பற்றைகள் தீப்பிடிப்பது பற்றி அவுஸ்திரேலியாவில் புதிய எச்சரிக்கைகள்;நால்வர் பலி!!
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மற்றும் நியூசௌத் வேல்ஸ் மாநிலங்களில் பற்றைத் தீ குறித்து புதிய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
சிட்னியைத் தலைநகராகக் கொண்ட நியூசௌத் வேல்ஸ் மாநிலத்திலும் பிரிஸ்பேனைத் தலைநகராகக் கொண்ட குயின்ஸ்லாந்து மாநிலத்திலும் பல இடங்களில் பற்றைத தீ பரவி வருகிறது.
அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரான சிட்னியின் புறநகர் பகுதிவரை பற்றைத் தீ பரவியுள்ளது. மேற்படி இரு மாநிலங்களிலும் சுமார் 150 தீப்பரவல்கள் தொடர்ந்து கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இக்காட்டுத் தீயினால் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீயினால் நியூசௌத் வேல்ஸ் மாநிலத்தில் சுமார் 50 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 70 இடங்களில் நேற்று தீ பரவிக்கொண்டிருந்தது.
வரட்சி மற்றும் கடுமையான காற்று காரணமாக பற்றைத் தீ கடுமையாக பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஹெலிகொப்டர் வீழ்ந்தது குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிரிஸ்பேன் நகருக்கு மேற்கே தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானது. எனினும், அதன் விமானி சிறு காயங்களுடன் உயிர்தப்பினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments