தமிழ் பெயர்ப்பலகை சேதப்படுத்தியமை தொடர்பாக கடுமையான நடவடிக்கைக்கு உத்தரவு!!

பாதைகளின் பெயர்கள் பொறிக்கப்பட்ட மும்மொழிகளில் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழி பெயர்ப்பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

முதலில் பாணந்துறை பிரதேசத்திலுள்ள சுசந்த மாவத்தை எனும் வீதியின் தமிழ்ப் பெயர்ப் பலகை அண்மையில் சேதப்படுத்தப்பட்டிருந்தது, இது சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டிருந்தது.

இந்நிலையில் கெரவலப்பிட்டிய வீதி, வூட்லண்ட் வீதி உள்ளிட்ட வீதிகளின் தமிழ் பெயர்ப் பலகைகளும் அடையாளம் தெரியாத நபர்களால். இவ்வாறு சேதப்படுத்தட்டிருந்தன.

அதற்கமைய, அமைதி, நல்லிணக்கத்தை பாதுகாக்கும் பொருட்டு இவ்வாறான நடவடிக்கைகளை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இன்று (25) பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, நடமாடும் கண்காணிப்பு, மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் அவ்வாறான நடவடிக்கைகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் இதன்போது ஆலோசனை வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன் இவ்வாறான முறைப்பாடுகள் வரும்போது அதனை உரிய பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணைக்குட்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் இதன்போது ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பாணந்துறையிலுள்ள சுசந்த மாவத்தை வீதியின் தமிழ் பெயர்ப்பலகை நேற்றையதினம் (24) தயார் செய்யப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.