அதாவுல்லாவை வண்மையாக கண்டிக்கின்றேன்-இராதாகிருஸ்ணன்

நேற்றைய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

நேற்று (24.11.2019) முன்தினம் மாலை ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா எங்களுடைய மலையக சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கூறப்பட்ட அந்த கருத்தை நான் வண்மையாக கண்டிக்கின்றேன்.அவர் அதனை வாபஸ் பெற வேண்டும் இல்லாவிட்டால் மலையக மக்கள் இதனை பார்த்து பொருத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

ஒரு ஊடகத்தில் விவாதங்களை முன்வைக்கின்ற பொழுது நாகரீகமாகவும் ஏனையவர்களின் மனதை புன்படாத வகையிலும் வார்த்தைகளை மிகவும் கவனமான வெளிப்படுத்த வேண்டும்.அந்த வகையில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லவின் கருத்து எங்களுடைய மலையக சமூகத்தை சர்வதேச மட்டத்தில் கொச்சைப்படுத்துகின்ற வகையில் அமைந்திருக்கின்றது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

அவரும் இந்த நாட்டில் ஒரு சிறுபான்மை இனம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.அவருடைய கருத்து அல்லது அந்த வார்த்தை பிரயோகமானது எங்களுடைய மலையக மக்களையும் இளைஞர்களையும் கோபமடையக் கூடியவகையில் அமைந்திருக்கின்றது.கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் எற்பட்ட பொழுது அவர்களுக்காக துணிந்து குரல் கொடுத்தவன் நானும் எனது தமிழ் முற்போக்கு கூட்டணியும்.அதற்கு காரணம் இந்த நாட்டில் சிறுபான்மை மக்களாகிய நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே.

அதாவுல்லா தெரிவித்த கருத்தானது ஒரு பிரசித்தமான ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அந்த நிகழ்ச்சியை தொகுத்தளித்த அந்த குறித்த ஊடகவியலாளர் அந்த கருத்திற்கு எதிராக தன்னுடைய வாதத்தை முன்வைத்ததை நான் ஒரு மலையக தமிழனாக அவரை பாராட்டுகின்றேன்.

மலையக மக்களைப்பற்றி பேசுவதற்கு அதாவுல்லாவிற்கு என்ன தகுதி இருக்கின்றது.அவர் இந்த மக்களுக்காக என்ன செய்திருக்கின்றார்.அவர் அமைச்சராக இருந்த பொழுது என்ன செய்தார் எங்கள் மக்களுக்காக ஆனால் நான் அமைச்சராக இருந்த பொழுது எத்தனை முஸ்லிம் பாடசாலைகள் எத்தனை பாதை அபிவிருத்திகள் முஸ்லிம் மக்கள் வாழுகின்ற பகுதியில் செய்திருக்கின்றேன். 

ஒரு முன்னாள் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கூட என்னுடைய செயற்பாடுகளை பாராட்டியிருந்தார்.நாங்கள் அப்படித்தான் வேலை செய்கின்றோம்.நான் அனைத்து முஸ்லிம் மக்களையும் குறை சொல்ல மாட்டேன்.என்னுடைய கண்டனம் எல்லாமே முன்னால் அமைச்சர் அதாவுல்லா மீதே என்பதை எங்களுடைய முஸ்லிம் சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த புதிய ஜனாதிபதிக்கும் புதிய அரசாங்கத்திற்கும் ஒத்துழைப்பு வழங்குகின்ற அதாவுல்லா அவர்களுக்கும் அவப் பெயரை கொண்டுவந்து விட்டார்.எனவே இவ்வாறானவர்களின் கருத்துக்களை அரசாங்கம் அனுமதிக்க கூடாது.

மலையக மக்களை தயவு செய்து சீன்டிப்பார்க்க வேண்டாம்.அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள்.நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக இந்த நாட்டிற்காக உழைத்தவர்கள்.எனவே அவர்களை கொச்சைப்படுத்த விட முடியாது.

அதற்காக நாங்கள் எங்களுடைய கட்சி பேதங்களை மறந்து ஒன்றாக செயற்படவும் தயாராக இருக்கின்றோம்.எனவே முன்னால் அமைச்சர் அதாவுல்லா உடனடியாக தன்னுடைய கருத்தை வாபஸ் பெற வேண்டும்.

அவருக்கு எதிராக எங்களுடைய மக்கள் நாளைக்கு பாதைக்கு இறங்கினால் அதற்கு பொறுப்பானவர்கள் நாங்கள் அல்ல என்பதையும் இந்த நேரத்தில் கூறி வைக்க விரும்புகின்றேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post