தமிழில் உன்னத நடிகராக உலாவந்த திரை நட்சத்திரம் நடிகர் பாலா சிங் காலமானார்!!

மேடை நாடகக் கலைஞராகத் தன் வாழ்வைத் தொடங்கி, பின்னர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக உயர்ந்தவர் பாலா சிங். 1952-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் கேரள எல்லையில் அமைந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த களியக்காவிளை என்ற ஊரில் பிறந்த இவர், நடிப்பின் மீது கொண்ட அதீத ஆர்வத்தால் தன் கல்லூரிக் காலத்திலேயே மேடை ஏறி நடிக்கத் தொடங்கினார். பின்னர், நடிப்புத் தாகம் இன்னும் அதிகமாக சென்னைக்கு ரயில் ஏறிய இவர், தேசிய நாடக பள்ளியில் சேர்ந்து முறையான நடிப்பைக் கற்றுக்கொண்டார். தொடர்ந்து பல்வேறு மேடை நாடகங்களில் நடிப்பதையே தன் தொழிலாக மாற்றிக்கொண்டார்.

1983-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மலைமுகலிலே தெய்வம் என்ற படம்தான் பாலா சிங்குக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியது. அதில் சிறிய வேடத்தில் நடித்திருந்த அவர், பின்னர் தொடர்ந்து சில மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் சில காலம் யூகி சேதுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அப்போதுதான் நடிகர் நாசரின் நட்பு கிடைத்துள்ளது. நாசர் இயக்கத்தில் வெளியான அவதாரம் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கால்பதித்தார். இதைத் தொடர்ந்து உல்லாசம், இந்தியன், ராசி, புதுப்பேட்டை, விருமாண்டி உட்பட நூற்றுக்கணக்கான படங்களில் குணச்சித்திர வேடத்திலும் வில்லன் வேடத்திலும் நடித்து தமிழக மக்களிடையே பிரபலமாக விளங்கி வந்தார்.

சமீபத்தில் இவர் நடித்திருந்த என்.ஜி.கே, மகாமுனி போன்ற படங்களிலும் இவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்நிலையில் 67 வயதான பாலா சிங் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.

ராசி அழகப்பன் இயக்கத்தில் இவர் பிரதான பாத்திரத்தில் தாத்தாவாக நடித்த பட்டாம்பூச்சி இவர் நடிப்புக்கு ஒரு மைல்கல்லாக விளங்கியது. பேரப்பிள்ளை மீது பாசம் காட்டும் பாத்திரத்தில் இந்தப் படத்தில் நம் கண்களை குளமாக்கும் அளவிற்கு அற்புதமான நடிப்பை இவர் வழங்கியிருக்கிறார்.

பிறந்தது முதல் நடிக்க வரும் வரை வறுமையோடு போராட்டம் நடத்தி வந்தவர் இவர். இதைப்பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்...

"கன்னியகுமரி பக்கத்துல ஒரு சின்ன ஊர்ல பிறந்தவன் நான். எங்க ஊர் ஒரு பொட்டல் காடு. ஸ்கூலுக்கு தினமும் 10 கிலோ மீட்டர் நடந்துபோவேன். பிறகு, காலேஜுக்கும் நடந்தேன்..."

மக்கள் மனங்களில் அழியாத தடம் பதித்து மறைந்திருக்கும் பாலாசிங் என்றென்றும் உயிர்ப்போடு உலா வருவார் தமிழ்த் திரையுலகம் இருக்கும் வரை!

0/Post a Comment/Comments

Previous Post Next Post