இரத்த உறவுகளை கேவலப்படுத்திய அதாவுல்லா அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்; கோடீஸ்வரன் எம்.பி. கடும் சீற்றம்!!
எமது இரத்த உறவுகளைக் கேவலமான வார்த்தைப் பிரயோகத்தால் அதாவுல்லா கொச்சைப்படுத்தியதை மிகவும் வன்மையாக அம்பாறை தமிழ் மக்கள் சார்பில் கண்டிக்கின்றேன். இவர் மலையக மக்களிடத்தே பகிரங்கமாக பொதுமன்னிப்பு கோரவேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்.
நேற்று சக்தி தெலைக்காட்சியில் நடைபெற்ற மின்னல் நிகழ்வில் அமைச்சர் மனோகணேசன் மீது தகாத வார்த்தைப் பிரயோகத்தை அதாவுல்லா வெளிப்படுத்தியிருந்தார். இதுதொடர்பில் ‘புதிய சுதந்திரன்’ ஊடகத்துக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே கவீந்திரன் கோடீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
நேற்றைய தினம் சக்தி ரி.வியினரால் நடத்தப்பட்ட மின்னல் நிகழ்ச்சியிலே, மலையக மக்களை அவமானப்படுத்தும் முறையிலே முன்னாள் அமைச்சரும் மஹிந்த அரசுடன் இணைந்து பங்காளியாகச் செயற்படுகின்ற அதாவுல்லா, தனது வார்த்தைப் பிரயோகத்தை அந்த இடத்திலே கூறியிருந்தமை மிகவும் கவலைக்குரியதும் வேதனைக்குரியதுமாக அமைந்துள்ளது. இதனை அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் சார்பாகக் கண்டிக்கின்றோம்.
அதாவுள்ளா அந்த மக்களை இழிவுபடுத்திய வார்த்தைஎங்கள் மக்கள் மத்தியில் கவலையையும் வேதனையையும் அளித்திருக்கும் ஒன்றாக இருக்கின்றது.
மலையகத் தமிழ் மக்கள் எங்கள் இரத்த உறவுகள். அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள். இந்த நாட்டின் முதுகெலும்பாக இருந்து செயற்படுகின்றவர்கள். அவர்கள் பழைமைபொருந்திய செம்மொழியைக் கற்றிருக்கின்ற பிரஜைகளாக இந்த நாட்டில் வாழ்பவர்கள். அவர்களைக் கேவலப்படுத்திக் கூறிய வார்த்தையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
கடந்த காலங்களிலும் அதாவுல்லா தமிழ் மக்கள் மீது வன்மையான வார்த்தைப் பிரயோகங்களைக் கட்டவிழ்த்து விட்டிருந்தார். அவர் இனவாதமான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அவரது இனவாதச் செயற்பாடுகள் இன்று மட்டுமல்ல பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விடயத்தைத் தமிழ் மக்கள் சார்பாகக் கண்டிப்பதுடன், அவர் பகிரங்கமாக இந்த நாட்டு மக்களிடம், விசேடமாக மலைநாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும். அவர் சர்வதேசத்திடம் மன்னிப்புக் கோரவேண்டும். இவரின் இந்த கேவலமான செயற்பாடு இனிவருங்காலங்களில் முன்னெடுக்கப்படக்கூடாது. இவரது இனவாதச் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அந்த அரசில் அங்கத்துவம் பெற்றிருக்கின்ற இவரின் செயற்பாட்டை இந்த அரசு உடனடியாக நிறுத்தவேண்டும்.
தென்னிலங்கையின் பல இடங்களிலும் வீதிகளுக்கு இடப்பட்ட பெயர்ப் பலகைகளில் தமிழில் எழுதப்பட்ட பதாகைகள் தகர்த்து எறியப்பட்டுக் காணப்படுகின்றன. இதனை இந்த அரசு கடனடியாக நிறுத்தவேண்டும்.
கடந்த அரசுக் காலத்திலே இப்படியான செயற்பாடுகள் நடைபெற்றமை மிகமிகக் குறைவாகக் காணப்பட்டது. இந்த அரசு பதவியேற்று ஒருசில நாள்களிலே இனவாதச் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இவை உடனடியாக நிறுத்தப்படவேண்டும். அதாவுல்லா மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் – என்றார்.
- அம்பாறை மாட்ட விசேட நிருபர் -
No comments