"டெங்கினை இல்லாது செய்வோம்" கிழக்குப் பல்கலைக்கழக பழைய மாணவர்களின் மற்றுமொரு முயற்சி!!

இன்று இலங்கை முழுவதும் ஆபத்தான பேசுபொருளாலாக இருப்பது ஆட்கொல்லி நோயாக அடையாளங்காணப்பட்ட 'டெங்கு நோய் தொற்று' பற்றிய பேச்சாகும். 2018 சென்ற வருடத்தின் 12 மாதங்களிலும்; சேர்த்து 51,659 சந்தேகப்படும் டெங்கு நோய்களும், தீவு பூராகவுமுள்ள எல்லா நோய்பரவுகை கட்டுப்பாட்டியல் அலகிற்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடத்தின் நொவம்பர் மாதத்தில் மாத்திரம் 73601 சந்தேகப்படும் டெங்கு நோயாளிகள் அடையாளங் காணப்பட்டிருப்பது மிகப்பெரிய ஆபத்தாக பதிவாகியுள்ளது.

இந்த ஆபத்து மட்டக்களப்பு மற்று கிழக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. பருவகால மழை ஆரம்பித்துள்ள இந்த வேளையில் இதன் பரவல் தீவிரமடைந்து வருகின்றது என அறிக்கை தெரிவிக்கின்றது. 

இச்சூழலில் நாம் அனைவரும் 'ஒன்றிணைந்து செயலாற்ற' வேண்டிய தருணம் வந்துள்ளது. அதற்காக முதல் கட்டமாக கிழக்குப் பல்கலைக்கழக பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து 22.11.2019 அன்று சில முன்னெடுப்புகளை முதற்கட்டமாக அதிகம் பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆரம்பித்து வைத்துள்ளோம்.

மாணவர்களிடையே விழிப்பினை ஏற்படுத்துவதன் மூலமாக முழுச் சமுகத்துக்கும் இந்த விழிப்பூட்டல் செய்தியினை கொண்டு சேர்க்கும் ஒரு நல்ல நோக்கத்தினை மனதில்கொண்டு, பழுகாமம், திக்கோடை, தும்பங்கேணி மற்றும் முனைத்தீவு பாடசாலை மாணவர்களிடையே முதற்கட்டமாகவும் இரண்டாம் கட்டமாக கரடியனாறு பிரதேச பாடசாலை மாணவர்களிடையேயும் இச்செயற்திட்டம் ஆசிரியர்கள், அதிபர்கள் உதவியுடன் முன்னெடுத்து உதவியமை குறிப்பிடத்தக்கதாகும். அங்கே டெங்கு நோயில் இருந்து விடுபடுவதற்கான தகவல் அடங்கிய அச்சிடப்பட்ட துண்டுப்பிரசும் வழங்கி வைக்கப்பட்டது.

இச்செயற்திட்டத்துக்கு தொண்டாண்மை அடிப்படையில் இணைந்து உதவ முன்வந்த அனைத்து கி.ப.கழக பழைய மாணவர்களுக்கும மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

டெங்கு... இலங்கையில் அதன் தாக்கமும், அதுபற்றிய பீதியும் மக்களை நிறையவே அச்சுறுத்தி வருகின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கிடையே, ஒவ்வொரு நாளும் டெங்கு பற்றிய உயிரிழப்புச் செய்திகளுக்கும் பஞ்சமில்லை. உயிரிழப்பைத் தடுக்க சுகாதாரத் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் அறிகின்றோம்.

டெங்கு என்பது ஒரு வகையான வைரஸால் ஏற்படும் காய்ச்சல். இந்த டெங்கு வைரஸ் டென்-1 ((DENV-1), டென்-2 ((DENV-2), டென்-3 ((DENV-3), டென்-4 ((DENV-4) என வகைப்படுத்தப்படுகிறது. இந்த வைரஸ், நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய 'ஏடிஸ்' என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது.

எமது பகுதிகளைப் பொறுத்தவரை, வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பிளாஸ்டிக் பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள், மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாக கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் ஏடிஎஸ் கொசுக்கள் முட்டையிட்டு, அது புழுவாக மாறி வளர்ந்து, கொசுவாக உருவாகிறது. இது, டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு டெங்கு பரவுகிறது.

ஏடிஎஸ் கொசுக்கள் மூன்று வாரங்களுக்குமேல் உயிர்வாழும். இந்தக் கொசுக்கள் பகல் நேரங்களில் மட்டுமே கடிக்கின்றன. உடல் மற்றும் கால்களில் கறுப்பு மற்றும் வெள்ளைநிறப் புள்ளிகள் கொண்ட உடலமைப்பைக் கொண்டுள்ளதால், இவை 'புலிக்கொசுக்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.

'டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் ஏடிஎஸ்' கொசுக்கள் நல்ல தண்ணீரில் வளரும்; அவை பகலில் கடிக்கும் தன்மைகொண்டவை என அவற்றின் வாழ்க்கைமுறை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்தத் தரவுகளின் அடிப்படையில் இதுதான் உண்மை. ஆகவே, பொதுமக்கள் மற்றவர்கள் கூறுவதைக் கேட்டு குழம்பிக்கொள்ளத் தேவையில்லை.

பிற காய்ச்சல்களிலிருந்து டெங்குக் காய்ச்சலை எப்படி அடையாளம் காண்பது, காய்ச்சல் வந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?

'காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்பு வலி ஆகியவை டெங்குக் காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும். காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். ஒரு மருத்துவரால் மட்டுமே தேவையான மருத்துவப் பரிசோதனை செய்து இது டெங்குக் காய்ச்சலா அல்லது மழைக்காலத்தில் ஏற்படும் சளிக் காய்ச்சல் மற்றும் இதர டைபாய்டு, லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் இதர வகையான காய்ச்சலா என்பதை கண்டறிந்து உரிய சிகிக்சை அளிக்க முடியும்.

'டெங்கு தடுப்பில் பொதுமக்களின் பங்களிப்பாக நாம் எதை எதிர்பார்கின்றோம்?

பொதுமக்கள் தங்கள் வீட்டில் ஏடிஎஸ்' கொசு உருவாகும் தேவையற்ற பொருள்களான பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் ஓடுகள், உடைந்த வாளி, டயர்கள் ஆகியவற்றை அகற்றி உதவ வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடரைக் கொண்டு நன்றாகத் தேய்த்துக் கழுவி, கொசு புகாதவாறு மூடிவைக்க வேண்டும். பகல் நேரத்திலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைக்க வேண்டும்.

காய்ச்சல் குறைந்த பின்னரும்கூட நீர்ச்சத்துக் குறைவு மற்றும் இதர பிரச்னைகளால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மூன்று நாள்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்கவில்லை என்றாலோ, சோர்வாக இருந்தாலோ மீண்டும் மருத்துவரை அணுக வேண்டும். போதிய நீர் மற்றும் திரவ உணவுகளை அருந்த வேண்டும்.

இவற்றைச் செய்வதன் மூலம் ஏடிஎஸ் கொசுக்கள் வளர்வதைத் தடுத்தும், டெங்குக் காய்ச்சல் வராமலும் அரசுடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். எமது அரசு முழுமுனைப்புடன் செயல்படுத்திவரும் பன்முகத் தொடர் நடவடிக்கைகளில் அனைவரும் பங்கெடுத்து டெங்கு இல்லாத நாட்டை உருவாக்குவது அனைத்து மக்களின் சமூகக் கடமை. இந்தப் பணியில் அனைவரும் தமது பங்கை உணர்ந்து செயல்பட்டால் நோய்த் தடுப்பு நடவடிக்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்த இயலும்.
என்ற விழிப்பு எம்மக்களிடையே சென்றடையவேண்டும் என எதிர்பார்ப்பதுடன் அனைவரும் ஒன்றிணைந்து இந்த செயற்பாட்டில் வெற்றிபெற்று எமது மக்களை நோய்பீடிக்காமல் காப்பாற்றி நாட்டின் பொருளாதாரத்துக்கும், சுகாதாரத்துக்கும் உதவுவோம் என அழைப்பு விடுக்கின்றோம்.

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.'
செல்வோம் வெல்வோம்
வெள்ளிச்சரம் இணையத்தளத்திலிருந்து தகவல்களை மாருதம் இணையத்தளத்திற்கு பரிமாறிக் கொண்டோம்👇👇👇

0/Post a Comment/Comments

Previous Post Next Post