கும் பண்பு வளரும்; சுயநலமற்ற நேசிப்பு என்பதே அற வாழ்க்கை அவர்கள் வறியவர்களாக இருக்கட்டும் செல்வந்தர்களாக இருக்கட்டும் எந்த உயிரினமாக இருக்கட்டும் அங்கே அவர்களின் உயிருக்கும் நமது உயிருக்கும் எந்த வேறுபாடுமே இல்லை உயிர் என்றால் சிறிய உயிர் பெரிய உயிர் என்ற வேறுபாடுகள் இல்லையே உருவத்தால் அல்லது அணிந்திருக்கும் உடைகளால் எண்ணங்களால் சிந்தனைகளால் வேறுபடுகிறார்களேயன்றி உயிரெனப்படும் ஆன்மாவில் பாகுபாட்டினை எவராலும் கணித்திட முடியாது அதுதான் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று நமது முன்னோர் வாக்கு உயிரின் தத்துவத்தினை பிரதிபலிக்கிறது.


இவ்வாறான உயர்ந்த சுயநலமற்ற வாழ்வினை வாழ்ந்தவர்களையே எத்தனை யுகங்கள் கடந்தாலும் மக்கள் போற்றி வழிபட்டு வருகிறார்கள்; காரணம் அறம்சார்ந்த வாழ்க்கையினை அவர்கள் கடைப்பிடித்து அதன்படி வாழ்ந்து வந்தார்கள் அதுதான் ஔவைப் பிராட்டியார் ஆத்திசூடியிலே முதலாவதாக "அறம் செய்ய விரும்பு..." எனத் தொடங்குகிறார் ஏனெனில் அறமே இறைவன் அதுவே ஆன்மா என்று உணர்ந்தவர்கள்தான் ஞானிகள்; மானிடர்கள் இவ்வுலகில் பிறப்பெடுத்து அறம் சார்ந்து வாழ்ந்திடாமல் உலக மாயைக்குள் சிக்குண்டு தத்தளிக்கும் போது மனிதர்களின் ஆன்ம பிரார்த்தனைகளின் ஈர்ப்பு உணர்வாக வீற்றிருக்கும் பரமாத்மாவினை அவதாரமெடுக்க செய்கிறது மனிதர்களோடு மனிதர்களாக அவதரித்து தன்னைப் போல் பிறரையும் நேசித்து அவர்களுக்கு வழிகாட்டியாக குருவாக இறைவனாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள் துவாபர யுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணராக திரேதா யுகத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாக இவ்வாறு அடுத்தடுத்த யுகங்களில் மனிதர்களின் குணம் தன்மை சூழல் அறித்து கர்த்தர் இயேசு பிரானாக, முஹம்மது நபிகளாக, கௌதம புத்தராக,பஹவான் ஸ்ரீ ராம கிருஷ்ணராக, சுவாமி விவேகானந்தராக,ராமானுஜராக,ஆதிசங்கரராக,சீரடிசாயிபாபாவாக,கிரியாபாஜியாக,ரமணமகரிஷியாக,சேஷாத்திரிசுவாமிகளாக,ஸ்ரீஅரவிந்தராக, இவ்வாறு எண்ணற்ற அவதாரங்கள் உயிரான ஒரு இறைவன் பல வேடங்களேற்று மக்களை உய்விப்பதற்காக மார்க்கங்களை தோற்றுவித்தார்கள். 

ஆனால் மனிதர்களோ உலக மாயையின் பக்கம் தமது மனங்களை சாய்த்துக்கொண்டுகாம,கோப,மோக,லோப,மத,மாத்சர்ய,ஆணவ,அகங்கார மாயைக்குள் தம்மை சிக்கவைத்துக்கொண்டு கொலை,கொள்ளை,கலப்படம், சூது,வஞ்சகம்,இவற்றால் பசி பட்டினி வறுமை எனும் துன்ப வாழ்க்கைக்குள் தன்னையும் தன்னைச் சார்ந்த சமூகத்தையும் உள்ளீர்த்து விட்டார்கள் இதன் அடிப்படையில் பல உயிர்கள் கணக்குவழக்கின்றி காவுகொள்ளப்பட்டு வருகின்றது அதிலும் தானாகவே தன்னை மாய்த்துக் கொள்ளும் தற்கொலை எனும் விடயமும் உச்சமாகிக் கொண்டே போகிறது; ஏனெனில் உடல்சார்ந்த வாழ்வினை வாழும் போது உடலுக்கான தேவைகள் அதிகரிக்கிறது ஆனால் அவற்றை நிவர்த்திக்க மனோபலம் குறைவாகவே காணப்படுகிறது எத்தனை பெரிய உடல் பலம் இருந்தாலும் அவர்கள் ஒலிம்பிக் விளையாட்டில் டன் கணக்கான எடையினை தூக்கி சாம்பியனாக இருந்தாலும் அவர்களால் சாதாரண நுளம்புக்கடியினை சகிக்கவே முடியாது அதுமட்டுமல்ல உலக சாம்பியனான ஒருவர் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீற்றிருக்கும் மைதானத்திலே தனது வீரத்தினை காண்பிக்க 200 கிலோ எடையினை லாவகமாக தூக்கிட முனையும் வேளையில் அவரது இரத்த உறவுகளான மனைவிக்கோ குழந்தைக்கோ அம்மாவுக்கோ அப்பாவிற்கோ ஆபத்தான நிலை வைத்தியசாலையில் தீவிர சிகைச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனும் தகவல் அறிந்ததும் அந்த பளுதூக்கும் நபரால் லாவகமாக அந்த சாதனையினை நிகழ்த்தத்தான் முடியுமா? அப்படியே சோர்ந்து சுருண்டு விடுவார் ஆக இங்கே உடல் பலம் இருந்து என்ன பயன்? "நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி" இவ்வாறு உள்ளத்தில் திறன் அற்ற நிலையில் நேர்மையும் குன்றி விடும் நேர்மை குன்றினால் வெறும் வாய்ச்சவடால்களால் வெற்றி பெறத்தான் முடியுமா? எத்தனை அழகாக சூட்சுமமாக மகாகவி பாரதியார் பாடி வைத்துள்ளார்.

ஆக இந்த மனோபலம் குன்றும் போது மனிதர்களை மாயை எனும் பசி,பட்டினி,மூப்பு எனும் பிணிகள் தொற்றிக் கொள்கின்றன இதன்காரணமாக புனிதமான ஆன்மாவான இறைவன் உறைந்திருக்கும் வீட்டினை எத்தனை அசிங்கம் செய்கிறோம் இங்கே நாம்தான் நமக்கு எதிரி வெளியில் இருந்து எவரும் துன்பத்தினையோ இன்பத்தினையோ எமக்கு வழங்குவது கிடையாது நாமே நமக்குள் உருவாக்கிக் கொண்டு ஈற்றில் அதன் பலன்களை அனுபவிக்கும் போது துன்பமெனில் இறைவனையோ சுற்றத்தார் உறவினர்களையோ சமூகத்தையோ குறைகூறுகிறோம் நாமே நம்மை நோகடித்துக் கொள்கிறோமேயன்றி ஏனையோர் இதற்கு பங்காளிகளாக மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

இந்த பேருண்மையினைத்தான் புத்த பஹவான் உணர்ந்தார் போதிமரத்தடியில் அமர்ந்திருந்து ஞானம் பெற்றார் தான் பெற்ற இன்பத்தினை பெறுக வையகம் என்பதற்கிணங்க புனித பௌத்த மார்க்கத்தினை தோற்றுவித்தார் இயேசுநாதரும் அவ்வாறே செய்தார் முஹம்மது நபிகளும் அன்பைப் போதித்து அறவழியில் பயணித்திட புனித இஸ்லாம் மார்க்கத்தினை தோற்றுவித்தார்.

ஆக மதங்கள் மார்க்கங்கள் உணர்த்துவது அறம்சார்ந்த வாழ்வான அன்பு,கருணை,காருண்யம், பரோபாக சிந்தனைகள் என மனித வாழ்வுக்கு நன்மைபயக்கும் விடயங்களையே அன்றி; மத வெறி பிடித்து மதக் கலவரங்களை தோற்றுவிப்பதற்காக அல்ல அவர்கள் காண்பித்த அறவழியினை தவறாது கடைப்பிடித்து அந்த அன்பே உருவான பேரின்பத்தினை சுவைத்திட மாத்திரமல்லாது எமது எதிர்கால சந்ததியினருக்கும் அறம் சார்ந்த வாழ்க்கையினையும் அதன் மகத்துவத்தினையும் சென்றடைய செய்வதற்கேயன்றி வேறு எந்த நோக்கமும் அல்ல என்பதனை மனிதர்கள் புரிந்து கொண்டால் மனதில் ஏற்படும் பிரச்சனைகளுக்காக உடலினை அழிக்கும் நிகழ்வுகள் ஒரு போதும் அரங்கேறாது ஏனெனில் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மனத்தின் மூலமாகத்தான் தீர்வினை எட்ட முடியும் மாறாக உடலினை அழிப்பதால் என்ன பயன்? "மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு" என பிறவிகள் நீண்டு கொண்டே போகும். 

கவிஞர் கண்ணதாசன் எத்தனை அற்புதமாக மனித வாழ்க்கையினை பற்றி கூறுகிறார் பாருங்கள் "ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன? பிரண்டதோர் சுற்றம் என்ன? கூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன? ..... வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ?....." இவ்வாறு வாழ்வின் மொத்த அர்த்தத்தினை தன் வரிகள் மூலம் மக்கள் சமூகத்திற்கு விட்டுச்சென்றுள்ளார்.

ஏனெனில் பணம் பொருள் புகழ் அந்தஸ்த்து இருக்கும் போதுதான் அனைவரும் நம்மை சுற்றி சுற்றி வருவார்கள் ஏனெனில் அவர்களின் எதிர்பார்ப்புகளை தேவைகளை நிறைவேற்றக்கூடிய செல்வம் நம்மிடம் உள்ளமையே அதற்கான மூலகாரணம் ஆனால் நோய்வாய்ப்பட்டு அந்த செல்வங்கள் தீரும் போது எவரும் அருகில் கூட வரமாட்டார்கள் ஏனெனில் அவர்களின் எதிர்பார்பினை தேவைகளை நிறைவேற்றக்கூடிய செல்வம் நம்மிடத்தில் தீர்ந்து போனமையே 

இதற்கான காரணம்; ஆனால் மனிதர்கள் பெரும் பொருளான பொக்கிஷமான ஆன்மாவான அறம்சார்ந்து வாழும் போது "பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை அருளில்லார்க்கு அவ்வுலகில்லை" என்பதனைப்போல அருள் நிறைந்த அகம் சார்ந்த அறவாழ்வு வாழும் போது ஆன்ம பலம் அதுவே அருள் நிறைந்த வாழ்வினை நல்கும் இவ்வாறு அருள் நிறைந்த வாழ்வினை வாழும் போது அவ்வுலகு எனும் இறை சாம்ராஜ்ஜியமான ஆகாச மானசலோகத்தில் ஆன்ம சக்தி பெற்றவர்களாக வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்தினுள் வைக்கப்படுவார்கள்.

வாழ்க்கை எனும் கடலுக்குள் மூழ்கிடாமல் படகுபோல நாம் ஏறி பயணிப்பதற்கு அறம் சார்ந்த ஆன்மீக வாழ்வு இன்றியமையாத ஒன்றாகிறது  ஜீவாத்மாவானது உடல் சார்ந்து வாழும் போது பரமாத்மா எனும் அறம் அதாவது பிரபஞ்சத்தினை இயக்கும் மெய்பொருள் அடங்கி ஒடுங்கி செயலற்றுப் போய் இருக்கிறது அந்த உயர் சக்தி செயற்படாமல் இருக்கும் போதுதான் உடல்சார்ந்து வாழும் ஜீவாத்மா நான் என்றும் நானே செய்கிறேன் என்றும் ஆணவம் எனும் அகங்கார மாயைக்குள் சிக்குண்டு கிடக்கிறது உடலிலுள்ள கண்,மூக்கு,வாய் போன்ற அவயங்களே நான் என எண்ணியிருக்கும் ஜீவாத்மா உடலை விட்டு உயிர் பிரிந்த போது அதே நான் என எண்ணியிருந்த கண்,மூக்கு,வாய் என ஏனைய அவயங்கள் இருந்தும் செயல் அற்று ஜடமாகிய போது இந்த நானெனப்படுவது யார் என சிந்தித்து நான் எனப்படுவது பரமாத்மாவான அறம் சார்ந்து வாழுகின்ற ஆன்மாவே எனும் தெளிவினை எட்டினார்கள் அவர்களே மகான்கள்.

கனவு நிலை,உறக்க நிலை,விழிப்பு நிலை இந்த மூன்று நிலைகளிலும் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் எம்மை பாதுகாத்து நிற்கும் ஆன்மாவினை சார்ந்து சுகமான பேரின்ப வாழ்வினை வாழ்வதா; அல்லது மதிமயங்கச் செய்து உணர்வினை பறித்தெடுத்து மீளாத உறக்க நிலையான மரணத்தை சார்ந்த வாழ்வினை வாழப் போகிறோமா என மனிதர்களே முடிவு செய்ய வேண்டும்.

வாழ்க்கைப் பயணத்தில் தத்தளிக்கும் போது ரட்சகராக மானிடர்களை காத்து அறம் சார்ந்த வாழ்விற்குள் செலுத்திட குருவாக இருந்து மானிட சமுதாயத்தின் சுமையான வாழ்வினை களைந்து சுகமான பேரின்பம் நிறைந்த வாழ்வினை வழங்குவதற்கு நாளும் பொழுதும் அற்பமாம் ஜகத்து மாயையில் சிக்கி மீளமுடியாமல் யார்மூலமாவது "குரு வழிகாட்டுகிறார்" என்று கேள்வியுற்று மரணத் தறுவாயில் நாடி ஓடி வரும் மக்களை தன்னைப் போல் அவர்களையும் நேசித்து "ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்" என்பதற்கிணங்க பாமர மக்களுக்கும் இலகுவாக புரியும் விதத்தில் தான் எவ்வாறு அந்த இறையின்பமான பேரின்பத்தினை அனுபவித்து பிறவிக் கடன் தீர்த்து இவ்வுலகில் வாழும் போதே பிறவாப் பேரின்ப நிலையினை எய்தினாரோ அவ்வழியில் நாடுவோருக்கு மாத்திரமல்லாது அரிச்சுனனுக்கு கீதையினை உபதேசித்தது போல முழு உலகிற்குமே உபதேசித்ததனைப் போன்று கலியுகவாசிகளான அனைவருக்கும் உபதேசித்து அவர்களின் ஆன்மாவின் சக்தியினை அதிகரிக்கச் செய்து வாழ்வாங்கு வாழ வழிகாட்டி வருகிறார் ஆன்மீகக் குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகள்.

மகரிஷிகளின் அடிச்சுவட்டினை பின்பற்றி தன் குரு நாதர் காயத்திரிச் சித்தர் பகவான் முருகேசு சுவாமிகளின் மானசீக வழிகாட்டல் உத்தரவின் பேரில் இந்த தெய்வீக ஞானப் பணியினையும் உலக மக்களின் நன்மை கருதி இப்பேற்பட்ட உயர் ஆன்மீக இரகசியங்களையும் தொகுப்புக்களாக வெளியிட்டு உய்வு பெற அருள் வழிகாட்டி வருகிறார்.

ஆனால் உடல்சார்ந்த வாழ்வினை வாழும் மக்களால் அகம் சார்ந்த வாழ்வினை உணர்த்த வந்துள்ள அகத்தில் குடி கொண்டிருக்கும் பரமாத்மாதான் மனித உடலுக்குள் இருந்து கொண்டு ஞான உபதேசங்களை நல்குகிறார் என்று உணர முடியாமல் உள்ளது இதில் யார் தவறும் கிடையாது எனவே இந்த தொகுப்பின் முடிவினிலே இப்பேற்பட்ட குருவினை ஒரு தடவையேனும் தரிசித்திட வேண்டும் என எண்ணம் எவர் ஒருவருக்கு உதிக்குமாக இருந்தால் நீங்கள் அறம் சார்ந்த வாழ்க்கைக்கு தயாராகி விட்டீர்கள் என்றே அர்த்தம் எனவே இப்பேற்பட்ட ஞான குருவின் திருவடியினை சரணடைவோமாக ஏனெனில் ஞானிகள் மதம்,இனம்,மொழி இவைகளுக்கு அப்பாற்பட்ட ஆன்ம சொரூபிகள் அவர்கள் பார்வையில் நாம் அனைவரும் ஆன்மாக்களே.

"வாழ்க வளமுடனும் நலமுடனும்"

No comments

Powered by Blogger.