உயிர் நீத்த எம் உறவுகளை அமைதியான முறையில் அஞ்சலிப்போம்- மாவை சோ.சேனாதிராசா.

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த எம் உறவுகள் அனைவரதும் ஆத்மாக்கள் சாந்தியடையட்டும். அமைதியான முறையில் அவர்களுக்காய் அஞ்சலிப்போம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமைதியுடன் நடைபெறட்டும் இலங்கையில் தமிழ் மக்கள் கடந்த 70ஆண்டுகளில் தமிழின விடுதலைக்காக, தமிழர் இன அழிவிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காக, தமிழர் தம்மைத் தாமே ஆளும் உரிமையை நிலைநாட்டுவதற்காக ஜனநாயக வழிகளில், ஆயுதப் போர் வழிகளில் தம்மை அர்ப்பணித்து வந்துள்ளனர். இலட்சக்கணக்கான உயிர்களை இனக்கலவரங்களிலும், போர்க் களத்திலும் பலி கொடுத்துள்ளனர். இன்னும் விடிவின்றிப் போராடுகின்றனர்.

தமிழின விடுதலைப் போராட்டக் காலத்திலும் போரின் காலத்தின் எல்லையிலும் உயிர்களை அர்ப்பணித்தவர்களினதும், கொல்லப்பட்டவர்களினதும் ஆத்ம சாந்திக்காக நெஞ்சுருக கூருவதும், பிரார்த்தனை செய்வதும் ஈமக்கடன் இயற்றுவதும் தமிழ் மானிடத்தின் மாண்புகளாகும். தமிழர் பாரம்பரியமாகும். தமிழ் மக்கள் நாகரிகமாகும்.

2009 காலத்தில் போர்க்களத்திலும் பாதுகாப்பான இடங்களுக்கு அரசு வாருங்கள் என அழைத்த இடங்களிலும், மருத்துவ மனைகளிலும், பதுங்கு குழிகளிலும் போரில் பாவிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்ட ஆயுதங்கள் குண்டுகள் பாவிக்கப்பட்டதனால் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியிடப்பட்டன என்ற செய்திகள் உள்ளன.

போரில் சரணடைந்தவர்கள், உறவுகளால் அரசிடம், இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகள் காணாமலாக்கப்பட்டனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நாள்தோறும், வாழ்நாள் முழுவதும் கண்ணீரும் கம்பலையுமாய் அவலத்திலும் துயரத்திலும் வீழ்ந்து கிடக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட அந்த உறவுகள் ஆண்டு தோறும் குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டு நாட்களில், கிழமைகளில் அந்த உயிர்களுக்காக, ஆத்மாக்களுக்காக நெஞ்சுருகி நினைவு கூர்ந்து, கண்ணீர் விட்டுக் கதறியழுது ஆறாத்துயரில் ஆறுதல்படும் நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனர். அந்த இரு நாட்கள் கார்த்திகை 27 வரையிலும், முள்ளிவாய்காலில் மே திங்கள் 18 வரையிலும் இடம்பெறுகின்றன.

பண்டைத் தமிழர்கள் உயிரிழந்தோர் உடல்களைத் தாழியிலிட்டு நிலத்தில் புதைத்தனர். அத்தாழிகளில் ஆன்ம நம்பிக்கையுடையோர் வழிபட்ட தெய்வச்சிலைகளை வைத்தும், உயிர் உயிர் பிரிந்த நாளில் நினைவு கூர்ந்து, பிரார்த்தனை முதலான வழிபாடியற்றியும் கடல், நீர் நிலைகளில் ஈமக் கடனியற்றியும், கோவில்களிலும் இந்நாளில் துயிலும் இல்லங்களிலும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி ஆறுதல் அடைவதும் தமிழர் பண்பாடு நாகரிகம் மரபாக, பாரம்பரியமாக மக்களில் போற்றப்பட்டு வருகிறது. இப் பாரம்பரியம் பேணப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும்.

2015 கால வரையில் மக்களின் இப்பாரம்பரியத்தைத் துயிலும் இல்லங்களில் ஒன்று கூடி உறவுகளுக்கு அஞ்சலி செய்வதை அரசு, இராணுவம் அனுமதிக்கவில்லை . 2015ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின் அப்போதைய ஜனாதிபதியும் இராணுவத்தினரும் துயிலும் இல்லங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளை அனுமதித்து வந்திருக்கிறார்கள். மக்களும் உறவுகளும் தாம் விரும்பிய இடங்களில் வீடுகளில், கோவில்களில், புனித நீர்நிலைகளில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளில் ஈமக்கடனியற்றுவதில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந் நிலைமைகள் தொடரும் என நம்புகிறோம். இந் நிகழ்வுகளில் அரசியல் நலன்களுக்கு இடமில்லை . அரசினதோ , பாதுகாப்புத் தரப்பினரின் தலையீடோ, தடைகளோ இடம்பெறாமலிருக்கவேண்டும்.

2019 நவம்பரிலும் ஏற்பட்ட புதிய அரசுச் சூழலில் உறவுகளையிழந்த மக்களின் உறவுகள் அச்சமின்றி ஆறுதலுடன் தம் கடனை, அஞ்சலியை செலுத்தி ஆறுதல் பெறுவது மக்களின் அந்த புனித ஆன்ம உரிமை, கடமை பாதுகாக்கப்படும் என நம்புகிறோம். என்றுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post